மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தில் என்ன செய்ய வேண்டும்?

127
CWI Media

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான பில் சிம்மோன்ஸ் தமது வேகப் பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்துக்கு எதிராக அழுத்தம் உருவாக்க, தமது துடுப்பாட்ட வீரர்கள் உறுதியான ஆரம்பம் ஒன்றை காட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.   

இங்கிலாந்தை வீழ்த்தி மீண்டும் சாதனை படைப்போம் – பில் சிம்மென்ஸ்

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இங்கிலாந்து வீரர்களுடன் ஜூலை மாதம் 08ஆம் திகதி தொடக்கம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடர், கொரோனா வைரஸ் தாக்கத்திற்குப் பின்னர், நடைபெறவுள்ள முதல் சர்வதேச கிரிக்கெட் தொடராக அமையவுள்ள நிலையில், தொடரில் பங்கேற்கும் மேற்கிந்திய தீவுகள் அணியினர் இங்கிலாந்துக்கு ஏற்கனவே சென்று பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் தங்களிடையே மோதிக் கொள்ளும் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி ஒன்றும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (30) நடைபெறுகின்றது.   

இவ்வாறாக மேற்கிந்திய தீவுகள் அணியினர் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள சந்தர்ப்பம் ஒன்றிலேயே அதன் தலைமைப் பயிற்சியளார் பில் சிம்மோன்ஸ் தமது துடுப்பாட்ட வீரர்கள் இங்கிலாந்தை வீழ்த்த உறுதியான ஆரம்பத்தினைக் காட்ட வேண்டும் என கருத்து வெளியிட்டிருக்கின்றார்.  

”நாங்கள் சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளும் போது (குறிப்பிட்ட சுற்றுத் தொடரில்) விளையாடும் முதல் போட்டியின் பின்னரே, உண்மையான கிரிக்கெட்டை விளையாட ஆரம்பிப்போம். உண்மையைச் சொல்லப் போனால் இந்த விடயத்தினை எங்களது தொகுதிக்குள் இருந்து அகற்ற முயல்கின்றோம். நாம், (இந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இடம்பெறவுள்ள) சௌத்தம்ப்டன் நகருக்குச் செல்லும் போது முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டும்.” 

”எங்களிடம் இருக்கும் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்கள் அனுபவம் கொண்டவர்கள். மனநிலை ரீதியாக அவர்கள் வலிமையானவர்கள் என நினைக்கின்றேன். எனவே, நான் எங்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும்.” என பில் சிம்மோன்ஸ் குறிப்பிட்டிருந்தார்.  

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியினர் பலமான அணியாக இருந்த போதும், அண்மைய நாட்களில் அதன் துடுப்பாட்ட வீரர்கள் பெரிய ஓட்ட இலக்கு ஒன்றினை கட்டியெழுப்புவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தினை கடந்த ஆண்டு தமது மண்ணில் வைத்து நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என வீழ்த்திய போதும் இங்கிலாந்து மண்ணில் 1988ஆம் ஆண்டுக்குப் பின்னர் டெஸ்ட் தொடர்கள் எதிலும் வெற்றிபெற்றிருக்கவில்லை.  

எனவே, நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில் நல்ல முடிவு ஒன்றினைப் பெற சிறந்த துடுப்பாட்டத் தொகுதி ஒன்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இருக்க வேண்டும் என்ற வகையிலேயே பில் சிம்மோன்ஸின் கருத்து அமைந்திருக்கின்றது.  

மறுமுனையில் இரண்டு கிரிக்கெட் அணிகளினதும் நட்சத்திர வீரர்கள் பற்றியும் கருத்து வெளியிட்ட பில் சிம்மோன்ஸ், நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடர் சகலதுறை வீரர்களான மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இடையிலான பலப்பரீட்சையாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

”ஜேசன் (ஹோல்டர்) இருப்பதால் பென் (ஸ்டோக்ஸ்) எப்போதும் முதல் இலக்கத்தை விரும்புவார். இதனால், (இருவருக்கும் இடையே) பலப்பரீட்சை ஒன்று எப்போதும் இருக்கும்.” என அவர் தெரிவித்தார். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<