பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்ட அணிகளுக்கான தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், சூப்பர் 8 சுற்றின் நான்கு போட்டிகளும் தட்டு (Plate) பிரிவிற்கான மூன்று போட்டிகளும் இன்று நிறைவடைந்தன.

சூப்பர் 8 போட்டிகளில் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம், SSC கழகம், NCC கழகம் மற்றும் இராணுவ விளையாட்டுக் கழக அணிகள் வெற்றிகளை சுவீகரித்தன. இதன்படி அனைத்து அணிகளுக்கும் ஒவ்வொரு போட்டிகள் வீதம் எஞ்சியுள்ள நிலையில் சிலாபம் மேரியன்ஸ் அணி புள்ளி அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது.

தட்டு பிரிவிற்கான அனைத்து போட்டிகளும் இன்றுடன் நிறைவடைந்ததுடன், செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் தட்டு பிரிவின் சம்பியனாக முடிசூடிக் கொண்டது.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம் (சூப்பர் 8)

இவ்விரண்டு அணிகள் மோதிக்கொண்ட இப்போட்டி பனாகொட இராணுவப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. தொடக்க வீரர் மதுக லியனபதிரனகே 40 ஓட்டங்கள் குவித்து சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்த போதிலும் பந்துவீச்சில் அசத்திய லஹிரு கமகே 4 விக்கெட்டுகளை வீழ்த்த, சிலாபம் மேரியன்ஸ் 213 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

எவ்வாறாயினும் சிறப்பாக செயற்பட்டு சிலாபம் மேரியன்ஸ் அணியை மீட்டெடுத்த பந்துவீச்சாளர்கள், கொழும்பு கிரிக்கெட் கழகத்தை 190 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினர். பந்துவீச்சில் அரோஷ் ஜனோத மற்றும் மலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியதுடன், துடுப்பாட்டத்தில் தனி ஒருவராக திறமையை வெளிப்படுத்திய மாதவ வர்ணபுர 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

23 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் சச்சித்ர சேரசிங்கவின் அபார இரட்டைச் சதம் மற்றும் விதுர அதிகாரியின் சதத்தின் உதவியுடன் 416 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

சச்சித்ர சேரசிங்க 293 பந்துகளில் 21 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 207 ஓட்டங்களை குவித்ததுடன், மூன்றாவது விக்கெட்டிற்காக விதுர அதிகாரியுடன் 227 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டார். பந்துவீச்சில் கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் அணித்தலைவர் அஷான் ப்ரியஞ்சன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன்படி கொழும்பு கிரிக்கெட் அணிக்கு 485 என்ற பாரிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எவ்வாறாயினும் தனது அசத்தலான சுழற்பந்துவீச்சின் மூலம் அவ்வணியை துவம்சம் செய்த மலிந்த புஷ்பகுமார 7 விக்கெட்டுகளை சுவீகரித்தார். இதன் காரணமாக கொழும்பு கிரிக்கெட் கழகம் வெறும் 118 ஓட்டங்களுக்கே சுருண்டது. மலிந்த புஷ்பகுமார இப்போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றிக் கொண்டார்.

366 ஓட்டங்களினால் அசத்தலான வெற்றியை பெற்றுக் கொண்ட சிலாபம் மேரியன்ஸ் அணி, கொழும்பு கிரிக்கெட் கழகத்தை பின்தள்ளி புள்ளி அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறியது. இத்தோல்வியுடன் கொழும்பு கிரிக்கெட் கழகம் மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 213 (55) – மதுக லியனபதிரனகே 40, லஹிரு கமகே 4/65

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 190 (53.5) – மாதவ வர்ணபுர 71, அரோஷ் ஜனோத 3/19, மலிந்த புஷ்பகுமார 3/51

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 461/9d (124.2) – சச்சித்ர சேரசிங்க 207, விதுர அதிகாரி 101, ருக்ஷான் ஷெஹான் 44, அஷான் ப்ரியஞ்சன் 3/57

கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 118 (27.1) – ரவீன் சேயர் 26, மலிந்த புஷ்பகுமார 7/58

முடிவு: சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 366 ஓட்டங்களினால் வெற்றி.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

  • சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 18.07
  • கொழும்பு கிரிக்கெட் கழகம் – 4.39

SSC கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம் (சூப்பர் 8)

இவ்விரண்டு அணிகள் மோதிக் கொண்ட போட்டி R. பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமானதுடன் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ராகம கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

