ஆசிய பதினொருவர் குழாமில் திசர, மாலிங்க

102

உலக பதினொருவர் அணிக்கும் ஆசிய பதினொருவர் அணிக்கும் இடையில் அடுத்த மாதம் பங்களாதேஷில் நடைபெறவுள்ள இரு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆசிய பதினொருவர் குழாமில் இலங்கை வீரர்களான திசர பெரேரா மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

பங்களாதேஷ் நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த ஷேக் முஜீபுர் ரஹ்மான் அவர்களின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் முகமாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது ஆசிய பதினொருவர் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில் இரண்டு டி20 போட்டிகளை நடாத்த கடந்த வருடம் ஏற்பாடு செய்திருந்தது. 

ஆசிய, உலக பதினொருவர் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம்

ஆசிய பதினொருவர் நட்சத்திர அணிக்கும் உலக பதினொருவர் நட்சத்திர அணிக்குமிடையில்…

அதன் அடிப்படையில் அடுத்த மாதம் குறித்த இரண்டு டி20 போட்டிகளையும் நடாத்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தொடரில் பங்கேற்கும் ஆசிய மற்றும் உலக பதினொருவர் அணிகளின் இரு குழாம்கள் இன்று (25) பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. 

ஆசிய பதினொருவர் குழாம் 

15 பேர் அடங்கிய ஆசிய பதினொருவர் குழாமில் அதிக வீரர்களாக இந்திய அணியிலிருந்து ஆறு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவர் சௌரவ் கங்குலி குறித்த தொடருக்காக விராட் கோஹ்லி, சிகார் தவான், குல்தீப் யாவத் மற்றும் மொஹமட் ஷமி ஆகிய 4 இந்திய வீரர்களின் பெயரை பரிந்துரை செய்திருந்தார். 

இந்நிலையில் தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள குழாத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கே.எல் ராகுல் மற்றும் இளம் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் ரிஷப் பண்ட் ஆகியோர் மேலதிகமாக இணைக்கப்பட்டு மொத்தமாக 6 இந்திய வீரர்கள் குழாமில் இடம்பெற்றுள்ளனர். 

குறித்த குழாமில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி அதிரடி சகலதுறை வீரர் திசர பெரேரா மற்றும் அனுபவ வேகப் பந்துவீச்சாளரும் இலங்கை டி20 அணியின் தலைவருமான லசித் மாலிங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

அணித்தலைவராக இறுதி ஒருநாள் தொடரில் ஆடவுள்ள மொர்தஸா

சுற்றுலா ஜிம்பாப்வே அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச…

இதேவேளை பங்களாதேஷ் அணியிலிருந்து 4 வீரர்கள் குறித்த குழாமில் இடம்பெற்றுள்ளனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தமிம் இக்பால் மற்றும் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம் மற்றும் வேகப் பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகிய 4 வீரர்கள் குழாமில் இடம்பெற்றுள்ளனர். 

ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் குழாமில் இடம்பெற்றுள்ளனர். ஏகப்பட்ட டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ள ரஷீட் கான் மற்றும் இளம் வீரர் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ளனர். மேலும், நேபாள கிரிக்கெட் அணியில் விளையாடும் அவ்வணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளரான சண்டீப் லமிச்சேன் ஒரேயொரு நேபாள வீரராக குழாமில் இடம்பெற்றுள்ளார். 

இதேவேளை, ஆசிய நாடுகளில் ஒன்றான, நடைமுறை டி20 சர்வதேச தரவரிசையில் முதலிடத்தில் காணப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலிருந்து ஒரு வீரர் கூட குறித்த குழாமில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டி20 லீக் தொடர்களில் ஒன்றான பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் நடைபெறுவதன் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் குறித்த குழாத்தில் உள்ளடக்கப்படவில்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். 

குறித்த குழாமில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்களாக கே.எல் ராகுல் மற்றும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி ஆகியோர் ஒரு டி20 போட்டியில் மாத்திரம் விளையாடவுள்ளதாகவும், அது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் நஸ்முல் ஹசன் மேலும் தெரிவித்துள்ளார்.  

