தாகூரின் இறுதிநேர அதிரடியால் ஒருநாள் தொடரும் இந்தியா வசம்

51
BCCI Twitter

மேற்கிந்திய தீவுகளுடனான தீர்மானமிக்க இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுக்களினால் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஒருநாள் சர்வதேச தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. 

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்குமிடையிலான இருதரப்பு தொடரின் இறுதி தொடரான ஒருநாள் சர்வதேச தொடரின் தொடர் வெற்றியாளரை தீர்மானிப்பதற்கான மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று (22) கட்டக்கில் நடைபெற்றது. 

மேற்கிந்திய தீவுகளுக்கு பதிலடி கொடுத்த இந்தியா

இந்திய – மேற்கிந்திய தீவுகள்……

மேற்கிந்திய தீவுகள் அணியில் மாற்றமெதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், இந்திய அணியில் ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த போட்டியில் உபாதைக்குள்ளான தீபக் சஹாருக்கு பதிலாக குழாமில் இணைக்கப்பட்ட நவ்தீப் சைனி ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்டார். 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய எவின் லுவிஸ் – ஷை ஹோப் ஜோடி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த நிலையில் 15ஆவது ஓவரிலேயே முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது. 

மிகவும் நிதானமாக துடுப்பெடுத்தாடிய எவின் லுவிஸ் 21 ஓட்டங்களை பெற்று அரங்கம் திரும்பினார். எவின் லுவிஸின் ஆட்டமிழப்பை தொடர்ந்து மறுமுனையில் ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷை ஹோப் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த ரொஸ்டன் ச்சேஸ் – சிம்ரொன் ஹெட்மெயர் ஜோடி அணிக்கு ஆறுதல் கொடுத்தது. 

இருவரும் இணைப்பாட்டமாக 62 ஓட்டங்களை பெற்ற வேளையில் சிம்ரொன் ஹெட்மெயர் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஹெட்மெயரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து மறுமுனையில் இணைப்பாட்டம் புரிந்த ரொஸ்டன் ச்சேஸ் அடுத்த இரண்டு ஓவர்களில் ஆட்டமிழந்தார். இவ்வேளையில் மேற்கிந்திய தீவுகள் அணி 144 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து மீண்டும் தடுமாறியது. 

ஐந்தாவது விக்கெட்டுக்காக இணைந்த நிக்கொலஸ் பூரண் மற்றும் அணித்தலைவர் கிரண் போல்லார்ட் ஜோடி மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலு சேர்த்தது. இருவரும் அரைச்சதம் கடக்க இணைப்பாட்டம் 135 ஓட்டங்களை எட்டியது. இந்நிலையில் 5ஆவது ஒருநாள் சர்வதேச அரைச்சதம் கடந்த நிக்கொலஸ் பூரண் 3 சிக்ஸர்கள், 10 பௌண்டரிகளுடன் 89 ஓட்டங்களை குவித்து 48ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். 

பின்னர் அணித்தலைவர் கிரண் பொல்லார்ட்டின் அதிரடியுடன் மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.   

ஆடுகளத்தில் அணித்தவைர் கிரண் பொல்லார்ட் 7 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் 74 ஓட்டங்ளுடனும், ஜேசன் ஹோல்டர் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடிய நவ்தீப் சைனி 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாகூர் மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர். 

பின்னர், 316 என்ற கடின வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணிக்கு இன்றைய போட்டியிலும் சிறந்த ஆரம்பம் கிடைத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராகளான ரோஹிட் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் அரைச்சதங்கள் கடக்க முதல் விக்கெட் இணைப்பாட்டம் 122 ஓட்டங்களாக பதிவாகியது.

பானிபூரி விற்று ஐ.பி.எல் மூலம் கோடீஸ்வரனான 17 வயது இளைஞன்

மும்பையை சேர்ந்த இளம் வீரர் யஷஸ்வி……

ஒருநாள் அரங்கில் 43ஆவது அரைச்சதம் கடந்த ரோஹிட் சர்மா 63 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் கே.எல் ராகுலுடன் அணித்தலைவர் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 45 ஓட்டங்கள் பகிரப்பட்ட வேளையில் ஒருநாள் அரங்கில் 5ஆவது அரைச்சதம் கடந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கே.எல் ராகுல் 77 ஓட்டங்களுடன் அரங்கம் திரும்பினார். 

அதனை தொடர்ந்து ஆடுகளம் நுழைந்த சிரேயஸ் ஐயர் (7), ரிஷப் பண்ட் (7), கேதார் யாதவ் (9) ஆகியோர் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இந்திய அணி மோசமான நிலையை அடைந்தது. இறுதியில் வெற்றிக்கு 10 ஓவர்களில் 5 விக்கெட் கைவசமிருக்க 79 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பொறுப்புணர்ச்சியுடன் துடுப்பெடுத்தாடிவந்த அணித்தலைவர் விராட் கோஹ்லி ஒருநாள் அரங்கில் தனது 55ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்து 47ஆவது ஓவரில் 85 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  

இறுதிக் கட்டத்தில் 23 பந்துகளுக்கு 30 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் வேகப் பந்துவீச்சாளர் சர்துல் தாகூர் ஆடுகளம் நுழைந்தார். யாரும் எதிர்பாராத விதத்தில் அதிரடி காட்டிய தாகூர் இந்திய அணியின் வெற்றியை 8 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்டுக்களினால் உறுதி செய்தார். 6  பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட தாகூர் ஒரு சிக்ஸர், 2 பௌண்டரிகளுடன் 17 ஓட்டங்களையும், ஜடேஜா 39 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காதிருந்தனர்.  

மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சில் கீமோ போல் 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அல்சாரி ஜோசப், ஜேசன் ஹோல்டர் மற்றும் சில்டொன் கொட்ரெல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணியின் இவ்வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2-1 என்ற அடிப்படையில் இந்தியா வசமானது. 

முத்தரப்பு இளையோர் ஒருநாள் தொடரில் இலங்கை சம்பியன்

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று….

போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோஹ்லியும், தொடர் ஆட்டநாயகனாக ரோஹிட் சர்மாவும் தெரிவு செய்யப்பட்டனர். இதேவேளை, இந்திய அணி முன்னாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெற்றிருந்த டி20 சர்வதேச தொடரையும் 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

போட்டியின் சுருக்கம்.

மேற்கிந்திய தீவுகள் – 315/5 (50) நிக்கொலஸ் பூரண் 89 (64), கிரண் பொல்லார்ட் 74 (51), நவ்தீப் சைனி 2/58, ரவீந்திர ஜடேஜா 1/54

இந்தியா – 316/6 (48.4) – விராட் கோஹ்லி 85 (81), கே.எல் ராகுல் 77 (89), ரோஹிட் சர்மா 63 (63), கீமோ போல் 3/59 (9.4), அல்சாரி ஜோசப் 1/53 (8)

முடிவு – இந்தியா 4 விக்கெட்டுக்களினால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<