உலக மெய்வல்லுனர் 100 மீட்டர் தகுதிச் சுற்றில் யுபுனுக்கு ஐந்தாமிடம்

World Athletics Championship 2022

199
Yupun Abeykoon finishes 5th in Heats

அமெரிக்காவில் நடைபெற்று வருகின்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 100 மீட்டர் தகுதிச் சுற்றில் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், 5ஆவது இடத்தைப் பிடித்தார்.

18ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் அமெரிக்காவின் ஒரிகொன் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நேற்று (15) ஆரம்பமாகியது. ஒலிம்பிக்குக்கு அடுத்து உலகில் நடைபெறுகின்ற மிகப்பெரிய மெய்வல்லுனர் போட்டித் தொடராக விளங்குகின்ற இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 192 நாடுகளைச் சேர்ந்த 1,972 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.

இந்த நிலையில், இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் இன்று (15) நடைபெற்றது. 7 சுற்றுக்களைக் கொண்டதாக நடைபெற்ற தகுதிச் சுற்றின் 3ஆவது சுற்றில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் போட்;டியிட்டார்.

அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்களுடன் போட்டியிட்ட யுபுனுக்கு குறித்த போட்டியில் 5ஆவது இடத்தையே பெற்றுக் கொள்ள முடிந்தது.

போட்டியை ஆரம்பிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 10.19 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த அவர், ஐந்தாவது இடத்தைப் பிடித்தைப் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதனிடையே, குறித்த போட்டியை 9.89 செக்கன்களில் நிறைவு செய்த அமெரிக்காவின் ட்ரைவோன் ப்ரூமெல் முதலிடத்தைப் பிடிக்க, ஐவரிகோஸ்ட்டின் ஆர்தர் சீஸ்ஸே (10.02 செக்.) இரண்டாவது இடத்தையும், பிரேசிலின் ரொட்;றிகோ நசிமென்டோ (10.11 செக்.) மூன்றாவது இடத்தையும் பிடித்து நாளை (16) இரவு நடைபெறவுள்ள அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, யுபுனுடன் குறித்த தகுதிச் சுற்றில் பங்குகொண்ட ஆசியாவின் முன்னாள் 100 மீட்டர் சம்பியனான கட்டாரைச் சேர்ந்த பெமி ஒங்குனோட், 10.52 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 7ஆவது இடத்தைப் பிடித்தார்.

அதேபோல, 100 மீட்டரில் ஆசியாவின் அதிவேக வீரராக சீனாவின் சூ பிங்டியான், 2ஆவது தகுதிச் சுற்றில் பங்குகொண்டதுடன், 10.15 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து 5ஆவது இடத்தைப் பிடித்த அவருக்கு அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல் போனது.

இதனிடையே, இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் 4ஆவது தகுதிச் சுற்றில் பங்குகொண்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சானி ப்ரௌன், 9.98 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து முதலிடம் பிடித்தார். இதன்படி, இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் ஆண்களுக்கான 100 மீட்டர் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஒரேயொரு ஆசிய நாட்டு வீரராக அவர் இடம்பிடித்தார்.

இது இவ்வாறிருக்க, போட்டிகளின் முதல் நாளான இன்று (15) மூன்று போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்களுக்கான 20 கிலோ மீட்டர் வேக நடைப் போட்டியில் ஜப்பானின் டொசிகாசு யமனிசியும், பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் வேக நடைப் போட்டியில் பேரு நாட்டின் கிம்பேர்லி கார்சியா லியோனும் தங்கப் பதக்கங்களை சுவீகரிக்க, 4X400 கலப்பு அஞ்சலோட்டத்தில் டொமினிக் குடியரசு தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியது.

இதேவேளை, இலங்கை நேரப்படி இன்று (16) இரவு 11.05 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பெண்களுக்கான 3000 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் நிலானி ரட்நாயக்க பங்குபற்றவுள்ளார்.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<