ஆசிய கிண்ணத்தின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகும் அகில தனன்ஜய

2734

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வரும் அகில தனன்ஜய, ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ணத் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் லசித் மாலிங்க

செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி…

இறுதியாக நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T-20  போட்டித் தொடர்களில் சிறப்பாக பந்து வீசி, அணிக்கு நம்பிக்கையளித்திருந்த அகில தனன்ஜய தனிப்பட்ட காரணங்களுக்காக முதலிரண்டு லீக் போட்டிகளிருந்தும் விலகியுள்ளார்.  

ஆசிய கிண்ணத் தொடரில், இலங்கை அணிக்கான முதல் இரண்டு போட்டிகள் செப்டம்பர் 15ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. குறித்த தினங்களுக்கு இடையில் அகில தனன்ஜயவின் மனைவி குழந்தை பிரசவிக்க இருப்பதன் காரணமாக, அவர் போட்டிகளிலிருந்து விலகியுள்ளதாக அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

அகில தனன்ஜய அணிக்குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் குழாத்துடன் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணிக்க மாட்டார். 15ஆம், 17ஆம் திகதிகளுக்கிடையில் அகில தனன்ஜயவின் மனைவி குழந்தை பிரசவிக்க உள்ளதால் அவர் முதலிரண்டு போட்டிகளிலும் விளையாட மாட்டார்” என இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் கிரஹம் லெப்ரோய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அகில தனன்ஜய அணியின் முதற்தர சுழற்பந்து வீச்சாளர். அவர் அணியில் விளையாடாமை அணிக்கு பின்னடைவுதான். எனினும், அவருக்கு பதிலாக துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயற்பட்டு வரும் டில்ருவான் பெரேராவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். அவர் இந்த வாய்ப்பினை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதையும் அவதானிக்க உள்ளோம். அகில வெளியேறுவார் என்ற காரணத்தினால்தான் 15 பேர் கொண்ட குழாத்துக்கு பதிலாக 16 பேர் கொண்ட குழாமை அறிவித்தோம்” என்றார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கௌரவிக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை

இதேவேளை SLC T-20  தொடரில் பிடியெடுப்பொன்றை எடுக்க முற்பட்ட தினேஷ் சந்தமாலின் நடுவிரலில் முறிவு ஏற்பட்டிருந்தது. இதன்காரணமாக இவர் கொழும்புதம்புள்ளை அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் விளையாடவில்லை.

அத்துடன் இவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை ஆசிய கிண்ணத்தொடருக்கு முன் குணமாகுவதற்கான வாய்ப்புகள் குறைவு என கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சந்திமால் தொடர்பான இறுதித் தீர்மானம் அவரது மருத்துவ அறிக்கையை அடுத்து மேற்கொள்ளப்படும். சந்திமால் அணியில் இணைக்கப்படாவிட்டால் அவருக்கு பதிலாக மேலதிக வீரராக பெயரிடப்பட்டுள்ள நிரோஷன் டிக்வெல்ல அணிக்குழாமுடன் இணைவார்”

நாம் முதலில் குழாத்தை தெரிவுசெய்யும் போது தடை மற்றும் உபாதை காரணமாக வெளியிலிருந்த எமது துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் தயாராக இருந்தனர். இதன் காரணமாகவே டிக்வெல்லவை அணிக்குழாத்தில் இணைக்க முடியவில்லை. அவர் ஓரிரு போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருவதன் காரணமாக குழாத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தார். எவ்வாறாயினும் தினேஷ் சந்திமால் இல்லாவிடின் அவரின் இடத்துக்கு டிக்வெல்ல அழைக்கப்படுவார்” என கிரேம் லெப்ரோய் சுட்டிக்காட்டினார்.

ஆசிய கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை அணி, தங்களது முதல் போட்டியில் பங்காளதேஷ் அணியை எதிர்வரும் 15ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், 17ஆம் திகதி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க