பயிற்றுவிப்பாளராக மீண்டும் இலங்கை வரும் மிக்கி ஆர்தர்!

Lanka Premier League 2022

374

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில், கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மிக்கி ஆர்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளரான மிக்கி ஆர்தர், கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மீண்டும் இலங்கை வரவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

>> T20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு என்ன நடந்தது – குமார் தர்மசேன

நேற்று வியாழக்கிழமை (17) இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகத்தில் LPL தொடர் குறித்த அறிவிப்புகளை வெளியிடும் ஊடக சந்திப்பின்போதே மிக்கி ஆர்தர் தொடர்பில் LPL தொடரின் பணிப்பாளர் சமந்த டொடன்வெல அறிவித்தார்.

இம்முறை LPL தொடருக்கான அணி உரிமையாளர்களில் எந்தவித மாற்றமும் இல்லை என குறிப்பிட்ட இவர், திட்டமிட்டவாறு டிசம்பர் 6ம் திகதி முதல் 23ம் திகதிவரை போட்டிகள் நடைபெறும் என்பதையும் குறிப்பிட்டார்.

மிக்கி ஆர்தர் தொடர்பில் குறிப்பிட்ட இவர், “LPL பயிற்றுவிப்பு குழாத்தை பொருத்தவரை கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக மிக்கி ஆர்தர் வருகின்றார். இதுதான் புதிய வரவாக உள்ளது. இலங்கை அணிக்கு பயிற்றுவிப்பாளராக இருந்த ஒருவர் மீண்டும் இங்கு வருவது எமக்கு பெருமையான விடயம்” என டொடன்வெல தெரிவித்தார்.

>> ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடர்: அதிரடி மாற்றங்களுடன் இலங்கை அணி? | Sports RoundUp – Epi 225

இதேவேளை ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த LPL தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் சில வெளிநாட்டு வீரர்கள் தொடரிலிருந்து விலகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள இவர், அவர்களுக்கான மாற்று வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

லங்கா பிரீமியர் லீக் தொடரானது டிசம்பர் 6ம் திகதி முதல் 23ம் திகதிவரை கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில்  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<