தனித்து போராடிய அக்ஷு பெர்னாண்டோ 94 ஓட்டங்கள் குவித்த போதிலும் மற்றைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, ராகம அணி 220 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அபாரமாக பந்துவீசிய SSC அணியின் விமுக்தி பெரேரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து களமிறங்கிய SSC அணி கௌஷால் சில்வா, சச்சித்ர சேனநாயக்க மற்றும் கீழ்வரிசை வீரர் தரிந்து ரத்நாயக்கவின் உதவியுடன் 389 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. நேற்றைய தினம் கௌஷால் 74 ஓட்டங்களையும், சச்சித்ர 77 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். இன்று இறுதி விக்கெட்டிற்காக 87 ஓட்டங்களை பகிர்ந்து எதிரணிக்கு எரிச்சலூட்டிய தரிந்து ரத்நாயக்க 66 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

179 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த ராகம கிரிக்கெட் கழகத்தினால் 201 ஓட்டங்களையே பெற முடிந்தது. தொடக்க வீரர் லஹிரு மிலந்த (63) மற்றும் சதுர பீரிஸ் (59) அரைச்சதங்கள் கடந்தனர். SSC அணி சார்பாக பந்துவீச்சில் தனது கைவரிசையை காட்டிய சச்சித்ர சேனநாயக்க 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதன்படி 33 என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய SSC கழகம் 4.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியை சுவீகரித்தது. சூப்பர் 8 சுற்றில் SSC அணி மூன்று போட்டிகளையும் வெற்றி பெற்றுள்ளதுடன், இவ்வெற்றியின் மூலம் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 220 (68.3) – அக்ஷு பெர்னாண்டோ 94, லஹிரு மிலந்த 40, விமுக்தி பெரேரா 5/33, கசுன் மதுஷங்க 3/51

SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 389 (122.5) – சச்சித்ர சேனநாயக்க 77, கௌஷால் சில்வா 74, தரிந்து ரத்நாயக்க 66, கவிந்து குலசேகர 42, சதுர பீரிஸ் 2/84, சஹன் நாணயக்கார 2/94

ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 201 (56.1) – லஹிரு மிலந்த 63, சதுர பீரிஸ் 59,  சச்சித்ர சேனநாயக்க 3/46

SSC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 35/2 (4.4)

முடிவு: SSC கழகம் 8 விக்கெட்டுகளினால் வெற்றி.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

  • SSC கழகம் – 17.12,
  • ராகம கிரிக்கெட் கழகம் – 3.91

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் NCC கழகம் (சூப்பர் 8)

கட்டுநாயக்க மைதானத்தில் இப்போட்டி இடம்பெற்றதுடன், போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியது.

அசத்தலாக பந்துவீசி அவ்வணியை திணறடித்த NCC கழகத்தின் லசித் எம்புல்தெனிய 6 விக்கெட்டுகளை பதம்பார்க்க, கோல்ட்ஸ் அணி 192 ஓட்டங்களுக்கு சுருண்டது. துடுப்பாட்டத்தில் பிரியமல் பெரேரா அதிகபட்சமாக 43 ஓட்டங்களை குவித்தார்.

அடுத்து களமிறங்கிய NCC அணி சார்பில் 4 வீரர்கள் அரைச்சதங்கள் குவிக்க, அவ்வணி 307 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அணித் தலைவர் அஞ்சலோ பெரேரா அதிகபட்சமாக 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் அசத்திய தில்ருவன் பெரேரா 82 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

115 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் மீண்டும் எதிரணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் 222 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் சதீர சமரவிக்ரம அதிகபட்சமாக 64 ஓட்டங்களை குவித்ததுடன், இம்முறையும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த பிரியமல் பெரேரா 45 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

லசித் எம்புல்தெனிய இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இப்போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார். மேலும் சகலதுறை வீரர் ஜெஹான் முபாரக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி NCC அணிக்கு 108 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதுடன், 23.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் அவ்வணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது. லஹிரு உதார அதிகபட்சமாக 45 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இத்தோல்வியுடன் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் தனது மூன்று சூப்பர் 8 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. NCC அணி தரவரிசையில் 6ஆம் இடத்திலும், கோல்ட்ஸ் அணி 7ஆம் இடத்திலும் உள்ளன.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 192 (54) – பிரியமல் பெரேரா 43, லசித் எம்புல்தெனிய 6/63

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 307 (80.3) – அஞ்சலோ பெரேரா 71, அனுக் பெர்னாண்டோ 62, திமிர ஜயசிங்க 54, ரமிந்து டி சில்வா 51, தில்ருவன் பெரேரா 6/82, நிசல தாரக 3/87

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 222 (69.5) – சதீர சமரவிக்ரம 64, பிரியமல் பெரேரா 45, ஜெஹான் முபாரக் 4/29, லசித் எம்புல்தெனிய 4/62

NCC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 111/4 (23.1) – லஹிரு உதார 45, அகில தனஞ்சய 2/37, தில்ருவன் பெரேரா 2/54

முடிவு: NCC கழகம் 6 விக்கெட்டுகளினால் வெற்றி.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

  • NCC கழகம் – 17.09
  • கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 4.17

