ஆப்கான் டெஸ்ட் அணியில் முதல் தடவையாக இடம்பிடித்த குர்பாஸ்

Afghanistan Vs Ireland In Uae 2024

70
Rahmanullah Gurbaz

அயர்லாந்து அணிக்கெதிராக நடைபெறவுள்ள ஒற்றை டெஸ்ட் போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒற்றை டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 T20i போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அபுதாபி மற்றும் சார்ஜா ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், அயர்லாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி நாளை (28) அபுதாபியில் ஆரம்பமாகவுள்ளதுடன், டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான 16 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் அறிமுக வீரராக விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் முதல் தடவையாக பெயரிடப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்காக 38 ஒருநாள் போட்டிகளிலும், 52 T20i போட்டிகளிலும் விளையாடிவுள்ள ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது அறிமுக டெஸ்ட் வாய்ப்பை பெற்றுள்ளார். அதேசமயம் சத்திரசிகிச்சை செய்து தற்போது ஓய்வில் உள்ள ரஷித் கான் இத்தொடரிலும் இடம்பெறவில்லை.

மேலும், இறுதியாக நடைபெற்ற இலங்கை அணியுடனான ஒற்றை டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பிடித்த யாமின் அஹ்மத்ஸாய் மற்றும் மொஹமட் சலீம் ஆகிய இருவரும் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

எனவே, குறித்த 2 வீரர்களுக்கும் பதிலாக சுழல் பந்துவீச்சாளர் கலீல் குர்பாஸ் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் இப்ராஹிம் ஆகியோருக்கு ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் முதல் தடவையாக வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனிடையே, இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற இலங்கை அணியுடனான ஒற்றை டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பிடித்து ஆடிய கைஸ் அஹ்மட், அயர்லாந்து டெஸ்ட் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட குழாத்தில் இடம்பெறவில்லை.

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணி விபரம்

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (தலைவர்), ரஹ்மத் ஷா, இக்ரம் அலிகில், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், நூர் அலி ஸத்ரான், அப்துல் மாலிக், பஹீர் ஷா, நசீர் ஜமால், கரீம் ஜன்னத், கலீல் குர்பாஸ், ஜாஹிர் கான், ஜியா உர் ரஹ்மான் அக்பர், நிஜாத் மசூத், இப்ராஹிம் அப்துல்ரஹிம்சாய் மற்றும் நவீத் சத்ரான்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<