சகீப் அல் ஹசனின் சிறப்பாட்டத்தோடு பங்களாதேஷ் அணி வெற்றி

78
BCB/Raton Gomes

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் முக்கோண T20 தொடரின் ஆறாவதும் கடைசியுமான குழுநிலைப் போட்டியில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தான் அணியை 4 விக்கெட்டுக்களால் தோற்கடித்துள்ளது. 

பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் முக்கோண T20 தொடரில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கெடுத்துவருகின்றன. இந்நிலையில் இந்த முக்கோண T20 தொடரின் முன்னைய போட்டிகளில் தலா 2 வெற்றிகள் வீதம் பதிவு செய்த ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய இரண்டு அணிகளும் தொடரின் இறுதிப் போட்டி வாய்ப்பினை பெற்ற நிலையில் இன்று (21) நடைபெற்ற மோதலில் களமிறங்கியிருந்தன. 

முக்கோண T20 தொடரில் ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றி

பங்களாதேஷ் மண்ணில் இடம்பெற்றுவரும்….

தொடர்ந்து சத்தோர்கம் நகரில் ஆரம்பமாகிய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற, பங்களாதேஷ் அணியின் தலைவர் சகீப் அல் ஹசன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை ஆப்கானிஸ்தான் தரப்பிற்காக வழங்கினார். 

அதன்படி முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. 

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹஸ்ரத்துல்லா சஷாய் 35 பந்துகளுக்கு 6 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 47 ஓட்டங்களை குவித்துக் கொண்டார். இதேநேரம், றஹ்மானுல்லா குர்பாஸ் 29 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பில் அபிப் ஹொசைன் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை சாய்த்திருக்க சகீப் அல் ஹசன், சபியுல் இஸ்லாம் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டியிருந்தனர். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 139 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பங்களாதேஷ் அணி தமது பதில் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது. 

பங்களாதேஷ் அணி தமது வெற்றி இலக்கினை எட்டும் பயணத்தில் தடுமாற்றம் காண்பித்த போதிலும் அதன் தலைவர் சகீப் அல் ஹசனின் போராட்டமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தினார். 

சகீப் அல் ஹசனின் அபார துடுப்பாட்டத்தோடு பங்களாதேஷ் கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 19 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களுடன் அடைந்தது. 

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றிக்கு உதவியிருந்த சகீப் அல் ஹசன் அவரின் 10 ஆவது T20 அரைச்சதத்துடன் வெறும் 45 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 70 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தார். இதேநேரம், முஷ்பிகுர் ரஹீம் 26 ஓட்டங்களை குவித்து தனது தரப்பு வெற்றிக்கு சிறிய பங்களிப்பினை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஐ.பி.எல் உரிமையாளர்களால் இலங்கை வீரர்ளுக்கு அழுத்தம் – அப்ரிடி குற்றச்சாட்டு

ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்கள்…..

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் அதன் தலைவர் ரஷீட் கான் மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பிற்காக போராடியிருந்த போதும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது. 

இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இந்த முக்கோண T20 தொடரில் மூன்று வெற்றிகளை பதிவு செய்த வண்ணம் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. போட்டியின் ஆட்ட நாயகனாக பங்களாதேஷ் அணியின் தலைவர் சகீப் அல் ஹசன் தெரிவாகினார். 

இந்த முக்கோண T20 தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.   

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 138/7 (20) – ஹஸ்ரத்துல்லா சஷாய் 47, றஹ்மானுல்லா குர்பாஸ் 26, அபிப் ஹொசைன் 9/2

பங்களாதேஷ் – 139/6 (19) – சகீப் அல் ஹசன் 70*, முஸ்பிகுர் ரஹீம் 26, நவீன்-உல்-ஹக் 20/2, ரஷீட் கான் 27/2

முடிவு – பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<