கபில்ராஜின் போராட்டம் வீண்; திரில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி

1409

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த 112ஆவது வடக்கின் பெரும் சமரில் இறுதிவரை போராடிய சென். ஜோன்ஸ் கல்லூரியை ஒரு விக்கெட்டால் வீழ்த்திய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினர் இம்முறை கிண்ணத்தை தம்வசப்படுத்தியுள்ளனர்.  

112ஆவது வடக்கின் பெரும் சமர் 8ஆம் திகதி (வியாழக்கிழமை) யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பினை தேர்வு செய்த மத்திய கல்லூரி அணி, வியாஸ்காந்த் பந்துவீச்சில் அசத்த 217 ஓட்டங்களுக்கு சென். ஜோன்ஸ் கல்லூரியை கட்டுப்படுத்தியது. சென். ஜோன்ஸ் கல்லூரி சார்பில் செரோபன்(65)  அரைச்சதம் கடந்திருந்தார்.

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி பயணிக்கும் யாழ் மத்திய கல்லூரி

நடைபெற்று வரும் 112ஆவது வடக்கின் பெரும் சமரின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்றைய தினம் (09) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி

முதலாவது இன்னிஸை ஜெயதர்சனின் (77) அரைச்சதத்தின் துணையுடன் ஆரம்பித்திருந்த மத்திய கல்லூரி அணிக்கு, தொடர்ந்து  வந்த மதுசனின் அதிரடியான 52, ராஜ்கிளின்ரன் ஆட்டமிழக்காது அரைச்சதம் ஒன்றினையும் பெற்றுக்கொடுக்க 328 எனும் வலுவான ஓட்ட எண்ணிக்கையை மத்திய கல்லூரி பெற்றது.

போட்டியின் இரண்டாவது தினம் இறுதித் தருவாயில் (9) சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் 101 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இன்னிஸை ஆரம்பித்திருந்தனர். எனினும், இரண்டாம் நாள் ஆட்டநேரம் நிறைவிற்கு வரும் போது அவர்கள் சுஜன், மதுசன் ஆகியோரது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தனர்.

மூன்றாவது நாள் ஆரம்பத்தில் 23 ஓட்டங்களை பகிர்ந்திருந்த வேளையில் மிக நேர்த்தியான பந்தொன்றின் மூலம் அபினாஷினை சுஜன் போல்ட் முறையில் ஆட்டமிழக்க செய்தார்.

மறுமுனையில், மிகுந்த அழுத்தத்தின் மத்தியில்  மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி சென். ஜோன்சின் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்காக போராடியிருந்த அணித் தலைவர் ஜதுசன் அரைச்சதம் கடந்தார். மணிக்கூட்டுக் கோபுர முனையிலிருந்து பூங்கா முனைக்கு பந்துவீசுவதற்கு நுழைந்த சுஜனின் பந்தில் டிலேசியன் சிறந்த பிடியெடுப்பினை மேற்கொள்ள, சுஜனின் நான்காது விக்கெட்டாக ஜதுசன் களத்திலிருந்து வெளியேறினார். தொடர்ந்து களம் நுழைந்த டினோசன், செரோபனுடன் இணைந்து 57 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக  பகிர்ந்து மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலையை கடந்தனர்.

செரோபன் 46 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்து வியாஸ்காந்தின் பந்துவீச்சில் ஜெயதர்சனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதே முறைமையில் நிதானமாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த டினோசன் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழப்பு செய்யப்பட்டார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய கபில்ராஜ் 37 பந்துகளில் அரைச்சதமொன்றைப் பெற்றுக்கொடுத்து மதுசனின் பந்தில் ஆட்டமிழந்தார்.

பெறுமதியான 15 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அபிலக்ஷனும் ஆட்டமிழக்க, அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் 109 என்ற வெற்றியிலக்கை மத்திய கல்லூரி தரப்பினருக்கு நிர்ணயித்தனர்.

மத்திய கல்லூரி சார்பில் வேகப்பந்து வீச்சாளர்களான சுஜன் 4 விக்கெட்டுக்களையும், மதுசன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்ற, வியாஸ்காந்திற்கு 2 விக்கெட்டுகளும், தசோபனிற்கு ஒரு விக்கெட்டும் கிடைத்தது.

பின்னர், 109 ஓட்டங்களானது இலகுவான வெற்றி இலக்காக பார்க்கப்பட்டபோதும், சென். ஜோன்ஸின் பந்துவீச்சாளர்களுக்கு முன்னிலையில் மத்தி வீரர்களுக்கு அந்த வெற்றி இலக்கு எளிதானதாக அமையவில்லை.

ஆரம்பத்தில் இரண்டு பிடியெடுப்புக்கள் நழுவவிடப்பட்டபோதும், 19 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த வியாஸ்காந்தை டினோசன் ஓய்வறை அனுப்பியதன் பின்னர் அடுத்த ஓவரின் இறுதி இரண்டு பந்துகளிலும் ஜெயதர்சன், இயலரசன் ஆகியோரது விக்கெட்டுக்கள் கபில்ராஜின் பந்துவீச்சில் இழக்கப்பட போட்டி மிகவும் விறுவிறுப்பானதாக மாறியது.

