பார்சிலோனாவில் இருந்து பயேர்ன் செல்கிறார் கோட்டின்ஹோ

154
FCB/FC Bayern München AG/dpa

பார்சிலோனா மத்தியகள வீரர் பிலிப்பே கோட்டின்ஹோ இந்தப் பருவத்திற்காக புண்டஸ்லிகா சம்பியன் பயேர்ன் முனிச்சுடன் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை இரு கழகங்களும் இன்று (19) உறுதி செய்தன. 

இதற்காக பயேர்ன் இரவல் கட்டணமாக 8.5 மில்லியன் யூரோக்கள் மற்றும் வீரரின் ஊதியங்களையும் செலுத்தவுள்ளது. அதேபோன்று 120 மில்லியன் யூரோ கட்டணத்திற்காக நிரந்தர உடன்படிக்கை ஒன்றை செய்தவதற்கான தேர்வையும் அந்தக் கழகம் வழங்கியுள்ளது.  

அண்ணளவாக 142 மில்லியன் பௌண்ட்களுக்காக கடந்த ஆண்டு ஜனவரியில் பார்சிலோனா அணியில் கோட்டின்ஹோ இணைந்தார். அது மூன்றாவது அதிக விலை உயர்ந்த வீரர் பரிமாற்றமாக இருந்தபோதும் அவர் லிவர்பூலில் காட்டிய திறமையை பார்சிலோனாவுக்காக வெளிப்படுத்தத்  தவறினார். 

அந்த அணிக்காக 76 போட்டிகளில் விளையாடி இருக்கும் கோட்டின்ஹோ 21 கோல்களை பெற்றுள்ளார்.  

ப்ரீமியர் லீக்கில் முதல் வெற்றிக்காக போராடும் செல்சி

2019/20 பருவத்திற்காக ஜெர்மனி கழகத்திற்கு பிலிப்பே கோட்டின்ஹோவை இரவல் வீரராக இணைப்பதற்கு பார்சிலோனா மற்றும் பயேர்ன் முனிச் அணிகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டது என்று பார்சிலோனா வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  

பிலிப்பே கோட்டின்ஹோவின் அர்ப்பணிப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்காக பார்சிலோனா வெளிப்படையாக நன்றி கூற விரும்புவதோடு அவரது கால்பந்து வாழ்வின் புதிய பயணத்திற்கு வாழ்த்துத் தெரிவிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது. 

கோட்டின்ஹோ தனது புதிய அணியில் 10 ஆம் இலக்க டீ சேர்ட்டை (T shirt) அணியவுள்ளார். கடந்த பருவத்துடன் ஓய்வுபெற்ற நெதர்லாந்து வீரர் அர்ஜென் ரொப்பன் இதற்கு முன்னர் அந்த இலக்கத்தை பயன்படுத்தியிருந்தார்.   

பிலிப்பே கோட்டின்ஹோவை எமது கழகத்துக்கு கொண்டுவர சில காலமாக நாம் செயற்பட்டு வந்தோம். இந்த பரிமாற்றத்தை பூர்த்தி செய்ய முடிந்தது குறித்து நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்று பயேர்ன் முனிச் தலைமை நிர்வாக அதிகாரி கார்ல்-ஹெய்ன்ஸ் ருமனிக் குறிப்பிட்டார். 

இந்த உடன்படிக்கைக்கு இணங்கியதற்கு பார்சிலோனாவுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது திறன்களுடன் எமது தாக்குதல் ஆட்டத்திற்கு உடன் வலுச்சேர்ப்பும் ஒரு வீரராக பிலிப்பே உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இம்முறை பருவத்தில் பயேர்ன் முனிச் கடந்த வார இறுதியில் நடந்த ஹெர்தா பெர்லின் அணியுடனான தனது முதல் போட்டியை 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலை செய்தது.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<