சனத் ஜெயசூரியவின் 22 வருட சாதனையை தகர்த்த ரோஹிட் சர்மா

69

இந்திய கிரிக்கெட் அணியின் உபதலைவரும் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீராருமான ரோஹிட் சர்மா இந்த ஆண்டில் (2019) அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து நேற்றைய (22) போட்டியுடன் ஆண்டின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அதிகூடிய ஓட்டங்களை குவித்து இலங்கையின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூரியவின் சாதனையை தகர்த்துள்ளார். 

தாகூரின் இறுதிநேர அதிரடியால் ஒருநாள் தொடரும் இந்தியா வசம்

மேற்கிந்திய தீவுகளுடனான தீர்மானமிக்க இறுதி ……….

இந்தியாவுக்கு இருதரப்பு தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி அங்கு இந்திய கிரிக்கெட் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட இரு கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இதில் டி20 மற்றும் ஒருநாள் சர்வதேச தொடர் ஆகிய இரு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றியிருந்தது. 

ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கின்ற இறுதி ஒருநாள் போட்டி நேற்று (22) நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி இரண்டாவதாக துடுப்பெடுத்தாடியது. இதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய உபதலைவர் ரோஹிட் சர்மா 63 பந்துகளில் 63 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.  

1997ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான சனத் ஜெயசூரிய ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளில் 2,387 ஓட்டங்களை குவித்து, ஒரு ஆண்டில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அதிகூடிய சர்வதேச ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை பதிவு செய்திருந்தார். 

குறித்த சாதனையை 22 ஆண்டுகளின் பின்னர் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோஹிட் சர்மா முறியடித்துள்ளார். நேற்றைய போட்டி ஆரம்பமாகுவதற்கு முன்னர் ரோஹிட் சர்மா இந்தாண்டில் 2,379 சர்வதேச ஓட்டங்களை குவித்திருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் 9 ஓட்டங்களை பூர்த்தி செய்யும் போது ரோஹிட் சர்மா குறித்த சாதனையை முறியடித்தார். 

ரோஹிட் சர்மா இந்தாண்டில் (2019) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 உள்ளிட்ட அனைத்து சர்வதேச போட்டிகளிலும் (47) சேர்த்து 10 சதங்கள், 10 அரைச்சதங்களுடன் மொத்தமாக 2,442 ஓட்டங்களை குவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் (2019) ஒருநாள் சர்வதேச அரங்கில் அதிகூடிய ஓட்டங்களை குவித்த வீரர் என்ற பெருமையையும் 1,490 ஓட்டங்களுடன் ரோஹிட் சர்மா தனதாக்கியுள்ளார்.  

2019ஆம் ஆண்டில் அதிகூடிய ஒருநாள் சர்வதேச ஓட்டங்களை குவித்தவர்கள் 

  1. ரோஹிட் சர்மா (இந்தியா) 27 இன்னிங்ஸ் – 1,490 ஓட்டங்கள் 
  2. விராட் கோஹ்லி (இந்தியா) 25 இன்னிங்ஸ் – 1,377 ஓட்டங்கள் 
  3. ஷை ஹோப் (மே.தீவுகள்) 26 இன்னிங்ஸ் – 1,345 ஓட்டங்கள் 
  4. அரோன் பிஞ்ச் (ஆஸி.) 23 இன்னிங்ஸ் – 1,141 ஓட்டங்கள்
  5. பாபர் அஸாம் (பாக்.) 20 இன்னிங்ஸ் – 1,092 ஓட்டங்கள் 

குறித்த பட்டியலில் இலங்கை அணி வீரர்கள் வரிசையில் 15 இன்னிங்ஸ்களில் வெறும் 646 ஓட்டங்களை மாத்திரம் குவித்த குசல் பெரேரா 29ஆவது இடத்தில் காணப்படுகின்றார். 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<