சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற FA கிண்ணத்தின் விறுவிறுப்பான இரண்டாவது காலிறுதிப் போட்டியில் சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றித்தடம் பதித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

காலிறுதிக்கு முன்னைய சுற்றில் புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம், யாழ்ப்பாணம் பாடும் மீன் விளையாட்டுக் கழகத்தினை அவர்களது சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.

சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் நீர்கொழும்பு யூத் அணியை பெனால்டி வரை சென்று போராடி 3-1 என வென்று காலிறுதிக்குத் தெரிவானது.

காலிறுதிக்கு தெரிவாகிய அணிகளின் நிலை எவ்வாறு உள்ளன?

இந்நிலையில் இந்தப் போட்டியில் சம பலம் பொருந்திய இரு அணிகளும் ஆரம்பம் முதலே சளைக்காமல் துரித விளையாட்டை வெளிக்காட்டின. எனினும் இரு அணிகளாலும் அதிகமாக வாய்ப்புகளை ஏற்படுத்த முடியவில்லை. அதற்குத் தடையாக பின்கள வீரர்கள் செயற்பட்டனர்.

போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் புளு ஸ்டார் அணிக்கு மிகவும் கடினமான வாய்ப்பு ஒன்று கிடைக்கப்பெற, முன்கள வீரர் ஷன்ன அதனை கம்பங்களுக்கு மேலாக அடித்தார்.

அதனைத் தொடர்ந்து மறுமுனையில் சௌண்டர்ஸ் அணிக்காக சனோஜ் சமீர இரண்டு உத்திகளை முயற்சி செய்த போதிலும், அவையும் பலனளிக்கவில்லை.

இவ்வாறு இரு அணிகளும் களத்தடுப்பில் முக்கிய கவனம் செலுத்தி விளையாடிக்கொண்டிருக்கையில் புளு ஸ்டார் முதலாவது கோலினைப் பெற்றது.

போட்டியின் 38ஆவது  நிமிடத்தில் சௌண்டர்ஸ் கோல் காப்பாளர், கோலுக்கு வேகமாக வந்த பந்தை அருமையாக தட்டி விட அப்பந்து அனுபவ வீரர் ஷன்னவின் கால்களுக்குச் செல்ல, ஷன்ன அதனை கோலாக மாற்றினார்.

முதல் பாதியின் இறுதி நேரத்தில் சௌண்டர்ஸ் அணிக்கு ப்ரி கிக் வாய்ப்பு கிடைக்கப்பெற, கிறிஷாந்த அபேசேகர அதனை வீணடித்தார்.

முதல் பாதி: புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் 1 – 0 சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்

இரு அணிகளும் முதலாவது பாதியைப் போன்றே இரண்டாவது பாதியையும் ஆரம்பித்தன. எனினும் இந்தப் பாதியில் சௌண்டர்ஸ் அணிக்கு அருமையான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றன. குறிப்பாக மொஹமட் சாஹில், தனக்கு கிடைத்த இலவச ஹெடர் வாய்ப்பை தவறவிட்டார்.

வாய்ப்புகளைத் தவறவிட்ட பாடும்மீன்; காலிறுதியில் புளு ஸ்டார்

அதன் பின்னர் போட்டியில் மெதுவாக தமது ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கிய சௌண்டர்ஸ் வீரர்கள், தமது முதல் கோலுக்காகப் போராடி பல வாய்ப்புகளை உருவாக்கினார்.

குறிப்பாக கிறிஷாந்த அபேசேகர அடித்த பந்து மிகவும் வேகமாக கோல் கம்பங்களை நோக்கிச் சென்ற போதிலும், புளு ஸ்டார் அணியின் கோல் காப்பாளர் மஞ்சுல பெர்னாண்டோ அதனை தடுத்தார்.

மேலும் சுந்தர்ராஜ் நிரேஷ், தனக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பினை தவற விட்டார்.

போட்டியில் முன்னிலை பெற்றிருந்த புளு ஸ்டார் அணியினர் சற்று ஆக்ரோசமான விளையாட்டில் ஈடுபடத் தொடங்கினர். இதனை கண்டிக்கும் முகமாக இந்திக பிரதீப் மற்றும் ரங்கன சில்வா ஆகியோருக்கு இரண்டு மஞ்சள் அட்டைகள் வழங்கப்பட்டன.

போட்டியின் 76ஆவது நிமிடத்தில் சௌண்டர்ஸ் கோலொன்றினைப் பெற்று போட்டியை சமநிலை செய்தது. சௌண்டர்ஸ் அணிக்கு கிடைத்த கோர்ணர் உதை வாய்ப்பினை சிறப்பாகப் பயன்படுத்திய கிறிஷாந்த அபேசேகர அடித்த பந்து நேரடியாக கோலுக்குள் நுழைந்தது.

கிறிஷாந்த அபேசேகரவினால் அடிக்கப்பட்ட கோலின் பின்பு இரு அணி வீரர்களும் புத்துணர்வுடன் வெற்றி கோலுக்காகப் போராடினர்.

இரண்டாவது பாதியில் மைதானத்திற்கு உள்வாங்கப்பட்ட லக்மால் பெர்னாண்டோ, போட்டியின் 82ஆவது நிமிடத்தில் சௌண்டர்ஸ் அணியின் இரண்டாவது கொலைப் பெற்றுக்கொடுத்தார். கோணர் உதையின்போது வந்த பந்தை, அவர் ஹெடர் மூலம் அடிக்க பந்து கம்பங்களுக்குள் சென்றது. இதனால், போட்டியில் சௌண்டர்ஸ் அணி முன்னிலை பெற்றது.

பெனால்டியில் நீர்கொழும்பு யூத்தை வீழ்த்தி காலிறுதிக்குள் சென்றது சௌண்டர்ஸ்

இறுதி சில நிமிடங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம், ஆட்ட நிறைவின்போது 2-1 என வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

முழு நேரம்: புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் 1 – 2 சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – கிறிஷான்த அபேசேகர (சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் – E.B ஷன்ன 39′ 

சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் – கிரிஷாந்த அபேசேகர 76′, லக்மால் பெர்னாண்டோ 84′