இலங்கை அணியில் இருந்து சந்திமால் நீக்கம், திக்வெல்ல இணைப்பு

2553

இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் விரல் உபாதை காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ணத் தொடரில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித் சேனாநாயக்க எமது இணையத்தளமான ThePapare.com இடம் தெரிவித்தார்.

அத்துடன், தினேஷ் சந்திமாலுக்கு பதிலாக குழாத்தின் மேலதிக வீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்த நிரோஷன் டிக்வெல்ல மாற்று வீரராக பெயரிடப்பட்டுள்ளார் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிய கிண்ணத்தின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகும் அகில தனன்ஜய

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து..

ஆசிய கிண்ணத் தொடர் எதிர்வரும் 15ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணிக்குழாமில் தினேஷ் சந்திமாலின் பெயர் இணைக்கப்பட்டிருந்தது.

எனினும், இலங்கையில் நடைபெற்ற SLC T-20 லீக்கின்  போது சந்திமால் விரல் உபாதைக்கு உள்ளாகியிருந்தார். கண்டிபல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற தம்புள்ளை அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது, பிடியெடுப்பொன்றை எடுக்க முற்பட்ட சந்திமாலின் நடுவிரலில் முறிவு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக ஆசிய கிண்ண குழாத்தில் சந்திமால் இணைக்கப்பட்டுள்ள போதிலும், வைத்திய பரிசோதனையின் பின்னரே, அவர் தொடரில் பங்கேற்பது குறித்து அறிவிக்க முடியும் என தேர்வுக்குழுத் தலைவர் கிரஹம் லெப்ரோய் குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி, தற்போது கிடைக்கப்பெற்றுள்ள வைத்திய பரிசோதனையில் சந்திமாலின் உபாதை உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால்  சந்திமால் அணிக் குழாத்திலிருந்து நீக்கப்படுவதாகவும், அவருக்கு பதிலாக இடதுகை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல குழாத்தில் இணைக்கப்படுவதாகவும் கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

ஆசிய கிண்ணமும் லசித் மாலிங்கவின் அசத்தல் பந்து வீச்சும்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள்..

நிரோஷன் டிக்வெல்ல இறுதியாக நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், 5 போட்டிகளில் விளையாடி ஒரு அரைச்சதம் அடங்கலாக 158 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொடு்த்திருந்தார். இதனால், தொடர்ச்சியாக ஓட்டங்களை குவிக்கத் தவறிய காரணத்திற்காக குழாத்தின் மேலதிக வீரராகவும் பெயரிடப்பட்டார். எனினும் சந்திமாலின் உபாதையின் காரணமாக மீண்டும் ஒருநாள் அணியில் தனக்கான இடத்தை டிக்வெல்ல தக்கவைத்துள்ளார்.

இதேவேளை, குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அகில தனன்ஜயவும் ஆசிய கிண்ணத்தின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளார். எதிர்வரும் 15- 17ம் திகதிகளுக்கிடையில் அவரது மனைவி குழந்தை பிரசவிக்க இருப்பதன் காரணமாகவே அவர் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து மாத்திரம் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<