சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியிருந்தது. அதில் குசல் மெண்டிஸ் மற்றும் அசேல குணரத்ன ஆகியோரின் சிறப்பாட்டத்துடன், இலங்கை அணி முதல் நாளினை தம்வசமாக்கியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள், இரண்டு  T-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. பங்களாதேஷின் சுற்றுப் பயணத்தின் ஆரம்ப கட்டமான இன்றைய டெஸ்ட் போட்ட இலங்கை அணியின் டெஸ்ட் கோட்டைகளில் ஒன்றாக கருதப்படும் காலி  மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

நாணய சுழற்சியினை தனதாக்கிக் கொண்ட இலங்கை அணியின் தலைவர் ரங்கன ஹேரத் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்ந்தெடுத்திருந்தார். இப்போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி தமது சொந்த மண்ணில், அவுஸ்திரேலியாவுடனான வைட் வொஷுடன் சேர்த்து இறுதியாக இடம்பெற்ற 5 டெஸ்ட் போட்டிகளையும் வெற்றி கொண்டு சவால் மிக்க அணியாக இருந்தது.

அத்துடன், அண்மைய போட்டிகளில் சிறப்பாட்டத்தினை வெளிக்காண்பித்திருக்கும் முஸ்பிகுர் ரஹீம் தலைமையிலான பங்களாதேஷ் அணியில், கடைசியாக 2015இல் டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடியிருந்த முஸ்தபிசுர் ரஹ்மான் உள்வாங்கப்பட்டிருந்தார்.

திமுத் கருணாரத்ன மற்றும் உப்புல் தரங்க ஆகியோருடன் களம் நுழைந்த இலங்கை அணி, தமது முதலாவது விக்கெட்டினை போட்டி ஆரம்பித்து சிறிது கணத்தில், 15 ஓட்டங்களினைப் பெற்றிருந்த வேளையில் பறிகொடுத்தது. இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக தரங்க, சுபாஷிஸ் ரோய் இன் வேகத்திற்கு இரையாகி போல்ட் செய்யப்பட்டு வெறும் 4 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து புதிதாக களம் நுழைந்த குசல் மெண்டிசுடன், சேர்த்து அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்த திமுத் கருணாரத்ன ஓரளவு பாடுபட்டார். எனினும், மதிய போசண இடைவேளைக்கு சற்று முன்னர், மெஹதி ஹஸனின் சுழலில் அவரும் 30 ஓட்டங்களுடன் வீழ, பெரிதொரு இணைப்பாட்டத்திற்கு இருவரும் வித்திடுவார்கள் எனும் எதிர்பார்ப்பு வீணானது.

பின்னர், களத்திற்கு வந்த தினேஷ் சந்திமால் நீண்ட நேரத்திற்கு மைதானத்தில் நின்றிருப்பினும் பெரிதாக பிரகாசித்திருக்கவில்லை. சந்திமாலின் விக்கெட்டினைத் தொடர்ந்து, களம் நுழைந்த அசேல குணரத்ன, குசல் மெண்டிசுடன் சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்காக இன்றைய நாளின் மூன்றாம் பகுதி வரை களத்தில் நின்று 196 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பகிர்ந்து அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த பாரிய பங்களிப்பினைத் தந்திருந்தார்.

நான்காவது விக்கெட்டுக்காக குசல் மெண்டிஸ் மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் இன்று பெற்றுக் கொண்ட இணைப்பாட்டமானது பங்களாதேஷ் அணிக்கெதிராக இலங்கை வீரர்கள் 4 ஆவது விக்கெட்டுக்காக பெற்றுக் கொண்ட அதிகூடிய இணைப்பாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் நான்காவது விக்கெட்டாக, 80ஆவது ஓவரின் பின்னர் எடுக்கப்பட்ட புதிய பந்தில் பறிபோன அசேல குணரத்ன, மொத்தமாக 7 பவுண்டரிகள் உள்ளடங்களாக 85 ஓட்டங்களினை குவித்து தனது மற்றுமொரு சிறப்பாட்டத்தினை பதிவிட்டு இருந்தார்.

எனினும், குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அபார சதத்தின் காரணமாக, இன்றைய நாளின் முடிவில் 88 ஓவர்கள் நிறைவிற்கு இலங்கை அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களினைப் பெற்று வலுப்பெற்றது.

இன்றைய நாளின், இறுதி வரை ஆட்டமிழக்காது நின்றிருந்த குசல் மெண்டிஸ், மொத்தமாக 242 பந்துகளினை சந்தித்து இரு சிக்ஸர்கள் மற்றும் 18 பவுண்டரிகள் உள்ளடங்களாக 166 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சில், இன்று பறிபோன நான்கு விக்கெட்டுகளையும் ஆளுக்கு ஒவ்வொன்றாக, முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அஹமட், சுபாஷிஸ் ரோய் மற்றும் மெஹதி ஹஸன் மிராஸ் ஆகியோர் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்