இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான முதலாம் பிரிவு (டிவிஷன் I) பாடசாலைகள் கால்பந்து சம்பின்ஷிப் போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. சுகததாச அரங்கில் நடைபெறும் இதன் முதல் போட்டியில் நடப்பு சம்பியனான புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித பெனடிக்ட் கல்லூரி அணிகள் மோதவுள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புனித ஜோசப் கல்லூரி அணி, திருச்சிலுவை கல்லூரியை 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 21 ஆண்டுகளின் பின் சம்பியன் கிண்ணத்தை வென்றது. ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒரு கிண்ணத்திற்கான போட்டியாகவே புனித ஜோசப் கல்லூரி தனது சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் தொடரை ஆரம்பிக்கவுள்ளது. அது அருட்தந்தை பீட்டர் பிள்ளை ஞாபகார்த்த கிண்ணமாகவே மாலை 4.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.  

18 வயதுக்கு உட்பட்டோருக்கான முதலாம் பிரிவு பாடசாலைகள் கால்பந்து சம்பின்ஷிப் போட்டியில் 14 அணிகள் பங்கேற்பதோடு அவை தலா ஏழு அணிகளாக இரண்டு குழுக்களில் விளையாடவுள்ளன. கடந்த ஆண்டில் இஸிபதன கல்லூரி மற்றும் ஆனந்த கல்லூரிகள் பிரிவு இரண்டுக்கு தரம் குறைக்கப்பட்டு கிண்ணியா மத்திய கல்லூரி, திருகோணமலை மற்றும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரிகள் முதலாம் பிரிவுக்கு தரம் உயர்த்தப்பட்டன. 2016 ஆம் ஆண்டு பிரிவு இரண்டு இறுதிப் போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி அணி புனித பத்திரிசியார் கல்லூரியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. டி மெசனொட் கல்லூரி மூன்றாம் இடத்தை பிடித்தது.

பார்சிலோனாவில் நெய்மரின் இடத்தை நிரப்பும் ஒஸ்மானே டேம்பல்லே

A குழுவில் புனித ஜோசப் கல்லூரி, மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, கிங்ஸ்வூட் கல்லூரி, விக்ரமபாகு கல்லூரி, புனித செபஸ்டியன் கல்லூரி, புனித பெனடிக்ட் கல்லூரி மற்றும் கிண்ணியா மத்திய கல்லூரி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.

B குழுவில் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி, திருச்சிலுவை கல்லூரி, சாஹிரா கல்லூரி, றோயல் கல்லூரி, புனித பேதுரு கல்லூரி, லும்பினி கல்லூரி மற்றும் புனித பத்திரிசியார் கல்லூரி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.

குழுநிலைப் போட்டிகள் லீக் அடிப்படையில் இடம்பெறவிருப்பதோடு ஒவ்வொரு அணியும் எஞ்சிய ஆறு அணிகளுடனும் மோதவேண்டும். கடந்த முறை இரு குழுக்களிலும் முதலிரு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தெரிவானதற்கு மாறாக இம்முறை இரு குழுக்களிலும் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறவுள்ளன.