வெளியிடப்பட்டுள்ள ஆசிய பதினொருவர் குழாத்தில் குறித்த அணியின் தலைவர் யார் என அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

15 பேர் அடங்கிய ஆசிய பதினொருவர் குழாம்

கே.எல் ராகுல், விராட் கோஹ்லி, சிகார் தவான், ரிஷப் பண்ட், லிட்டன் தாஸ், தமீம் இக்பால், முஸ்பிகுர் ரஹீம், திசர பெரேரா, ரஷீட் கான், குல்தீப் யாதவ், மொஹமட் ஷமி, முஸ்தபிசுர் ரஹ்மான், முஜீப் உர் ரஹ்மான், லசித் மாலிங்க, சண்டீப் லமிச்சேன்

உலக பதினொருவர் குழாம்

குறித்த இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக உலக பதினொருவர் அணியின் 12 பேர் அடங்கிய குழாம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள குழாத்தின் படி உலக பதினொருவர் அணியின் தலைவராக கடந்த வாரம் அணித்தலைவர் பதவியைத் துறந்த தென்னாபிரிக்க அணி வீரர் பாப் டு ப்ளெஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

குறித்த உலக பதினொருவர் குழாமில் மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து அதிக வீரர்களாக 4 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல், துடுப்பாட்ட வீரர் நிக்கொலஸ் பூரண், சகலதுறை வீரர் கிரண் பொல்லார்ட் மற்றும் வேகப் பந்துவீச்சாளரான சில்டொன் கொட்ரெல் ஆகியோர் இவ்வாறு குழாமில் இடம்பெற்றுள்ளனர். 

அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணியிலிருந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ் மற்றும் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஜொனி பெயர்ஸ்டோ ஆகியோருடன் சுழற் பந்துவீச்சாளரான ஆதில் ரஷீட் ஆகிய மூன்று வீரர்கள் குழாமில் இடம்பெற்றுள்ளனர். தென்னாபிரிக்க அணியிலிருந்து இரண்டு வீரர்கள் குழாமில் இடம்பெற்றுள்ளனர். 

நியூசிலாந்திடம் படுதோல்வியடைந்த இந்திய அணி

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட்…

அணித்தலைவர் பாப் டு ப்ளெஸிஸ் உடன் இளம் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி ங்கிடி பெயரிடப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியிலிருந்து ஒரேயொரு வீரராக வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் மெக்லேனகன் குழாமில் இடம்பெற்றுள்ளனர். மேலும் அவுஸ்திரேலிய அணியிலிருந்து ஒரேயொரு வீரராக வேகப்பந்துவீச்சாளர் அண்ட்ரூ டை குழாமில் இடம்பெற்றுள்ளார். அத்துடன் ஜிம்பாப்வே அணியிலிருந்தும் ஒரேயொரு வீரராக ப்ரெண்டன் டைலர் இடம்பெற்றுள்ளார்.

ஆசிய பதினொருவர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் யார் என்பது அறிவிக்கப்படாத நிலையில் உலக பதினொருவர் அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டொம் மூடி பெயரிடப்பட்டுள்ளார். 

12 பேர் அடங்கிய உலக பதினொருவர் குழாம்.

பாப் டு ப்ளெஸிஸ் (அணித்தலைவர்), கிறிஸ் கெய்ல், அலெக்ஸ் ஹெல்ஸ், நிக்கொலஸ் பூரண், ப்ரெண்டன் டைலர், ஜொனி பெயர்ஸ்டோ, கிரண் பொல்லார்ட், ஆதில் ரஷீட், சில்டொன் கொட்ரெல், லுங்கி ங்கிடி, அண்ட்ரூ டை, மிட்செல் மெக்லேனகன்

போட்டி அட்டவணை 

போட்டிகள் அனைத்தும் டாக்கா Sher-e-Bangla தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

  • 2020 மார்ச் 18 – முதலாவது டி20 போட்டி 
  • 2020 மார்ச் 21 – இரண்டாவது டி20 போட்டி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<