டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய ஸ்டீவ் ஸ்மித்

81
GettyImages

சுற்றுலா இந்திய – நியூசிலாந்து மற்றும் சுற்றுலா ஜிம்பாப்வே – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகள் நிறைவுக்குவந்துள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரப்படுத்தலை இன்று (26) வெளியிட்டுள்ளது. 

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் இந்திய அணியை எதிர்த்தாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (24) நிறைவுக்குவந்த நிலையில் குறித்த போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்றிருந்தது.

நியூசிலாந்திடம் படுதோல்வியடைந்த இந்திய அணி

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட்…

இதேவேளை டெஸ்ட் சம்பியன்ஷிப் அந்தஸ்து அற்ற ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஜிம்பாப்வே அணியை சொந்த மண்ணில் எதிர்கொண்ட பங்களாதேஷ் அணி நேற்று (25) நிறைவுக்குவந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 106 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருந்தது. 

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை

நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வெறும் 2 ஓட்டங்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 19 ஓட்டங்கள் என இரு இன்னிங்சுகளிலும் பிரகாசிக்கத் தவறிய இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, தரவரிசையில் முதலிடத்திலிருந்து இரண்டாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். இதன் மூலம் இரண்டாமிடத்தில் இருந்த அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். 

அதேபோன்று முதல் இன்னிங்ஸில் 89 ஓட்டங்களை குவித்து  நியூசிலாந்து அணிக்கு பலம் கொடுத்த அணித்தலைவர் கேன் வில்லியம்சன் நான்காமிடத்திலிருந்து அவுஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேனை பின்தள்ளி மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதேவேளை இந்திய அணியின் சடீஸ்வர் புஜாரா 7ஆவது இடத்திலிருந்து 9ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். இதனால் இங்கிலாந்தின் ஜோ ரூட் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

மேலும் இந்திய அணியின் மோசமான துடுப்பாட்டத்திற்கு மத்தியிலும் போட்டியில் மொத்தமாக 75 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அஜிங்கியா ரஹானே ஒரு நிலை உயர்ந்து 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அத்துடன் இரண்டாவது இன்னிங்ஸில் அரைச்சதம் கடந்து இந்திய அணிக்கு ஆறுதல் கொடுத்த மயங்க் அகர்வால் வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (727) முதல் பத்து நிலைகளுக்குள் புகுந்துள்ளார். 

தொடர் டெஸ்ட் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது பங்களாதேஷ்

ஜிம்பாப்வேயுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 106…

நியூசிலாந்து வீரர்களான ரொஸ் டெய்லர் 3 நிலைகள் உயர்ந்து 681 தரவரிசை புள்ளிகளுடன் 13ஆவது நிலைக்கும், கொலின் டி க்ரெண்ட்ஹோம் வாழ்நாள் அதிக தரவரிசை புள்ளிகளுடன் 6 நிலைகள் உயர்ந்து 33ஆவது நிலைக்கும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டொம் ப்ளுன்டெல் 5 நிலைகள் உயர்ந்து 475 தரவரிசை புள்ளிகளுடன் 64ஆவது நிலைக்கும் முன்னேறியுள்ளனர். 

ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் ஆட்டமிழக்காது இரட்டை சதம் விளாசிய பங்களாதேஷ் அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரரான முஷ்பிகூர் ரஹீம் 5 நிலைகள் உயர்ந்து 655 தரவரிசை புள்ளிகளுடன் 20ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார். மேலும் முஷ்பிகூர் ரஹீமுடன் இணைந்து 222 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று டெஸ்ட் அரங்கில் தனது 9ஆவது சதத்தை பூர்த்தி செய்த மொமினுல் ஹக் 556 தரவரிசை புள்ளிகளுடன் 39ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார். 

