இந்தியாவிடம் இலங்கை கட்புலனற்றோர் அணிக்கு மீண்டும் தோல்வி

92

இந்திய கட்புலனற்றோர் அணிக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியிலும் இலங்கை கட்புலனற்றோர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் எற்கனவே இந்த தொடரை வென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 4-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கட்புலனற்றோர் அணி பலம் கொண்ட இந்திய அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்துவதற்கு தொடர்ந்து போரடி வருகிறது.

இந்நிலையில் லுதியானாவில் சனிக்கிழமை (20) நடைபெற்ற நான்காவது டி-20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை கட்புலனற்றோர் அணியின் எந்த ஒரு வீரரும் சோபிக்க தவறினர். 15 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இலங்கை கட்புலனற்றோர் அணி சீரான இடைவெளிகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

டி-20 தொடரை இழந்த இலங்கை கட்புலனற்றோர் அணி

மத்திய வரிசையில் வந்த சி. தேஷப்ரிய நிதானமாக 21 பந்துகளில் 21 ஓட்டங்களை பெற்ற நிலையில் ரன் அவுட் ஆனார். கடைசியில் இலங்கை கட்புலனற்றோர் அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை பெற்றது.

இதன் போது இந்திய அணி சார்பில் அஜே குமார் 23 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் முதல் விக்கெட்டை 22 ஓட்டங்களிலேயே வீழ்த்தி நம்பிக்கை தந்தபோதும் மத்திய வரிசையில் வந்த எஸ். ரமேஷ் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 34 பந்துகளில் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களை பெற்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்திய கட்புலனற்றோர் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கான 138 ஓட்டங்களை எட்டியது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி-20 போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை (22) பரிதாபாத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 137 (18.5) – சி. தேஷப்ரிய 21, டி. சதருவன் 15, டி. மதுகம 15*, அஜே குமார் 2/23

இந்தியா – 138/3 (18) – எஸ். ரமேஷ் 54*, கே. பாஸ்கர் 28, அஜே குமார் 25*

முடிவு – இந்திய கட்புலனற்றோர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி   

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க