SLC ஏற்பாட்டில் உபாதைகளை நிவர்த்தி செய்வதற்கான விழிப்புணர்வூட்டும் பட்டறை

265
SLC release

கிரிக்கெட் வீரர்களின் உபாதைகளை தடுத்தல் மற்றும் உபாதைகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பிலான சிறப்பு பட்டறை ஒன்றினை இலங்கை கிரிக்கெட் சபை கடந்த 19ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கின் ஆலோசகராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீரரான வைத்தியர் நிக்கலஸ் ஸ்ப்ரிங்கர் கலந்துகொண்டிருந்தார்.

தொடர் உபாதைகள் மற்றும் நோய்களை கண்டறிவதிலும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளிலும் நிக்கலஸ் ஸ்ப்ரிங்கர் நிபுணத்துவம் மிக்க வைத்தியராவார். அத்துடன் அவர் கால் மற்றும் பாதங்களில் ஏற்படும் உபாதைகளுக்கான அறுவை சிகிச்சைகள் மற்றும் உடற்பயிற்சி சிகிச்சைகளிலும் புகழ் மிக்க வைத்தியராவார்.

இம்முறை ஐ.பி.எல் கிண்ணம் மஹேல, மாலிங்கவின் மும்பை அணிக்கு

ஐ.பி.எல். குவாலிபையர்-2 (Qualifier-2) போட்டி நேற்றைய தினம் பெங்களூரு…

ஸ்ப்ரிங்கர், அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து தடகள விளையாட்டு சங்கத்துடன் இணைந்து கடமையாற்றி வருவதுடன், குயின்ஸ்லாந்து ரக்பி லீக் தொடரில் நடுவராகவும், அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட அணியான பிரிஸ்பன் லயன்ஸ் அணியுடன் இணைந்தும் செயலாற்றி வருகின்றார்.

பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் கணுக்கால், பாதம் அல்லது உள்ளங்கால் பகுதிகளில் உபாதைகளுக்கு உள்ளாவது பொதுவான விடயமாகும். இதன் காரணமாக இது போன்ற வழக்கமான தொடர் உபாதைகளை தடுக்கும் நோக்குடன் இப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது ஒவ்வொரு வீரர்களும் ஏறத்தாழ 30 நிமிடங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன் அவர்களுக்கான உடற்பயிற்சி சிகிச்சையும் வழங்கப்பட்டது. மேலும் நவீன மருத்துவ பரிசோதனை முறைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் அவற்றின் அனுகூலங்கள் வீரர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன. இலங்கை அணியின் உடற்கட்டு மற்றும் மறுசீரமைப்பு பயிற்சிகளின் முகாமையாளரான நிர்மலன் தனபாலசிங்கம் இது தொடர்பில் தன் கருத்தினை தெரிவிக்கையில்,

இப்பட்டறை எமக்கு மிகவும் முக்கியமானதொன்றாகும். வைத்தியர் ஸ்ப்ரிங்கர் அவர்களின் அறிவு மற்றும் அனுபவம் எமக்கு பயனுள்ளதாக அமைந்தது. இது எமது வீரர்களுக்கு எதிர்காலத்தில் கைகொடுக்கக் கூடியதாக காணப்படும். ஒரு வகையில் இதனை எதிர்காலத்திற்கான முதலீடு எனக் கூறலாம். உபாதை ஒன்று ஏற்படும் பட்சத்தில் அதன் விளைவினை குறைத்து, துரிதமாக நிவர்த்தி செய்வது பற்றி எமக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

வீரர்களும் இவ்விடயம் குறித்து சிறந்த அறிவினை கொண்டிருப்பது அவசியமாகும். 1999ஆம் ஆண்டிற்கு பின்னர் வீரர்களின் உடற்கட்டு தொடர்பில் இவ்வகையிலான பட்டறை ஒன்றினை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால ஏற்பாடு செய்தமை மிகவும் மகிழ்ச்சிக்குரியது. தொலைநோக்குமிக்க ஒரு திட்டமான இந்நிகழ்வு எதிர்காலத்தில் பயனுள்ளதாக அமையும் என நான் நினைக்கின்றேன்,என்றார்.

உள்ளங்கால் மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள மெல்லிய தசைகள் மற்றும் தசை நார்கள் உபாதைகளுக்கு உள்ளாவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் எனும் காரணத்தினால், கிரிக்கெட் வீரர்கள் மட்டுமன்றி ஏனைய விளையாட்டு வீரர்களும் பாதங்களில் ஏற்படும் உபாதைகள் தொடர்பில் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியமானதாகும்.