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம் (சூப்பர் 8)

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான சூப்பர் 8 போட்டி SSC மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிரணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் 174 ஓட்டங்களுக்கே சுருண்டது. தனி ஒருவராக அணியை வழிநடத்திய சாமிக கருணாரத்ன 61 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இராணுவ அணி சார்பாக யசோத மெண்டிஸ் 4 விக்கெட்டுக்களையும், சீக்குகே பிரசன்ன 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு களமிறங்கிய இராணுவ விளையாட்டுக் கழகம் அசத்தலான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டி 383 ஓட்டங்களை குவித்தது. இராணுவ அணியின் நான்கு வீரர்கள் அரைச்சதங்களை பதிவு செய்து கொண்டதுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லியோ பிரான்சிஸ்கோ அதிகபட்சமாக 77 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் தமிழ் யூனியன் அணியின் ஜீவன் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

209 ஓட்டங்கள் பின்னிலையில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஆடுகளம் பிரவேசித்த தமிழ் யூனியன் வீரர்கள் இம்முறையும் மோசமான துடுப்பாட்டத்தையே வெளிக்காட்டினர். இரண்டாவது இன்னிங்சிலும் அணியை மீட்டெடுக்க முயற்சித்த சாமிக கருணாரத்ன 50 ஓட்டங்களை குவித்தார்.

மேலும் மனோஜ் சரத்சந்திர 52 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த போதிலும், ஏனைய வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஓய்வறை திரும்ப, தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 179 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் தோல்வியை தழுவிக் கொண்டது. இராணுவ அணியின் யசோத மெண்டிஸ் மற்றும் நளின் பிரியதர்ஷன 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினார்.

இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி, ஒரு போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்ட தமிழ் யூனியன் அணி தற்போது தரவரிசையில் இறுதி இடத்தில் உள்ளது. இராணுவ விளையாட்டுக் கழகம் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 174 (43) – சாமிக கருணாரத்ன 61, யசோத மெண்டிஸ் 4/55, சீக்குகே பிரசன்ன 3/46

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 383 (107.1) – லியோ பிரான்சிஸ்கோ 77, சீக்குகே பிரசன்ன 69, டில்ஷான் டி சொய்சா 59, லக்ஷித மதுஷான் 53, நவோத் இழுக்வத்த 41, ஜீவன் மெண்டிஸ் 5/97, ரமித் ரம்புக்வெல்ல 3/117

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 179 (52.2) – மனோஜ் சரத்சந்திர 52, சாமிக கருணாரத்ன 50, நளின் பிரியதர்ஷன 3/34, யசோத மெண்டிஸ் 3/52

முடிவு: இராணுவ விளையாட்டுக் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 30 ஓட்டங்களினால் வெற்றி.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

  • இராணுவ விளையாட்டுக் கழகம் – 18.92
  • தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 3.27

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (தட்டு பிரிவு)

கோல்ட்ஸ் கழக மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் செரசன்ஸ் அணியை எதிர்த்து புளூம்பீல்ட் அணி போட்டியிட்டது.

நாணய சுழற்சியில் வென்ற செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. சுராஜ் ரந்திவ் 5 விக்கெட்டுகளை பதம்பார்க்க, புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் யெரொன் டி அல்விஸ் அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்

பதிலுக்கு களமிறங்கிய செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் சார்பில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் ஹர்ஷ குரே 95 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். மேலும் சங்கீத் குரே, மிலிந்த சிறிவர்தன ஆகியோர் 60 ஓட்டங்களை கடக்க செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 351 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் பிரகாசித்த மலித் டி சில்வா 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து 144 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய புளூம்பீல்ட் அணி, இம்முறை முன்னேற்றகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 380 ஓட்டங்களை குவித்தது. அதீஷ நாணயக்கார (78) மற்றும் டிரான் தனபால (70) ஓட்டங்களை கடந்ததுடன், அணித்தலைவர் நிபுன் கருணாநாயக்க 68 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் அசத்திய கசுன் ராஜித 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

237 என்ற இலக்கை துடுப்பெடுத்தாட ஆரம்பித்த செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதிலும், போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது. இதன் மூலம் புள்ளி அட்டவணையில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்ட அவ்வணி தட்டு பிரிவின் சம்பியனாக முடிசூடியது. இதேவேளை புளூம்பீல்ட் அணி தட்டு பிரிவின் இறுதி இடத்தில் தொடரை நிறைவு செய்து கொண்டது.

