தொடர் டெஸ்ட் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது பங்களாதேஷ்

59

ஜிம்பாப்வேயுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 106 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ் அணி தனது தொடர்ச்சியான 6 டெஸ்ட் தோல்விகளுக்கு முடிவுகட்டியுள்ளது.

ஆஸியிடம் போராடி வீழ்ந்த இலங்கை மகளிர்

ஐ.சி.சி. பெண்கள் உலகக் கிண்ண டி20 தொடரின் அவுஸ்திரேலியாவுக்கு …..

டாக்காவில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பங்களாதேஷ் அணி சார்பில் முஷ்பீகுர் ரஹிம் இரட்டைச் சதம் பெற்றதோடு சுழற்பந்து வீச்சாளர் நயீம் ஹசன் மொத்தமாக  9 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த வெற்றி மூலம் 15 மாத இடைவேளைக்குப் பின்னரே பங்களாதேஷ் டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றியீட்டியது. அந்த அணி கடைசியாக 2018 நவம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றிலேயே வெற்றியீட்டியிருந்தது. அதேபோன்று, பங்களாதேஷ் அணி டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெறும் இரண்டாவது சந்தர்ப்பமாகவும் இது இருந்தது. 

கடந்த சனிக்கிழமை (22) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸிற்கு 265 ஓட்டங்களை பெற்றது. அணித்தலைவர் கிரேக் எர்வின் (107) தனது முன்றாவது டெஸ்ட் சதத்தைப் பெற்றார். 

அவர் இரண்டாவது விக்கெட்டுக்கு ஆரம்ப வீரர் பிரின்ஸ் மஸ்வோரேவுடன் (64) சேர்ந்து 111 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டதே ஜிம்பாப்வே ஸ்திரமான ஓட்டங்களை பெற உதவியது.

அணித்தலைவராக இறுதி ஒருநாள் தொடரில் ஆடவுள்ள மொர்தஸா

சுற்றுலா ஜிம்பாப்வே அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளுக்குமான 15 பேர் அடங்கிய பங்காளாதேஷ் அணியின் குழாம் நேற்று (23) ….

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி சொற்ப ஓட்டங்களுக்கு ஆரம்ப விக்கெட்டுக்களை பறிகொடுத்தபோதும் மத்திய வரிசையில் அணித்தலைவர் மொமினுல் ஹக் மற்றும் முஷ்பிகுர் ரஹிம் அபாரமாக துடுப்பெடுத்தாடினர். இருவரும் 4ஆவது விக்கெட்டுக்கு 222 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். 

இதன்போது டெஸ்ட் போட்டிகளில் தனது மூன்றாவது இரட்டைச் சதத்தை பெற்ற முஷ்பிகுர் ரஹிம் 318 பந்துகளில் 28 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 203 ஓட்டங்களை பெற்றார். மறுபுறம் மொமினுல் ஹக் 132 ஓட்டங்களை பெற்றார்.

பங்களாதேஷ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 560 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக்கொண்டது.   

முதல் இன்னிங்ஸில் 295 ஓட்டங்கள் பின்தங்கி இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்க வேண்டிய நெருக்கடி உடனேயே ஜிம்பாப்வே அணி ஆட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று (24) தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. 

எனினும், அன்றைய தினம் ஆட்ட நேரம் முடியும் போது அந்த அணி 9 ஓட்டங்களை பெறுவதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மஸ்வோரே மற்றும் டொனால்ட் டிரிபானோ அடுத்தடுத்த பந்தில் டக் அவுட் ஆயினர். 

இந்நிலையில் நான்காவது நாளான இன்று (25) துடுப்பாட்டத்தை தொடர்ந்த ஜிம்பாப்வே அணி அதே வேகத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களான நயீம் ஹசன் மற்றும் டைஜுல் இஸ்லாம் ஜிம்பாப்வே அணியை பந்தாடினர்.

இதனால் அந்த அணி 57.3 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கே சுருண்டது. முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நயீம் ஹசன் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு டைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இரட்டைச் சதம் பெற்ற முஷ்பிகுர் ரஹிம் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஜிம்பாப்வே அணி தொடர்ந்து அங்கு மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் ஆடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

போட்டியின் சுருக்கம்

ஜிம்பாப்வே (முதல் இன்னிங்ஸ்) – 265 (106.3) – கிரேக் எர்வின் 107, பிரின்ஸ் மஸ்வோரே 64, நயீம் ஹசன் 4/70, அபூ ஜெயத் 4/71

பங்களாதேஷ் (முதல் இன்னிங்ஸ்) – 560/6d (154) – முஷ்பிகுர் ரஹீம் 203*, மொனிமுல் ஹக் 132, நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 71, லின்டோ தாஸ் 53, எயின்ஸ்லி நுலோவு 2/170

ஜிம்பாப்வே (இரண்டாவது இன்னிங்ஸ்) – 189 (57.3) – கிரேக் எர்வின் 43, நயீம் ஹசன் 5/82, டைஜுல் இஸ்லாம் 4/78

முடிவு – பங்களாதேஷ் இன்னிங்ஸ் மற்றும் 106 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<