சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாளான இன்று, தமது இரண்டாவது இன்னிங்சினை முடித்துக் கொண்ட இலங்கை அணி, சவாலான வெற்றி இலக்கொன்றினை பங்களாதேஷிற்கு நிர்ணயித்து இருப்பதுடன், இன்றைய நாள் முடிவில் அவ்வணி இன்னும் வெற்றி பெற 390 ஓட்டங்கள் தேவையாக உள்ளது.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மழை குறுக்கிட்ட போட்டியின் மூன்றாம் நாளில், தமது முதலாம் இன்னிங்சினை பங்களாதேஷ் 312 ஓட்டங்களுடன் முடிந்திருந்தது. இதனால், 182 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இலங்கை 98 ஓவர்கள் வீச எத்தனிக்கப்பட்டிருந்த இன்றைய நாளில் தமது இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்தது.

திமுத் கருணாரத்ன, உபுல் தரங்க ஆகியோருடன் மைதானம் நுழைந்த இலங்கை தமது இரண்டாவது இன்னிங்சின் முதல் விக்கெட்டுக்காக, மெச்சத்தக்க வகையிலான இணைப்பாட்டம் (69) ஒன்றினைத் தந்தது. இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக, இம்முறை திமுத் கருணாரத்ன வெளியேறினார். இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இரட்டைச்சதம் விளாசிய கருணாரத்ன இந்த இன்னிங்சில் 32 ஓட்டங்களுடன் வெளியேறி, முதலாம் இன்னிங்சைப் போல் மோசமான ஆட்டத்தினை இம்முறையும் தந்து ஏமாற்றியிருந்தார்.

இலங்கையின் சுழலால் கட்டுப்பாட்டுக்குள் வந்த பங்களாதேஷ்; போட்டியில் மழை குறுக்கீடு

பின்பு தரங்க களத்தில் நிற்க, புதிதாக துடுப்பாட வந்த குசல் மெண்டிசும் சொற்ப ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு மதிய போசண இடைவேளைக்கு சற்று பின்னர் வெளியேறி நடந்தார். மெண்டிஸின் விக்கெட் பறிபோய் இருப்பினும், இலங்கை அணி ஓட்டங்களினை குவிப்பதில் சிறப்பாகவே செயற்பட்டிருந்தது. இந்நிலையில், அணியின் சிறந்த ஓட்டக்குவிப்பிற்கு காரணமாய் இருந்த உபுல் தரங்க சதத்தினை கடந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தனது கன்னி டெஸ்ட் சதத்தினை 2006ஆம் ஆண்டில், பங்களாதேஷுக்கு எதிராக பெற்றிருந்த, உபுல் தரங்க ஆட்டமிழக்கும் போது, தனது மூன்றாவது டெஸ்ட் சதத்தினைப் பெற்று மெஹதி ஹஸனின் பந்து வீச்சில் ஆட்டமிழக்கும் போது, மொத்தமாக 171 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உள்ளடங்களாக, 115 ஓட்டங்களினை குவித்திருந்தார்.

இதனையடுத்து, துடுப்பாட வந்த மத்திய வரிசை வீரர்களான அசேல குணரத்ன மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். இவர்கள் இருவரினதும் விக்கெட்டுகளைத் தொடர்ந்து களத்தில் இருந்த தினேஷ் சந்திமால் மற்றும் தில்ருவன் பெரேரா ஜோடி ஆறாவது விக்கெட்டுக்காக 52 ஓட்டங்களினைப் பெற்று, தில்ருவான் பெரேராவின் விக்கெட்டுடன் இலங்கை அணி தமது இரண்டாம் இன்னிங்சினை முடித்துக்கொண்டது.

Photo Album: Sri Lanka v Bangladesh 1st Test – Day 4

69 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 274 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணியில், தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களினைப் பெற்று நீண்டகால இடைவெளியின் பின்னர், டெஸ்ட் அரைச்சதம் ஒன்றினைப் பெற்றிருந்தார். மறுமுனையில் விரைவாகத் துடுப்பாடியிருந்த தில்ருவான் பெரேரா, ஒரு சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகள் உள்ளடங்களாக 27 பந்துகளிற்கு பெறுமதி மிக்க 33 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

பங்களாதேஷ் அணியில், சிறப்பாக செயற்பட்ட மெஹதி ஹஸன் மற்றும் சகீப் அல் ஹஸன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்சின் காரணமாக வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 457 ஓட்டங்களினைப் பெற தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி, போதிய வெளிச்சம் இன்றி நிறுத்தப்பட்ட இன்றைய நாளின் ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 67 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது.

பங்களாதேஷ் அணியில், இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய, செளம்யா சர்க்கர் 47 பந்துகளிற்கு அரைச்சதம் கடந்து 53 ஓட்டங்களினைப் பெற்று களத்தில் உள்ளதோடு, தமிம்  இக்பால் 13 ஓட்டங்களுடன் நிற்கின்றார்.

இரண்டாம் இன்னிங்சில், லக்மால் வீசிய மூன்றாவது ஓவரில் இலங்கை அணிக்கு விக்கெட் பெறும் வாய்ப்பு ஒன்று கிட்டிய போதும், அது களத்தடுப்பு சரியாக அமையாத காரணத்தினால் கைகூடியிருக்கவில்லை.

போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி (முதல் இன்னிங்ஸ்): 494 (129.1) – குசல் மெண்டிஸ் 194(285), அசேல குணரத்ன 85(134), நிரோஷன் திக்வெல்ல 75(76), தில்ருவான் பெரேரா 51(77), திமுத் கருணாரத்ன 30(76), ரங்கன ஹேரத் 14(19), மெஹதி ஹஸன் 113/4(22), முஸ்தபிசுர் ரஹ்மான் 68/2(25)

பங்களாதேஷ் அணி (முதல் இன்னிங்ஸ்): 312 (97.2) – முஸ்பிகுர் ரஹீம் 85(161), செளம்யா சர்க்கார் 71(137), தமிம் இக்பால் 57(112), மெஹதி ஹசன் 41(77), ரங்கன ஹேரத் 72/3(26.2), தில்ருவன் பெரேரா 53/3(19)

இலங்கை அணி (இரண்டாம் இன்னிங்ஸ்): 274/6 (69) – உபுல் தரங்க 115(171), தினேஷ் சந்திமால் 50*(75), தில்ருவான் பெரேரா 33(27), திமுத் கருணாரத்ன 32(73), மெஹதி ஹஸன் 77/2(20), சகீப் அல் ஹஸன் 104/2(25)

பங்களாதேஷ் அணி (இரண்டாம் இன்னிங்ஸ்): 67/0 (15) – செளம்யா சர்க்கர் 53*(47), தமிம் இக்பால் 13(44)

போட்டியின் இறுதி மற்றும் ஐந்தாவது நாள் நாளை தொடரும்.