17 வருடங்களுக்குப் பின் பாகிஸ்தான் செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

156

சுமார் 17 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி அங்கே 7 போட்டிகள் கொண்ட T20I  தொடரில் ஆடவிருக்கின்றது.

செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 02ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த T20I தொடர் இரு அணிகளும் இந்த ஆண்டு இடம்பெறும் T20I உலகக் கிண்ணத் தொடருக்கு தயாராகும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆசியக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது!

இந்த T20I தொடரின் முதல் நான்கு போட்டிகளுக்காகவும் கராச்சி தேசிய மைதானம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய மூன்று போட்டிகளுக்காகவும் லாஹூரின் கடாபி மைதானம் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் தொடரின் முதல் நான்கு போட்டிகளும் செப்டம்பர் மாதம் 20, 22,23 மற்றும் 25 திகதிகளிலும், தொடரின் எஞ்சிய மூன்று போட்டிகளும் செப்டம்பர் மாதம் 28,30 மற்றும் ஒக்டோபர் மாதம் 02 திகதிகளிலும் நடைபெறவிருக்கின்றன.

இதேநேரம் T20I தொடரின் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தினை அடுத்து மீண்டும் டிசம்பர் மாதத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ஆடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடைசியாக 2005ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அங்கே மிக நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் வருவது அதிக சந்தோசம் தருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் சர்வதேச கிரிக்கெட் இயக்குனர் சாகிர் கான் கூறியிருந்தார்.

இங்கிலாந்தின் ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகள் கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள இருந்த போதும் குறித்த  சுற்றுப்பயணங்கள் வீர, வீராங்கனைகள் கொவிட்-19 பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்ததன் மூலம் ஏற்பட்ட அழுத்தம் மற்றும் வீர, வீராங்கனைகளின் உளநலம் என்பவற்றினை கருத்திற் கொண்டு இரத்துச் செய்யப்பட்டிருந்தது. அதேவேளை நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாதுகாப்பு காரணங்களை கருத்திற் கொண்டு பாகிஸ்தானுக்கான தம்முடைய கிரிக்கெட் சுற்றுப்பயணத்தினையும் ஒத்திவைத்திருந்தது. இவை பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு சிக்கலான நிலை ஒன்றினை தோற்றுவித்ததோடு, அந்நாட்டு இரசிகர்களுக்கும் கவலையினை ஏற்படுத்தியிருந்தது.

மேஜர் லீக் தொடரின் சம்பியன்களாக தமிழ் யூனியன்

எனினும் அவுஸ்திரேலிய அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தினை வெற்றிகரமாக நடாத்திக் காட்டியிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுற்றுத் தொடரினையும் வெற்றிகரமாக நடாத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் தவிர அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதோடு, மேற்கிந்திய தீவுகள் அணியும் அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளில் ஆடவிருக்கின்றது. இவற்றுடன் 50 ஓவர்கள் கொண்ட ஆசியக் கிண்ணத் தொடரும் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<