இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் பதவிக்கு பொருத்தமான ஒரே நபர் நான் – திலங்க

489
Sri Lanka Cricket

இலங்கையின் புதிய விளையாட்டுத்துறை சட்ட விதிமுறைகளுக்கு மாறாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்காக கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு பொதுக்கூட்டத்தை நடத்தாமல் ஐவர் கொண்ட தேர்தல் குழுவை நியமித்த காரணத்தால் மே மாதம் 19 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபைத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு கடந்த 27 ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையில், இம்மாதம் 19 ஆம் திகதி நடைபெறவிருந்த குறித்த தேர்தலை எதிர்வரும் 31 ஆம் திகதி நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பிலுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று (01) மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் திலங்க சுமதிபால இதுதொடர்பிலான மீள் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் நடைபெறும் திகதி மற்றும் இம்முறை தேர்தலில் களமிறங்கவுள்ள தமது தரப்பினரின் ஆயத்தம் குறித்து அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத் தேர்தலில் சிறிது தாமதம்

”நாங்கள் விசேட நிறைவேற்றுக் குழு கூட்டத்தை ஏற்பாடு செய்யாமல் தேர்தல் குழுவை நியமித்ததால் அது சட்டவிதிமுறைகளை மீறியதாக அமையும் என விளையாட்டுத்துறை அமைச்சு எமக்கு அறிவித்திருந்தது. எனவே குறித்த விசேட நிறைவேற்றுக் குழு கூட்டத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி நடாத்தி, அங்குள்ள உறுப்பினர்களின் ஆலோசனைக்கமைய தேர்தல் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனையடுத்து எதிர்வரும் 31 ஆம் திகதி வருடாந்த நிர்வாக சபைத் தேர்தலை நடத்துவதற்கான அனுமதியை வழங்குமாறு நாங்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்” என தெரிவித்தார்.

இந்நிலையில், 19 ஆம் திகதி கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய நிர்வாகிகளை தெரிவு செய்ய முடியாத காரணத்தால் 31 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலின் பிறகு கணக்காய்வாளர் அறிக்கை மற்றும் செயலாளர் அறிக்கை தொடர்பில் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவும், அதன் பிறகு புதிய நிர்வாகிகளின் தெரிவு இடம்பெறும் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் இதன் போது அறிவித்தார்.

இதேவேளை, தனக்கு எதிராக ஊடகங்கள் வாயிலாக வெளிவருகின்ற வதந்திகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு திலங்க சுமதிபால கருத்து வெளியிடுகையில்,

”ஒவ்வொரு தேர்தலின் போதும் எனக்கு சேறு பூசும் வகையில் எதிர் தரப்பினர் இவ்வாறு பொய்யான வதந்திகளை பரப்பி வருவது சகஜம்தான். அதிலும் குறிப்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் நாட்டின் சிங்கள ஊடக நிறுவனமொன்றின் பிரதானி எனவும் சமூகவலைத்தளங்களில் பொய்யான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன், அதாவது என்னுடைய 22 ஆவது வயதில் ரெஜின என்ற சிங்களப் பத்திரகையை ஆரம்பித்தேன். அதன்பிறகு 1995 ஆம் ஆண்டு லக்பிம சிங்களப் பத்திரிகையையும் ஆரம்பித்தேன்.

இந்நிலையில், விளையாட்டு சட்டவிதிமுறைகளுக்கு அமைய ஊடக நிறுவனங்களின் தலைவருக்கு ஒருபோதும் விளையாட்டு சங்கங்களின் தேர்தல்களில் போட்டியிட முடியாது. எனவே இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னரே குறித்த பதவியிலிருந்து இராஜினாமா செய்துவிட்டதாகவும்” அவர் இதன் போது தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கைக்கு 1996 உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்கவின் இளைய சகோதரரான நிஷாந்த ரணதுங்க, இம்முறை தேர்தலில் தவைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நிஷாந்த ரணதுங்க

இதேநேரம், போட்டியில் தோல்வியடையும் போதுதான் அனைவரும் எம்மை திட்டுவார்கள். ஆனால் வெற்றி பெறும் போது அதே தரப்பினர் மௌனிகளாக மாறிவிடுகின்றனர். உதாரணமாக அண்மையில் நிறைவுக்கு வந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி-20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. அதன் போது எவரும் வாய் திறந்து பேசவுமில்லை, பாராட்டவும் இல்லை. ஆனால் ஏதாவது ஒரு போட்டியில் தோல்வியடையும் போது என்னுடைய தலைமைத்துவம் தான் காரணம், எனது பெயரில் உள்ள ஏதோ ஒரு சூதாட்ட நிறுவனத்துக்காக போட்டியை ஆட்ட நிர்ணயம் செய்துவிட்டதாகவும் ஒரு சிலர் குற்றம் சுமத்துவார்கள்.

ஆனால் ஒரு பௌத்தனாக, அவ்வாறு சூதாட்ட நிறுவனங்களை நடத்தவோ, அதற்கு நிதியளிக்கவோ நான் ஒருபோதும் துணை போகவில்லை. எனவே எனக்கு எதிராக பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றவர்களுக்கு சரியான நேரத்தில் கடவுள் நிச்சயம் தகுந்த தண்டனையை கொடுத்துவிடுவான்.

இறுதியாக கடந்த 2 வருடங்களில் நாங்கள் இலங்கை கிரிக்கெட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றம் அடையச் செய்தோம். எனவே இந்த தலைவர் பதவிக்கு பொருத்தமான ஒரே நபர் நான் மட்டும்தான். இதன்படி, இம்முறை தேர்தலில் வாக்களிக்கவுள்ள 80 சதவீதமான சங்கங்கள் எனக்கு தான் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் மொஹான் டி சில்வா, கே. மதிவானன், செயலாளர் கமாண்டர் ரொஷான் பியன்வல, இலங்கை கிரிக்கெட்டின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்