Photos: Jaffna Central College vs St. John’s College | 112th Battle of the North – Day 3

Photos of the Third day’s action of 112th Battle of the North between Jaffna Central College and St. John’s College

மிகச்சிறப்பான இணைப்பாட்டமொன்று கட்டியெழுப்பப்படுகையில் சானுசனின் பந்துவீச்சில் நிசான் ஆட்டமிழக்க போட்டியின் விறுவிறுப்பு மேலும் அதிகரித்தது. மறுமுனையில் தசோபன் கபில்ராஜின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ராஜ்கிளின்ரனும் ரண் அவுட் செய்யப்பட்டார். ஆனால் மறுபக்கத்தில் மதுசன் மிகப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது இன்னிங்சிலும் அரைச்சதம் ஒன்றினை பதிவு செய்து மத்திய கல்லூரி அணியினை மீட்டெடுத்தார்.

2 விக்கெட்டுக்கள் கைவசமிருக்கையில் 22 ஓட்டங்கள் தேவை என்ற இக்கட்டான நிலைக்குத் மத்திய கல்லூரி அணியினர் தள்ளப்பட்டனர்.

வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவைப்படுகையில் 32ஆவது ஓவரில் ஜதுசனின் பந்துவீச்சில் கௌதமன் ஆட்டமிழக்க மத்திய கல்லூரியின் வெற்றி கேள்விக்குறியானது. அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே டிலேசியனை கபில்ராஜ் போல்ட் செய்தார்.

மைதானத்தை இரு கல்லூரிகளினதும் ரசிகர்கள் சூழ, சென். ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு ஒரு விக்கெட்டும்,  யாழ் மத்திய கல்லூரி அணிக்கு 8 ஓட்டங்களும் தேவை என்ற நிலையில் போட்டி தொடர்ந்தது. எனினும் இறுதி வீரர்கள் இருவரும் ஒவ்வொரு ஓட்டமாக மிகவும் மெதுவாகப் பெற்றனர்.

4 ஓவர்கள் மிகுந்த போராட்டத்தின் பின்னர் எற்கனவே 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி அதிரடி காட்டியிருந்த கபில்ராஜின் பந்துவீச்சிலே முதலிரண்டு பந்துகளும் ஓட்டமற்றதாக அமைய, 3ஆவது பந்தில் துசாந்தன் 4 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க வடக்கின் பெரும் சமரிலே 6 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றியொன்றைப் பதிவு செய்தது.

பந்துவீச்சில் கபில்ராஜ் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக போட்டியில் 10 விக்கெட்டுக்களை சாய்த்து சாதனை படைத்துள்ளார்.  டினோசன், ஜதுசன் மற்றும் சானுசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

இன்னிங்ஸ் வெற்றியொன்றை எதிர்பார்த்திருந்த மத்திய கல்லூரி அணிக்கு சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் அதிர்ச்சியளித்திருந்தனர். இந்த தசாப்தத்துதினுடைய மிகச்சிறந்த போட்டியாக இது அமைந்தது என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.

இம்முறை போட்டியில் 7 அரைச்சதங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது வடக்கின் பெரும் சமரிலே போட்டியொன்றில் அதிக அரைச்சதங்கள் பெறப்பட்ட சந்தர்ப்பமாக அமைகின்றது. முன்னைய பதிவாக 1956ஆம் ஆண்டில் 6 அரைச்சதங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மதுசன் இரண்டு இன்னிங்சுகளிலும் அரைச்சதம் பெற்றுள்ள அதேவேளை, ஜதுசன் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் அரைச்சதம் கடந்துள்ளார்.

ஸ்கோர் விபரம்

112ஆவது வடக்கின் பெரும் சமரின் விருதுகள்

போட்டியின் ஆட்ட நாயகன்செல்வராசா மதுசன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி)

சிறந்த சகலதுறை ஆட்டக்காரர்வசந்தன் துசன் (சென். ஜோன்ஸ் கல்லூரி)

சிறந்த துடுப்பாட்ட வீரர் அன்ரனி டயஸ்  ஜெயதர்சன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி)

சிறந்த பந்துவீச்சாளர் கனகரட்ணம் கபில்ராஜ் (சென். ஜோன்ஸ் கல்லூரி)

சிறந்த களத்தடுப்பாளர் சுரேந்திரன் டிலேசியன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி)

சிறந்த விக்கெட் காப்பாளர் செல்வகுணாளன் ஜோயல் பிரவீன் (சென். ஜோன்ஸ் கல்லூரி)

வடக்கிலே மிகச்சிறந்த வீரர்கள் இருக்கின்றார்கள் என்பதற்கு இந்த போட்டி மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, ஆனால் இவர்கள் இலங்கை தேசிய அணியின் சீருடை தரித்து சர்வதேச ரீதியில் பிரகாசிக்க வேண்டும் என்பது Thepapare.com இன் அவாவாகவுள்ளது. இதற்கான அடுத்தபடியாக இவர்கள் முதற்தர கிரிக்கெட்டில் பங்கெடுக்க வேண்டும். அனைத்து வீரர்களினதும் எதிர்காலம் பிராகாசிக்க Thepapre.con குழுவானது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டி எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. குறித்தபோட்டி தொடர்பான நேரடி ஸ்கோர் விபரம், போட்டி அறிக்கை மற்றும் புகைப்படங்கள் என்பவற்றிற்கும் Thepapare.com உடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

போட்டியை மீண்டும் பார்வையிட

St. John’s College vs Jaffna Central College – 112th Battle of the North

The 112th Battle of the North cricket encounter between St. John’s College, Jaffna and Jaffna Central College will be played on 8th, 9th and 10th March at Jaffna Central College Grounds, Jaffna.