இளையோர் உலகக் கிண்ண சம்பியனாக மகுடம் சூடியது இந்தியா

128

ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 5ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது.

16 அணிகள் பங்குகொண்ட ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 14ஆவது அத்தியாயம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்தது.

இம்முறை 19 வயதின்கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் A குழுவிலிருந்து இங்கிலாந்தும் B குழுவிலிருந்து இந்தியாவும் தோல்வி அடையாத அணிகளாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

எனவே, சம்பியன் பட்டத்தை வெல்லும் அணி எது என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி அன்டிகுவாவில் உள்ள சேர் விவியன் ரிச்சட்ர்ஸ் மைதானத்தில் நேற்று (05) நடைபெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

ஆரம்ப வீரர் ஜேக்கப் பெத்ஹெல் 2 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் டொம் பிரெஸ்ட் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். இதனையடுத்து மற்றுமொரு ஆரம்ப வீரரான ஜோர்ஜ் தோமஸ் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிதானமாகவும், பொறுப்பாகவும் விளையாடிய ஜேம்ஸ் ரெவ் அரைச்சதம் கடந்து அணிக்கு நம்பிக்கையளித்தார்.

தொடர்ந்து களமிறங்கிய பின்வரிசை வீரர்களும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் ரெவ் 95 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில் ராஜ் பவா 5 விக்கெட்டுகளையும், ரவி குமார் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்பின்னர் 190 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் இந்திய களமிறங்கியது. எனினும், ஆரம்ப வீரரான ரகுவன்ஷி ஓட்டம் எதுவும் எடுக்காமல் (0) வெளியேற, மற்றொரு ஆரம்ப வீரரான ஹர்னூர் சிங் 21 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து உப தலைவர் ஷெய்க் ரஷித் அபாரமாக விளையாடி அரைச்சதம் எடுத்து ஆட்டமிழக்க, அணித்தலைவர் யாஷ் துல் 17 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும், நிஷாந்த் சிந்து, ராஜ் பவா ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ராஜ் பவா 35 ஓட்டங்களுடனும், கௌசல் தாம்பே ஒரு ஓட்டத்துடனும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதி முன்று ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டன. 48ஆவது ஓவரின் முதல் பந்தை நிஷாந்த் பவுண்டரிக்கு அனுப்பினார். அதே ஓவரின் மூன்றாவது மற்றும் நான்காவது பந்தை சிக்ஸருக்கு அனுப்பிய தினேஷ் பானா இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன்படி, இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றயீட்டி சம்பியாகத் தெரிவாகியது.

இறுதி வரை ஆட்டமிழக்காமல் நிஷாந்த் 50 ஓட்டங்களையும், தினேஷ் 13 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய 19 வயதின்கீழ் அணி 5ஆவது முறையாக இளையோர் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

முன்னதாக இந்திய அணி 2000, 2008, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் இளையோர் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தது.

இதனிடையே, இந்திய அணிக்காக சகலதுறையிலும் பிரகாசித்த ராஜ் பவா, இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவாக, தொடர் நாயகன் விருதை இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த (506) தென்னாபிரிக்க வீரர் டிவோல்ட் பிரேவிஸ் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், 5ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், இந்திய 19 வயதின்கீழ் அணிக்கும், பயிற்சியாளர்களுக்கும், தேர்வுக்குழுவினருக்கும் உலகக் கிண்ணத்தை இவ்வளவு சிறப்பாக வென்றதற்கு வாழ்த்துகள். அத்துடன், நாங்கள் அறிவித்துள்ள 40 இலட்சம் ரொக்கப் பரிசு ஒரு சிறிய பாராட்டுச் சின்னம்தான். ஆனால் அவர்களின் முயற்சிகள் நாங்கள் வழங்கும் மதிப்பிற்கு அப்பாற்பட்டவை என்று அதில் கங்குலி பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, இளையோர் உலகக் கிண்ணத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.40 இலட்சமும், அணி உதவியாளர்களுக்கு ரூ.25 இலட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி, இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<