BPL 2019: 4 ஓட்டங்களினால் கன்னி சதத்தை தவறவிட்ட பானுக ராஜபக்ஷ

166
Twitter

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் பங்கபந்து பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரின் 17ஆவது லீக் ஆட்டத்தில் கொமில்லா வோரியர்ஸ் அணிக்காக விளையாடிவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான பானுக ராஜபக்‌ஷ இன்றைய போட்டியில் அதிரடியாக 96 ஓட்டங்களை குவித்துள்ளார். 

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் லீக் தொடர்களில் ஒன்றான பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரின் 7ஆவது பருவகாலத்திற்கான போட்டிகள் கடந்த 11ஆம் திகதியிலிருந்து பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. 

ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசை வெளியீடு

சர்வதேச கிரிக்கெட் வாரியம், ஒருநாள்…………

கிட்டத்தட்ட அரைவாசி கட்டத்தை எட்டியுள்ள குறித்த தொடரின் 17ஆவது லீக் போட்டி இன்று (23) மாலை தசுன் சானக்க தலைமையிலான கொமில்லா வோரியர்ஸ் மற்றும் மஷ்ரபி மோர்தஸா தலைமையிலான டாக்கா பிளட்டூன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மஷ்ரபி மோர்தஸா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொமில்லா வோரியர்ஸ் அணி பானுக ராஜபக்ஷவின் அதிரடியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய இலங்கையின் பானுக ராஜபக்ஷ நிதானமாகவும் அதிரடியாகவும் களத்தில் நின்று இறுதி நேரம் வரை ஆட்டமிழக்காது 65 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் மொத்தமாக 96 ஓட்டங்களை விளாசினார். 

இதில் அரைச்சதம் கடந்த பானுக ராஜபக்ஷ டி20 போட்டி வரலாற்றில் தனது 8ஆவது அரைச்சத்தை பூர்த்தி செய்தார். இப்போட்டியில் பானுக ராஜபக்ஷ முதல் 50 ஓட்டங்களை 41 பந்துகளிலேயே பூர்த்தி செய்தார். ஆனால் ஏனைய 46 ஓட்டங்களையும் வெறும் 24 பந்துகளில் விளாசியிருந்தார். மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய யாஸிர் அலி 30 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காதிருந்தார். 

டாக்கா அணியின் பந்துவீச்சில் மெஹதி ஹஸன் 4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், சதாப் கான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 161 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டாக்கா பிளட்டூன் அணி இறுதி ஓவரில் பாகிஸ்தானின் சஹீட் அப்ரிடியின் அதிரடியில் 1 பந்து மீதமிருக்க 5 விக்கெட்டுக்களினால் த்ரில் வெற்றி பெற்றது. 

சனத் ஜெயசூரியவின் 22 வருட சாதனையை தகர்த்த ரோஹிட் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் உபதலைவரும்………..

டாக்கா பிளட்டூன் அணியின் துடுப்பாட்டத்தில் பந்துவீச்சிலும் அசத்திய மெஹதி ஹஸன் வெறும் 29 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகளுடன் அரைச்சதம் கடந்து 59 ஓட்டங்களையும், தமீம் இக்பால் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். கொமில்லா வோரியர்ஸ் அணியின் பந்துவீச்சில் முஜீபுர் ரஹ்மான் 2 விக்கெட்டுக்களையும், அல்-அமீன் ஹூஸைன், சௌமியா சர்கார் மற்றும் ரொபியுல் இஸ்லாம் ரூபி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

போட்டியின் ஆட்டநாயகனாக சகலதுறையிலும் பிரகாசித்த மெஹதி ஹஸன் தெரிவானார். டாக்கா பிளட்டூன் அணியின் இவ்வெற்றியின் மூலம் அவ்வணி புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளை பெற்று நான்காமிடத்திற்கு முன்னேறியுள்ளது. தசுன் சானக்க தலைமையிலான கொமில்லா வோரியர்ஸ் அணி 4 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் காணப்படுகின்றது. 

போட்டியின் சுருக்கம்

கொமில்லா வோரியர்ஸ் – 160/3 (20) – பானுக ராஜபக்ஷ 96 (65), யாஸிர் அலி 30 (27), மெஹதி ஹஸன் 2/9 (4), சதாப் கான் 1/32 (4)

டாக்கா பிளட்டூன் – 161/5 (19.5) – மெஹதி ஹஸன் 59 (29), தமீம் இக்பால் 34 (40), முஜீபுர் ரஹ்மான் 2/22 (4), அல் அமீன் ஹூஸைன் 1/29 (4)

முடிவு – டாக்கா பிளட்டூன் அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றி

இதேவேளை குறித்த போட்டியில் பானுக ராஜபக்ஷ 96 ஓட்டங்களை குவித்ததன் மூலம் இப்பருவகாலத்திற்கான பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் ஒரு போட்டியில் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரராக மாறியுள்ளார். முதலிடத்தில் சதமடித்த அன்ட்ரே பிளட்ச்சர் (103) காணப்படுகின்றார். 

தாகூரின் இறுதிநேர அதிரடியால் ஒருநாள் தொடரும் இந்தியா வசம்

மேற்கிந்திய தீவுகளுடனான தீர்மானமிக்க………….

மேலும் இவ்வருட தொடரில் அதிக ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் 178 ஓட்டங்களுடன் பானுக ராஜபக்ஷ ஆறாமிடத்தில் காணப்படுகின்றார். இதேவேளை சட்டகோரம் செலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிவரும் மற்றுமொரு இலங்கை வீரரான அவிஷ்க பெர்ணான்டோ குறித்த பட்டியலில் 221 ஓட்டங்களுடன் நான்காமிடத்தில் காணப்படுகின்றார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க