கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கத்தை மயிரிழையில் தவறவிட்டார் புவிதரன்

166

பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்ற 45 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் 2 ஆவது நாளான இன்று (26) நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வடக்கு மாகாணத்தின் இளம் நட்சத்திர வீரரான ஏ. புவிதரன் மயிரிழையில் தங்கப் பதக்கத்தினை தவறவிட, ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் மலையக வீரரான ஏ. அரவிந்தன் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் ஏற்பாடு செய்துள்ள வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான 45 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் இறுதி நிகழ்வான மெய்வல்லுனர் போட்டிகள் தொடர்ந்தும் 2 ஆவது நாளாகவும் வின்சன்ட் டயஸ் மைதானத்தில் நடைபெற்றது.

தேசிய விளையாட்டு விழா முதல் நாளில் அனித்தா, ஆஷிக்குக்கு தங்கம்; சண்முகேஸ்வரனுக்கு இரண்டாமிடம்

தேசிய விளையாட்டு பெரு விழா மெய்வல்லுனர் போட்டிகளின் முதல் நாளான இன்று (25)…

இதில் இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ஏ.புவிதரன் பலத்த போட்டிக்கு மத்தியில் தங்கப் பதக்கத்தினை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். 

அத்துடன், புவிதரனுடன் களமிறங்கிய அவருடைய சகோதரரான ஏ. பவிதரன் 4 ஆவது இடத்தையும், மானிப்பாய் இந்துக் கல்லூரி மாணவனான எஸ். கபில்ஷன் 5 ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இந்தப் போட்டியில் அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற மேல் மாகாணத்தைச் சேர்ந்த வீரரான எரங்க ஜனித்துக்கு பலத்த போட்டியை புவிதரன் கொடுத்திருந்தார். இதனால் இருவரும் 4.50 மீற்றர் உயரங்களை தமது முதல் முயற்சியிலிலேயே சமமாகத் தாவியிருந்தனர்.

இதனையடுத்து, 4.60 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு இருவரும் மேற்கொண்ட மூன்று முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன. 

இறுதியில் ஆரம்பத்தில் 4.40 மீற்றர் உயரத்தை தாவுவதற்கு இருவரும் மேற்கொண்ட உயரத்தை ஒப்பிடுகையில், எரங்க ஜனித் முதலாவது முயற்சியிலும், புவிதரன் இரண்டாவது முயற்சியிலும் குறித்த உயரங்களை தாவியிருந்ததால், தங்கப் பதக்கம் எரங்கவுக்கும், வெள்ளிப் பதக்கம் புவிதரனுக்கும் வழங்கப்பட்டன. 

இதேநேரம், 4.40 மீற்றர் உயரத்தைத் தாவிய வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த என்.ஜி சமரசிங்க வெண்கலப் பதக்கத்தினை வெற்றி கொண்டார். 

பாடசாலை மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனான ஏ.புவிதரன், கடந்த வருடம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் முதல் தடவையாக வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி களமிளறங்கி வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தார். 

அதுமாத்திரமின்றி, இவ்வருடம் தனது உயர்தர பரீட்சைக்கு முகங்கொத்த அவர், இறுதியாக கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

Photos : 45th National Sports Festival – Day 01

Photos : 45th National Sports Festival – Day 01

அரவிந்தனுக்கு முதல் பதக்கம்

இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீற்றரில் பங்குகொண்ட ஊவா மாகாணத்தைச் சேர்ந்த சி. அரவிந்தன், போட்டித் தூரத்தை ஒரு நிமிடமும் 54.56 செக்கன்களில் ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். தேசிய விளையாட்டு விழா போட்டிகளில் அரவிந்தன் பெற்றுக்கொண்ட முதலாவது பதக்கம் இதுவாகும்.

கடந்த வருடம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் முதல் தடவையாக களமிறங்கியிருந்த அரவிந்தனுக்கு 6 ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது. 

குறித்த போட்டியில் அரவிந்தனுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த தென் மாகாணத்தைச் சேர்ந்த ருசிரு சத்துரங்க தங்கப் பதக்கத்தினை வென்றார். போட்டியை நிறைவு செய்ய ஒரு நிமிடமும் 53.34 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார். 

இதேநேரம், போட்டித் தூரத்தை ஒரு நிமிடமும் 54.83 செக்கன்களில் ஓடி முடித்த மத்திய மாகாணத்தைச் சேர்ந்த எஸ்.ரி. புளுகஹபிட்டிய வெண்கலப் பதக்கத்தினை தட்டிச் சென்றார். 

அதேபோன்று பெண்களுக்கான 800 மீற்றரில் பங்குகொண்ட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த டில்ஷி குமாரசிங்க தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். போட்டித் தூரத்தை ஓடி முடிக்க 2 நிமிடங்களும் 10.26 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

அத்துடன், இப்போட்டியில் பங்குகொண்ட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ரி. டென்ஷிகா (2 நிமி. 30.89 செக்.) 7 ஆவது இடத்தையும் பெற்றக்கொண்டார்.

ஷிக்குக்கு ஏமாற்றம் 

நேற்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதலில் தங்கப் பதக்கத்தினை வென்ற கிழக்கு மாகாண வீரரான ZTM ஆஷிக், இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான குண்டு எறிதலில் 5 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். போட்டியில் அவர் 13.09 மீற்றர் தூரத்தை எறிந்தார்.

எனினும், குறித்த போட்டியில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளம் வீரரான சமித் பெர்னாண்டோ 15.44 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதேவேளை, இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் கடைசி தினமான நாளை (27) 16 மெய்வல்லுனர் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருடத்தின் அதிவேக வீரரைத் தீர்மானிக்கும் 100, 400 மீற்றர் ஓட்டப் போட்டிகள் மற்றும் 4 x 400 ஆகிய அஞ்சலோட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க…