இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி பயணிக்கும் யாழ் மத்திய கல்லூரி

2208
112th Battle of the North

நடைபெற்று வரும் 112ஆவது வடக்கின் பெரும் சமரின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்றைய தினம் (09) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நிறைவிற்கு வந்திருக்கின்றது.

நேற்றைய ஆட்டநேர நிறைவின்போது 43 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மட்டும் இழந்திருந்த நிலையில், இன்று தமது ஆட்டத்தினை தொடர்ந்திருந்தனர் யாழ் மத்திய கல்லூரி அணியினர். இன்றைய நாளினை அதிரடியாக ஆரம்பித்திருந்த மத்திய கல்லூரியின் ஜெயதர்சன் – நிசான் இணை அரைச்சதம் (53) கடந்திருந்த வேளையில், நிசான் (30) அபினாஷின் பந்துவீச்சில் Lbw முறையில் ஆட்டமிழந்தார். அவர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜெயதர்சனுடன் இணைந்து 57 ஓட்டங்களினை பகிந்திருந்தார்.

வியாஸ்காந்த் பந்துவீச்சில் அசத்த யாழ் மத்திய கல்லூரி முன்னிலையில்

சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ் மத்திய கல்லூரி அணிகள் மோதும் 112 ஆவது வடக்கின் பெரும் சமர் இன்று (08) யாழ் மத்திய

பின்னர், 25 ஓவர்களிற்கு மேலான இணைப்பாட்டத்தினை தகர்ப்பதற்கு போராடியிருந்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினருக்கு, மிகவும் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த  இயலரசனின் விக்கெட்டினை தகர்த்து நம்பிக்கையளித்தார் வேகப்பந்து வீச்சாளர் சானுசன்.

ஐந்தாம் இலக்கத்தில் களம்புகுந்த மதுசன் சென். ஜோன்ஸ் வீரர்களின் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்டார். அவர் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள்  என 37 பந்துகளில் 52 ஓட்டங்களை விளாசினார்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி  மிகவும் நிதானமாக மத்திய கல்லூரியின் துடுப்பாட்டத்தினை பலப்படுத்தியிருந்த ஜெயதர்சன் 77 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.  

தொடர்ந்து களம் நுழைந்த மத்திய கல்லூரியின் தலைவர் தசோபன் 49 ஓட்டங்களை பெற்று அரைச் சதத்திற்காக ஒரு ஓட்டத்தைப் பெற இருந்த வேளையில் வேகமாக அடித்து பிடி கொடுத்து ஆட்டமிழந்து சென்றார்.

மறுமுனையில் விக்கெட்டுக்கள் சரிக்கப்பட்ட போதும் ராஜ்கிளின்ரன்  சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் அரைச்சதம் ஒன்றினைப் பெற்றுக்கொடுத்தார்.

இறுதியில் 101.2 ஓவர்களினை எதிர்கொண்ட மத்திய கல்லூரி அணியினர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 328 என்ற மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையை அடைந்தனர். எனவே அவர்கள் சென் ஜோன்ஸ் கல்லூரியினை விட 111 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இன்னிங்சினை நிறைவு செய்தனர்.  

பந்துவீச்சில் கபில்ராஜ் 5 விக்கெட்டுக்களையும், அபினாஷ் 2 விக்கெட்டுக்களையும், டினோசன் மற்றும் சானுசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். அணித் தலைவர் 28 ஓவர்கள் பந்து வீசியபோதும் விக்கெட்டுக்கள் எதனையும் கைப்பற்றவில்லை.

Photos: Jaffna Central College vs St. John’s College | 112th Battle of the North – Day 2

Photos of the second day’s action of 112th Battle of the North between Jaffna Central College and St. John’s College

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சிற்காக களம் நுழைந்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் சௌமியன் இன்னிங்ஸ் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே உபாதை காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேற,  nignt watchmanஆக களமிறக்கப்பட்ட ஜோயல் பிரவீனின் விக்கெட்டினை Lbw முறையில் தகர்த்தார் மதுசன்.

அடுத்த ஓவரிலேயே எல்சான் டெனுசனினை Lbw முறையிலும் அடுத்த பந்திலேயே  சுபீட்சனையும் போல்ட் செய்தார் சுஜன். 6ஆவது ஓவரிலேயே மீண்டும் களம் நுழைந்திருந்த சௌமியன் நிசானின் சிறந்தவொரு பிடியெடுப்பின் மூலம் மதுசனின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது சென். ஜோன்ஸ் கல்லூரி அணி.

எனவே, வெறுமனே 8 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருக்கின்றனர் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர். வீழ்த்தப்பட்ட நான்கு விக்கெட்டுக்களினையும் மதுசன் மற்றும் சுஜன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் என பகிர்ந்துள்ளனர்.

போட்டியின்  இரண்டாவது நாள் ஆட்டத்தினை முழுமையாக தம்வசப்படுத்திய மத்திய கல்லூரி, கடந்த வருடம் சந்தித்த இன்னிங்ஸ் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முகமாக ஒரு இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி நகர்கின்றனர்.

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்