மேலும் டெஸ்ட் அரங்கில் தனது சிறந்த துடுப்பாட்ட ஓட்டத்தை பதிவுசெய்த நஜ்முல் ஹூஸைன் சாண்டே வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (288) 11 நிலைகள் உயர்ந்து 104ஆவது நிலைக்கு உயர்ந்துள்ளார். இதேவேளை தனி மனிதனாக துடுப்பாட்டத்தில் சதம்கடந்து ஜிம்பாப்வே அணிக்கு பலம்கொடுத்த அணித்தலைவர் கிரேக் ஏர்வின் வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (549) 15 நிலைகள் உயர்ந்து 42ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார். 

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை

இந்திய அணியுடனான டெஸ்ட் வெற்றிக்கு நியூசிலாந்து அணியில் பந்துவீச்சில் முக்கிய புள்ளியாக திகழ்ந்து மொத்தமாக 9 விக்கெட்டுக்களை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌத்தி 8 நிலைகள் உயர்ந்து மீண்டும் முதல் 10 நிலைகளுக்குள் புகுந்துள்ளார். இவர் 794 தரவரிசை புள்ளிகளுடன் தற்போது 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

இந்திய அணி வீரர்களான ரவி அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் நியூசிலாந்து அணியுடனான போட்டியில் பிரகாசிக்க தவறியதன் காரணமாக தரவரிசையில் தங்களது இடங்களை இழந்துள்ளனர். இதன் காரணமாக அவுஸ்திரேலியாவின் ஜொஸ் ஹெஸில்வூட் 10ஆவது நிலையிலிருந்து 8ஆவது நிலைக்கு உயர்ந்துள்ளார். அத்துடன் மேற்கிந்திய தீவுகளின் கிமா ரோச் 10ஆவது நிலைக்கு உயர்ந்துள்ளார். 

இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களுடன் மொத்தமாக போட்டியில் 5 விக்கெட்டுக்களை பதம்பார்த்த ட்ரெண்ட் போல்ட் 4 நிலைகள் உயர்ந்து 13ஆவது நிலைக்கும், இந்திய அணிக்கு பந்துவீச்சில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றிய பலம் கொடுத்த இஷாந்த் ஷர்மா ஒரு நிலை உயர்ந்து 17ஆவது நிலைக்கும் முன்னேறியுள்ளார். 

இதேவேளை ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு பந்துவீச்சில் முக்கிய புள்ளிகளாக திகழ்ந்த நயீம் ஹஸன் மற்றும் அபு ஜெயித் ஆகிய வீரர்கள் வாழ்நாள் அதிக தரவரிசை புள்ளிகளுடன் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். மொத்தமாக 9 விக்கெட்டுக்களை கைப்பற்றிய நயீம் ஹஸன் 29 நிலைகள் உயர்ந்து 410 தரவரிசை புள்ளிகளுடன் 38ஆவது நிலைக்கும், 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அபு ஜெயித் 331 தரவரிசை புள்ளிகளுடன் 11 நிலைகள் உயர்ந்து 46ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார். 

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தொடர்ந்தும் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பெட் கம்மிண்ஸ் முதலிடத்திலும், நியூசிலாந்தின் நைல் வேக்னர் இரண்டாமிடத்திலும், மேற்கிந்திய தீவுகளின் ஜேசன் ஹோல்டர் மூன்றாமிடத்திலும் காணப்படுகின்றனர். 

ஆசிய பதினொருவர் குழாமில் திசர, மாலிங்க

உலக பதினொருவர் அணிக்கும் ஆசிய பதினொருவர் அணிக்கும் இடையில் அடுத்த…

டெஸ்ட் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசை

சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. நியூசிலாந்து அணியுடனான தொடரில் இரு துறைகளிலும் பிரகாசிக்கத் தவறிய ரவி அஷ்வின் நான்காமிடத்திலிருந்து ஐந்தாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டாக் 298 தரவரிசை புள்ளிகளுடன் நான்காமிடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் தொடர்ந்தும் ஜேசன் ஹோல்டர் நீடிக்கின்றார். 

  >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<