அயர்லாந்துடனான மோதல் இலங்கைக்கு ஒரு சவால்

184

கடந்த வாரம் ஆரம்பமாகிய T20 உலகக் கிண்ணத்தின், 08ஆவது போட்டியில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடாத்தவிருக்கின்றன.

T20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்று குழு A இல் இடம்பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கும் அயர்லாந்து அணிக்கும் இடையிலான மோதல் இரண்டு அணிகளுக்கும், இந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாவது போட்டியாக அமைகின்றது.

நமீபியாவிற்கு எதிரான வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தினை ஆரம்பிக்குமா இலங்கை???

வரலாறு

T20 உலகக் கிண்ண பதிவுகளை நோக்கும் போது T20 உலகக் கிண்ணத்தின் மிக வெற்றிகரமான அணியாக உள்ள இலங்கை அணியும் அயர்லாந்து அணியும் ஒரேயொரு போட்டியில் மாத்திரமே இதற்கு முன்னர் விளையாடியிருக்கின்றன.

கடந்த 2009ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, அயர்லாந்து வீரர்களை 09 ஓட்டங்களால் வீழ்த்தியிருந்தது.

இந்த உலகக் கிண்ண போட்டி தவிர இரு அணிகளும் வேறு எந்த T20 போட்டிகளிலும் ஆடியிருக்கவில்லை. இதேநேரம் அயர்லாந்து T20 உலகக் கிண்ணத்தில் ஆடிய போட்டிகளை நோக்கும் போது 25% போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றிருக்கின்றது. அயர்லாந்து T20 உலகக் கிண்ணத்தில் வைத்த சிறந்த பதிவாக அவ்வணி 2009ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் சுபர் 8 சுற்றுக்கு முன்னேறியதனை குறிப்பிட முடியும்.

மீண்டும் T20 King ஆகும் கனவுடன் உள்ள பாகிஸ்தான்

இலங்கை அணி

இலங்கை கிரிக்கெட் அணி T20 உலகக் கிண்ணத்தில் தமது முதல் போட்டியில் நமீபிய அணிக்கு எதிராக இலகு வெற்றியினைப் பதிவு செய்து சிறப்பான ஆரம்பத்தினை பெற்றிருக்கின்றது. எனினும், அயர்லாந்து திருப்பு முனையான ஆட்டங்களை வெளிப்படுத்தும் ஒரு அணியாக காணப்படுவதனால் இலங்கை அணி, தமது எதிராளிகளை இலகுவாக எண்ணிவிடக்கூடாது.

இதேநேரம், நமீபிய அணிக்கு எதிராக இலங்கை வெற்றியினைப் பதிவு செய்த போதும் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள், முன்வரிசையில் ஆடிய தினேஷ் சந்திமால் போன்றோர் தடுமாற்றத்தினை வெளிப்படுத்தியதனை அவதானிக்க கூடியதாக இருந்தது. எனவே, இலங்கை கிரிக்கெட் அணி தமது முன்வரிசை துடுப்பாட்டத்தினை கட்டமைத்தே இரண்டாவது T20 போட்டியில் களமிறங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் காணப்படுகின்றது.

அதன்படி, இலங்கை அணி அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஓரிரு மாற்றங்களை மேற்கொள்வதனை எதிர்பார்க்க முடியும். அதுதவிர இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறை குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் பானுக்க ராஜபக்ஷ ஆகியோரினால் பலப்படுத்தப்படுகின்றது. அதோடு, இலங்கை அணியின் பந்துவீச்சுத்துறை சாமிக்க கருணாரட்ன, துஷ்மன்த சமீர மற்றும் மகீஷ் தீக்ஷன போன்ற வீரர்களால் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

எதிர்பார்ப்பு வீரர்

மகீஷ் தீக்ஷன – நமீபிய அணிக்கு எதிரான போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை வென்றிருந்த இளம் வீரர் மகீஷ் தீக்ஷன அயர்லாந்து அணிக்கு

எதிரான போட்டியிலும் ஜொலிக்க எதிர்பார்க்கப்படும் வீரர்களில் ஒருவராக இருக்கின்றார்.

மிக அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி இலங்கை அணியின் தற்போதைய சுழல் பந்துவீச்சு வீரர்களில் முக்கிய ஒருவராக மஹீஷ் மாறியுள்ளார்.இதேநேரம் சுழல்பந்துவீச்சுக்கு சாதக நிலைமைகள் கொண்ட அபுதாபி ஆடுகளம் 21 வயது நிரம்பிய மகீஷ் தீக்ஷனவிற்கு, தனது கன்னி உலகக் கிண்ண தொடரில் திறமையினை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் மற்றுமொரு சந்தர்ப்பமாகும்.

