போட்டிக்கு போட்டி தரவரிசையில் முன்னேறிவரும் மார்னஸ் லபுஷேன்

161
image courtesy - AFP

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்த வருடத்தின் முதலாவதும், தனது கன்னி இரட்டை சதத்தையும் விளாசிய அவுஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன் போட்டிக்கு போட்டி தரவரிசையில் முன்னேறி தற்போது மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். 

இங்கிலாந்து – தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நிறைவு பெற்றுள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரப்படுத்தல் இன்று (08) வெளியிடப்பட்டது. அதன்படி துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரு துறைகளிலும் முதல் பத்து நிலைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இலங்கை – ஜிம்பாப்வே இடையிலான டெஸ்ட் இம்மாத இறுதியில்

தற்போது இந்தியாவுடன் T20 தொடரில் ஆடிவரும் இலங்கை…….

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை

நியூசிலாந்துடனான தொடரில் போட்டியின் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் ஆட்ட நாயகன் ஆகிய இரு விருதுகளை வென்ற 25 வயதுடைய அவுஸ்திரேலிய இளம் துடுப்பாட்ட வீரர் மார்னஸ் லபுஷேன் வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளுடன் (827) ஒரு நிலை முன்னேறி மூன்றாம் இடத்தை தக்க வைத்துள்ளார். 

இதேவேளை நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிக்கு துடுப்பாட்டத்தில் தனி மனிதனாக போராடி போட்டியின் ஆட்ட நாயகன் விருது வென்ற பென் ஸ்டோக்ஸ் முதல் முறையாக முதல் 10 நிலைகளுக்குள் இடம்பிடித்துள்ளார். வாழ்நாள் அதிக தரவரிசை புள்ளிகளுடன் (708) 5 நிலைகள் முன்னேறி ஸ்டோக்ஸ் பத்தாமிடத்தை தக்க வைத்துள்ளார். 

மேலும் குறித்த இரு தொடர்களிலும் தரவரிசையில் முன்னிலையில் காணப்படும் வீரர்கள் பிரகாசிக்காததன் காரணமாக இலங்கையின் விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்லவுக்கு ஒரு நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் 591 தரவரிசை புள்ளிகளுடன் தற்போது 31 ஆவது நிலையில் காணப்படுகின்றார். 

டெஸ்ட் அரங்கில் புதிய சாதனை படைத்த ரொஸ் டெய்லர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்துள்ள……

மூன்றாவது டெஸ்ட்டில் ஆட்டமிழக்காது சதமடித்த அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர் முதல் ஐந்து இடங்களுக்குள் புகுந்துள்ளார். இரு நிலைகள் உயர்ந்துள்ள டேவிட் வோர்னர் 793 தரவரிசை புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் காணப்படுகின்றார். அத்துடன் ஜோ ரூட், டீன் எல்கர், எய்டன் மார்க்ரம், ஜோ டென்லி, கொலின் டி க்ரெண்ட்ஹோம், டிம் பெய்ன், ஜோ பேன்ஸ் மற்றும் டொம் சிப்லி ஆகியோர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ள துடுப்பாட்ட வீரர்களாக காணப்படுகின்றனர். 

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை

நியூசிலாந்து அணியுடனான தொடரில் மொத்தமாக 15 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதல் ஐந்து இடங்களுக்குள் புகுந்துள்ளர். இரு நிலைகள் உயர்ந்துள்ள ஸ்டார்க் 796 தரவரிசை புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் காணப்படுகின்றார். மேலும் குறித்த தொடரில் அதிக விக்கெட்டுக்களை (20) கைப்பற்றிய வீரராக மாறிய அவுஸ்திரேலியாவின் சுழல்  பந்துவீச்சாளர் நைதன் லயன் 5 நிலைகள் உயர்ந்து 14 ஆவது இடத்திற்கு வந்துள்ளார். 

தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை பதம் பார்த்த ஜேம்ஸ் அண்டர்சன் முதல் 10 நிலைகளுக்குள் புகுந்துள்ளார். 5 நிலைகள் உயர்ந்துள்ள ஜேம்ஸ் அண்டர்சன் 791 தரவரிசை புள்ளிகளுடன் தற்போது 7 ஆவது இடத்தில் காணப்படுகின்றார். மேலும் போட்டியில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய அன்ரிச் நோட்ரியா 34 நிலைகள் உயர்ந்து 62 ஆவது நிலைக்கு வந்துள்ளார். 

ஜிம்பாப்வேயுடன் ஏற்பாடு செய்யப்பட்ட திகதிக்கு முன்னரே கிரிக்கெட் ஆடவுள்ள பங்களாதேஷ்

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) எதிர்கால கிரிக்கெட்…….

மேலும் பென் ஸ்டோக்ஸ், கொலின் டி க்ரெண்ட்ஹோம், சாம் கரன், மெட் ஹென்றி, டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் டொட் அஸ்டில் ஆகிய வீரர்கள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். டெஸ்ட் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் முதல் 10 நிலைகளுக்குள் எவ்வித மாற்றங்களும் நிகழவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<