போட்டியின் சுருக்கம்

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 207 (56) – யெரொன் டி அல்விஸ் 35, சுராஜ் ரந்திவ் 5/65, கசுன் ராஜித 3/71

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 351 (86.2) – ஹர்ஷ குரே 95, மிலிந்த சிறிவர்தன 67, சங்கீத் குரே 62, மலித் டி சில்வா 6/120

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 380 (107.1) – அதீஷ நாணயக்கார 78, டிரான் தனபால 70, நிபுன் கருணாநாயக்க 68, கசுன் ராஜித 5/152

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 49/4 (10) – மலித் டி சில்வா 3/29

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

  • செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 13
  • புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 4.59

சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம் (தட்டு பிரிவு)

மற்றுமொரு தட்டு பிரிவிற்கான போட்டி BRC மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சோனகர் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

தனி ஒருவராக போராடிய பபசர வடுகே 83 ஓட்டங்களை குவித்த போதிலும் மற்றைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஓய்வறை திரும்ப, சோனகர் விளையாட்டுக் கழகம் 175 ஓட்டங்களுக்கு சுருண்டது. BRC அணியின் ரொஷான் ஜயதிஸ்ஸ 3 விக்கெட்டுகளை கைப்பற்றிக் கொண்டார்.

அடுத்து களமிறங்கிய காலி கிரிக்கெட் கழகம் சார்பாக மொஹமட் ஜலீல் 77 ஓட்டங்களையும் தமித ஹுனுகும்புர 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க, அவ்வணி 310 ஓட்டங்களை பதிவு செய்தது. பந்து வீச்சில் சோனகர் அணியின் சஹன் அதீஷ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

135 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த சோனகர் விளையாட்டுக் கழகம், போட்டி நிறுத்தப்படும் போது 5 விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்களை குவித்திருந்தது. நிதானமாக துடுப்பெடுத்தாடிய ருவிந்து குணசேகர 55 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இதன்படி போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன், சோனகர் விளையாட்டுக் கழகம் மற்றும் காலி கிரிக்கெட் கழக அணிகள் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் தட்டு பிரிவிற்கான சுற்றை நிறைவு செய்தன.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 175 (68.2) – பபசர வடுகே 83, ரொஷான் ஜயதிஸ்ஸ 3/40

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 310 (91) –  மொஹமட் ஜலீல் 77, தமித ஹுனுகும்புர 50, ஷாலிக கருணாநாயக்க 40, சஹன் அதீஷ 3/28

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 238/5 (99) – ருவிந்து குணசேகர 55, ப்ரிமோஷ் பெரேரா 43

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

  • காலி கிரிக்கெட் கழகம் – 11.8
  • சோனகர் விளையாட்டுக் கழகம் – 3.42

BRC கழகம் எதிர் பதுரேலிய விளையாட்டுக் கழகம் (தட்டு பிரிவு)

தட்டு பிரிவிற்கான இப்போட்டி மொரட்டுவ மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய BRC அணி, ருமேஷ் புத்திகவின் சதம் மற்றும் ஹர்ஷ விதானவின் அரைச்சதத்தின் உதவியுடன் 358 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதுரேலிய அணியின் துவிந்து திலகரத்ன 3 விக்கெட்டுகளையும் திலேஷ் குணரத்ன 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதனை தொடர்ந்து ஆடுகளம் பிரவேசித்த பதுரேலிய விளையாட்டுக் கழகம் நிதானமாக துடுப்பெடுத்தாடிய போதிலும், 346 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 12 ஓட்டங்களினால் பின்னிலை பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பில் பெதும் மதுஷங்க அதிகபட்சமாக 78 ஓட்டங்களை குவித்தார். பந்துவீச்சில் திறமையை வெளிக்காட்டிய BRC அணியின் திலகரத்ன சம்பத் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய BRC கழகம் 7 விக்கெட்டுகளை இழந்து 278 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலையில் நிறைவு செய்தது. சகலதுறையிலும் அசத்திய திலகரத்ன சம்பத் 68 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர் துவிந்து திலகரத்ன 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி தட்டு பிரிவிற்கான புள்ளி அட்டவணையில் BRC அணி இரண்டாவது இடத்திலும் பதுரேலிய விளையாட்டுக் கழகம் மூன்றாவது இடத்திலும் தொடரை நிறைவு செய்தன.

போட்டியின் சுருக்கம்

BRC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 358 (93.3) – ருமேஷ் புத்திக 133, ஹர்ஷ விதான 61, ஹாஷென் ராமநாயக்க 48*, திலேஷ் குணரத்ன 4/78, துவிந்து திலகரத்ன 3/83

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 346 (121) – பெதும் மதுஷங்க 78, சாலிய சமன் 66, சஹன் விஜேரத்ன 42, திலகரத்ன சம்பத் 5/81

BRC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 278/7 (55) – திலகரத்ன சம்பத் 68, சாணக விஜேசிங்க 50, லிசுல லக்ஷான் 46, துவிந்து திலகரத்ன 4/111

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

  • BRC கழகம் – 12.68
  • பதுரேலிய விளையாட்டுக் கழகம் – 4.28