இலங்கை குழாம்

தசுன் ஷானக (தலைவர்), தனன்ஜய டி சில்வா (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மன்த சமீர, அகில தனன்ஜய, மகீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார

அயர்லாந்து அணி

இந்த T20 உலகக் கிண்ணத்தினை நெதர்லாந்து அணிக்கு எதிரான வெற்றியுடன் ஆரம்பம் செய்திருக்கும் அயர்லாந்து, கடந்த காலங்களில் மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளை உலகக் கிண்ணப் போட்டிகளில் வீழ்த்திய பதிவுகளை தங்களிடம் வைத்திருக்கின்றது. எனவே, எந்த நேரத்திலும் தமது எதிரணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஒரு அணியாக அயர்லாந்து காணப்படுகின்றது.

கேர்டிஸ் கேம்பரின் ஹெட்ரிக் சாதனையுடன் அயர்லாந்து அபார வெற்றி

அவ்வணியின் துடுப்பாட்டத் துறையினை நோக்கும் போது கெவின் ஒ பிரய்ன் முக்கிய துடுப்பாட்ட வீரராக காணப்படுகின்றார். இதேநேரம், ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் போல் ஸ்டெர்லிங்கும் வெளிநாட்டு உள்ளூர் T20 தொடர்களில் ஆடி அதிக அனுபவத்தினை தன்னகத்தே கொண்டிருக்கின்றார்.

இந்த வீரர்கள் தவிர அணித்தலைவர் அன்ட்ருவ் பல்பிர்னி மற்றும் கரேத் டெலானி போன்ற வீரர்கள் அயர்லாந்து கிரிக்கெட் அணியின் மேலதிக துடுப்பாட்டப் பலமாகும்.

அவ்வணியின் பந்துவீச்சு துறையினை நோக்கும் போது சகலதுறைவீரரான கரேத் டெலானி, வலதுகை வேகப்பந்துவீச்சாளர் மார்க் அடைர் போன்றோர் அணிக்கு நம்பிக்கை தருகின்றனர்.

எதிர்பார்ப்பு வீரர்

போல் ஸ்டெர்லிங் – லங்கா பிரீமியர் லீக், பாகிஸ்தான் சுபர் லீக் மற்றும் அபுதாபி T10 லீக், இங்கிலாந்தின் தி ஹன்ட்ரட் லீக் என பல்வேறு நாடுகளின் உள்ளூர் T20 தொடர்களில் ஆடி மிகவும் பரந்த அனுபவத்தினை வைத்திருக்கும் போல் ஸ்டெர்லிங்கே அயர்லாந்து அணிக்கு ஜொலிக்க எதிர்பார்க்கப்படும் வீரர். இன்னுமொரு விதத்தில் கூறப்போனால், இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்பார்க்கப்படும் முக்கிய வீரரும் இவராவார்.எனவே, போல் ஸ்டெர்லிங் அதிக ஓட்டவேகத்தில் அயர்லாந்து அணிக்காக ஓட்டங்கள் பெறும் போது அவ்வணி இலங்கைக்கு எதிரான மோதலில் இலகுவில் சிறந்த நிலையொன்றினை அடைந்து கொள்ளும் வாய்ப்பு காணப்படுகின்றது.

அயர்லாந்து குழாம்

அன்ட்ருவ் பல்பைனி (அணித்தலைவர்), மார்க் அடைர், கேர்டிஸ் கெம்பர், கரேத் டெலானி, ஜோர்ஜ் டொக்ரேல், ஜோஸ் லிட்டில், என்டி மெக்பிரைன், கெவின் ஓ பிரெய்ன், நெயில் ரொக், சிமி சிங், போல் ஸ்டெர்லிங், ஹர்ரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் வைட், கிரைக் யங்

இறுதியாக,

ஸ்கொட்லாந்து வீரர்கள் பங்களாதேஷினை வீழ்த்தியது போன்று T20 உலகக் கிண்ணத்தில் சில அதிர்ச்சி சம்பவங்களும் இடம்பெற முடியும். அதற்கான வாய்ப்பு இலங்கை – அயர்லாந்து அணிகள் இடையிலான போட்டியிலும் காணப்படுகின்றது.

மறுமுனையில், இலங்கை அணி T20 உலகக் கிண்ணத்தின் சுபர் 12 சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பினை தக்கவைப்பதற்கு அயர்லாந்து அணியுடனான போட்டியில் வெற்றி பெறுவதும் அவசியம். எனவே, விடயங்கள் எவ்வாறு அமையப்போகின்றது என்பதனை அயர்லாந்து – இலங்கை அணிகள் ஆடும் போட்டியின் போதே எங்களுக்கு கண்டுகொள்ள முடியுமாக இருக்கும்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<