தமது கடைசி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள வீரர்கள்

914

கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தின் ஜாம்பவான் யார்? என்பதை அடையாளம் காணவும், ஆசிய நாடுகள் இடையே நல்லுறவை வளர்க்கவும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 14 ஆவது அத்தியாயம், இன்று சனிக்கிழமை (15) ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், இந்த தொடரில் விளையாடும் சிரேஷ்ட வீரர்கள் ஐவர் தொடர்பில் இந்த கட்டுரை ஆராயவுள்ளது. அனேகமாக இதுவே இவர்களது கடைசி ஆசிய கிண்ணப் போட்டிகளாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கடந்த கால ஆசியக் கிண்ணத் தொடர்களின் சிறந்த பதிவுகள் – ஒரு மீள்பார்வை

  • மஸ்ரபி பின் மொர்தசா (34 வருடம் 345 நாட்கள்)

பங்களாதேஷ் அணியில் உள்ள சிரேஷ்ட வீரரும், சிறந்த வேகபந்துவீச்சாளருமான மஸ்ரபி மொர்தசா, 2001ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.

நரைல் எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் மொர்தசா, பங்களாதேஷ் அணிக்காக சுமார் 17 வருடங்களாக விளையாடி வருகின்ற முதலாவது உண்மையான வேகப்பந்து வீச்சாளர் ஆவார். பந்துவீச்சைப் போல துடுப்பாட்டத்தில் அதிரடியாக விளையாடும் திறமையைக் கொண்ட மொர்தசா, கடந்த 2 வருடங்களாக பங்களாதேஷ் ஒரு நாள் அணியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார். அத்துடன், பங்களாதேஷ் அணியின் அண்மைக்கால வெற்றிக்கு மொர்தசாவின் தலைமைத்துவம் மற்றும் பங்களிப்பு முக்கிய பங்கு வகித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று மேற்கிந்திய தீவுகளில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மஸ்ரபி மொர்தசாவின் அபார பந்துவீச்சின் உதவியுடன் இந்திய அணிக்கெதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி வரலாற்று வெற்றியையும் பதிவுசெய்ததுடன், அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

அத்துடன், 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 49 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி முன்னனி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த மொர்தசா, ஒரு நாள் தரவரிசையில் குறித்த காலப்பகுதியில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டார்.

அடிக்கடி உபாதைகளுக்கு முகங்கொடுத்து பெரிய தொடர்களில் விளையாடாமல் இருந்த மஸ்ரபி மொர்தசா, தற்போது மீண்டும் ஆசிய கிண்ணப் போட்டிகளில் களமிறங்கவுள்ளார்.

2019 உலகக் கிண்ணப் போட்டிகளின் பிறகு சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு விடைகொடுப்பதாக அறிவித்துள்ள மொர்தசா, இரண்டு தடவைகள் ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று சம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் போன பங்களாதேஷ் அணிக்கு முதல் தடவையாக ஆசிய கிண்ணத்தை பெற்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், இந்த ஆசிய கிண்ண தொடர் மொர்தசாவின் கடைசி தொடராகவும் அமையவுள்ளது.

  • லசித் மலிங்கா (35 வருடம் 18 நாட்கள்)

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான லசித் மாலிங்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார். ஒரு நாள் அரங்கில் அண்மைக்காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இலங்கை அணிக்கு மீண்டும் வெற்றியைத் தேடிதருவார் என்ற நம்பிக்கையில் ஓராண்டிற்கு பிறகு இடம்பிடித்துள்ளார்.

எனினும், கடந்த கால ஆசிய கிண்ண தொடர்களில் அவர் படைத்துள்ள சிறந்த பிரதிகள் மற்றும் அனுபவம் என்பன அவரது வருகைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

ஆசியக் கிண்ண முதல் மோதல் எவ்வாறு இருக்கும்?

ஆசிய கிண்ண வரலாற்றில் அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் லசித் மாலிங்க இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், அதிகூடிய விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

எது எவ்வாறாயினும், 2019 உலகக் கிண்ணம் வரை இலங்கை அணிக்காக விளையாடுவேன் என்ற நம்பிக்கையுடன் தனது வழமையான விளையாட்டுக்கு திரும்பி விக்கெட்டுக்களை கைப்பற்றி வருகின்ற மாலிங்கவுக்கு, இந்த ஆசிய கிண்ணம் மறுவாழ்க்கை கொடுக்கும் போட்டித் தொடராக அமையும் என்பதுடன், அவருடைய கடைசி ஆசிய கிண்ண தொடராகவும் இது அமையவுள்ளது.

  • தில்ருவன் பெரேரா (36வருடம் 55 நாட்கள்)

இலங்கை டெஸ்ட் அணியின் சகலதுறை வீரராக பிரகாசித்து வருகின்ற 36 வயதான தில்ருவன் பெரேரா, டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக விரைவாக 50 மற்றும் 100 விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை கொண்டவர். எனினும், ஒரு நாள் போட்டிகளில் அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை.

இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளரான அகில தனன்ஞய, முதலிரண்டு போட்டிகளில் விளையாட இயலாத காரணத்தினால் இவருக்கு அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அத்துடன், அவரது சுழல் பந்துவீச்சு இலங்கை அணிக்கு இம்முறை ஆசிய கிண்ணத்தில் மிகப் பெரிய பலமாக அமையும் என நம்பப்படுகின்றது.

2007 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக ஒரு நாள் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட தில்ருவன் பெரேரா, இறுதியாக 2017இல் பங்களாதேஷ் அணியுடனாள ஒரு நாள் போட்டியில் விளையாடியிருந்தார். எனினும், இலங்கைக்காக இதுவரை 12 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 13 விக்கெட்டுக்களை மாத்திரம் கைப்பற்றியுள்ளார்.

  • சொயிப் மலிக் (36வருடம் 229 நாட்கள்)

பாகிஸ்தான் அணிக்காக 1999 ஆம் ஆண்டு (அதாவது 20 வருடங்களாக) முதல் சொயிப் மலிக் விளையாடி வருகின்றார். இவரது சிறப்பான சகலதுறை ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி அண்மைக்காலமாக பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை பதிவுசெய்துள்ளது.

2004 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசிய கிண்ண போட்டியில் இந்தியாவுடனான ஆட்டத்தில் 143 ஓட்டங்களையும், 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இது ஆசிய கிண்ண வரலாற்றில் துடுப்பாட்ட வீரரொருவரின் அதிசிறந்த மூன்றாவது ஓட்ட எண்ணிக்கையாகவும் இடம்பெற்றது.

பாகிஸ்தான் அணிக்காக டி-20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரரான சொயிப் மலிக், கடந்த வருடம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இந்தியாவுடனான இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அவ்வணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தார். எனவே இம்முறை ஆசிய கிண்ணத்தில் இவர் இந்திய அணிக்கெதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2019 உலகக் கிண்ணப் போட்டிகள் வரை பாகிஸ்தான் ஒரு நாள் அணிக்காக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ள சொயிப் மலிக், இதுவரை 266 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 7015 ஓட்டங்களையும், 156 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

எது எவ்வாறாயினும், அண்மைக்காலமாக ஒரு நாள் அரங்கில் பிரகாசித்து வருகின்ற பாகிஸ்தான் அணிக்கு இம்முறை ஆசிய கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே தனது கடைசி ஆசிய கிண்ணத்தில் விளையாடவுள்ள சொயிப் மலிக்குக்கு வெற்றியுடான பிரியாவிடை கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

  • மஹேந்திர சிங் டோனி (37 வருடம் 70 நாட்கள்)

இந்திய அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான மஹேந்திர சிங் டோனி இம்முறை ஆசிய கிண்ணத்தில் விளையாடும் வீரர்களில் அதிக வயதுடைய வீரர் ஆவார்.

தலைவர் பதவியிலிருந்து விலகியதன் பின்னணி என்ன?: மனந்திறந்த டோனி

ஆனால் இவரது உடல்தகுதி மற்றும் துடுப்பெடுத்தாடும் திறமை என்பன தற்போதைய இளம் வீரர்களுக்கே சவால் விடும் வகையில் இருப்பது இவரின் தனி அடையாளம்.

அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் வரை இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எண்ணமாகும்.

இந்தியாவுக்காக ஐ.சி..சி இன் அனைத்து வகையான சம்பியன் பட்டங்களையும் வென்ற ஒரே தலைவரான டோனி, அணியின் நலனுக்காக தனது தலைவர் பதவியை துறந்ததாக அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான தலைவர் என்று பெயர் பெற்ற டோனி 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்தும், 2017 ஆம் ஆண்டு ஒரு நாள் மற்றும் 20 டி-20 போட்டிக்கான இந்திய அணியின் தலைவர் பதவியில் இருந்தும் லகினார்.

இந்த நிலையில், இந்தியாவுக்காக 2004 ஆம் ஆண்டு முதல் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகின்ற டோனி, இதுவரை 321 ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரத்து 46 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 67 அரைச்சதங்களும், 10 சதங்களும் உள்ளடங்கும்.

எனவே விராட் கோஹ்லி இல்லாமல் இம்முறை ஆசிய கிண்ணத்தில் களமிறங்கவுள்ள இந்திய அணிக்கு டோனியின் அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், ஆசிய கிண்ணத்தின் நடப்புச் சம்பியனாக உள்ள இந்திய அணி ஏழாவது முறையாகவும் ஆசிய கிண்ண சம்பியன்களாக மாறி டோனிக்கு சிறந்ததொரு பிரியாவிடையைப் பெற்றுக்கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க