ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை அணி

211
Sri Lanka vs Philipines

ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் போட்டிகளின் முதற்கட்டப் போட்டிகள் இன்று மலேசியாவில் ஆரம்பமாகின. பிலிப்பைன்ஸ் அணியுடனான போட்டியில் முதல் பாதியை 11-00 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்ற  இலங்கை அணியானது, போட்டி முடிவின் போது 24-13 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை உறுதி செய்துகொண்டது.

திறமைகளை வெளிக்காட்டவிருக்கும் இலங்கை ரக்பி அணியின் அறிமுக வீரர்கள்

போட்டியின் முதல் சில நிமிடங்களில் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்திய பொழுதும், அதிகமாக பெனால்டி வாய்ப்புகளை எதிரணிக்கு வழங்கியது. பிலிப்பைன்ஸ் அணியும் தனது பலமிக்க வீரர்களால் அழுத்தம் கொடுத்த பொழுதும், இலங்கை அணி வீரர்கள் அவர்களை சிறப்பாகத் தடுத்தனர். கண்டி விளையாட்டுக் கழக வீரரான திலின விஜேசிங்க, பெனால்டி மூலம் இலங்கை அணிக்கு 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (இலங்கை 03-00 பிலிப்பைன்ஸ்)

14ஆவது நிமிடத்தில் ரிச்சர்ட் தர்மபால எதிரணியின் 22 மீட்டர் எல்லையினுள் பந்தை உதைந்ததன் மூலம் இலங்கை அணிக்கு ட்ரை வைக்கும் வாய்ப்பு கிடைத்தபோதும் அதனை தவறவிட்டது. எனினும் இலங்கை அணிக்கு முதல் ட்ரை வைப்பதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை. தனுஷ்க ரஞ்சன் இலங்கை அணி சார்பாக முதல் ட்ரை வைத்தார். எனினும் திலின விஜேசிங்க கொன்வெர்சனை தவறவிட்டார். (இலங்கை 08-00 பிலிப்பைன்ஸ்)

அறிமுக வீரரான CR & FC அணியின் தாரிக் ஸாலிஹ் எதிரணி வீரர்களை சிறப்பாகத் தடுத்து விளையாடினார். எனினும் தவறான முறையில் தடுத்ததால் நடுவரால் முதல் முறை அவருக்கு அவவாதம் விடுக்கப்பட்டது. பின்னர் இரண்டாவது முறையும் அதே தவறை செய்ததால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். முதற் பாதி நிறைவடைய சிறிது நேரத்திற்கு முன்னர் திலின விஜேசிங்க மற்றுமொரு பெனால்டி உதையின் மூலம் 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (இலங்கை 11-00 பிலிப்பைன்ஸ்)

3 பெனால்டி உதைகளை தவறவிட்ட பிலிப்பைன்ஸ் அணியானது முதற் பாதியில் புள்ளிகளைப் பெறத் தவறியது.

முதல் பாதி: இலங்கை 11 – 00 பிலிப்பைன்ஸ்

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் இலங்கை அணி தவறுகளை செய்து பிலிப்பைன்ஸ் அணிக்கு வாய்ப்புகளைக் கொடுத்தாலும், பிலிப்பைன்ஸ் அணியினால் அதனை புள்ளிகளாக மாற்றிக்கொள்ள முடியவில்லை. தமது கோட்டைக்குள் திறமையாக பிலிப்பைன்ஸ் அணி வீரர்களை முடக்கிய இலங்கை வீரர்கள், திறமையான விளையாட்டை வெளிப்படுத்தினர்.

பிலிப்பைன்ஸ் அணியானது 60ஆவது நிமிடத்திலேயே பெனால்டி மூலம் தனது முதல் புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது. டயலொக் லீக் போட்டிகளில் தனது திறமையை வெளிக்காட்டிய திலின விஜேசிங்க இன்றும் தனது திறமையை சிறப்பாக வெளிக்காட்டினார். குறுக்காக உதைத்து நிஷோன் பெரேராவிற்கு பந்தை திலின வழங்கினார். பந்தை பெற்றுக்கொண்ட நிஷோன் பெரேரா 30 மீட்டர் ஓடிச் சென்று தலைவர் ரொஷான் வீரரத்னவிற்கு பந்தை வழங்கினார். தொடர்ந்து ஓடி வந்த ரிச்சட் தர்மபால பந்தை பெற்றுக்கொண்டு ட்ரை வைத்தார். திலின கொன்வெர்சனை சிறப்பாக உதைத்தார். (இலங்கை 18-03 பிலிப்பைன்ஸ்)

சம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்புடன் நான்கு அணிகள்

போட்டியின் இறுதி சில நிமிடங்களில் இலங்கை அணியானது மோசமான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் பிலிப்பைன்ஸ் அணியானது 73ஆவது மற்றும் 76ஆவது நிமிடங்களில் தொடர்ந்து இரண்டு ட்ரைகளை வைத்தது. பிலிப்பைன்ஸ் அணி தவறுகள் செய்ததனால், இலங்கை அணிக்கு 2 பெனால்டிகள் கிடைத்தது. இரண்டையும் கம்பத்தின் நடுவே உதைந்த திலின இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார். (இலங்கை 24-13 பிலிப்பைன்ஸ்)

முழு நேரம்: இலங்கை 24 – 13 பிலிப்பைன்ஸ்

போட்டியின் பின்னர் கருத்து தெரிவித்த இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பெரெட்டி வேறெபுலா “நாங்கள் இதைவிட சிறப்பாக விளையாடி இருக்கலாம். எங்களுக்கு பயிற்சி பெறுவதற்கு குறுகிய கால அவகாசமே கிடைத்தது. இன்றைய போட்டியில் செய்த தவறுகளை மீண்டும் ஒரு முறை கண்காணித்து, அடுத்த போட்டிக்கு அதிகம் பயிற்சி பெற்று களத்தில் இறங்குவோம்” எனத் தெரிவித்தார்.

புள்ளிகள் பெற்றோர்

இலங்கை (2T, 1C , 4P)  – தனுஷ்க ரஞ்சன் 1T, ரிச்சர்ட் தர்மபால 1T, திலின விஜேசிங்க 4P1C

பிலிப்பைன்ஸ் (2T ,1P ) – ஜெஸ்டின் கொவெனி 1T, ரிகி குகியா 1T, பெஞ்சமின் மூடி 1P