ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணி, இந்த வருடத்திற்கான பிரிவு l பாடசாலைகள் கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் தமது தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இத்தொடரில் இதற்கு முன்னைய இரு போட்டிகளிலும் ஸாஹிரா கல்லூரி அணி புனித பேதுரு கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி அணிகளை வெற்றி கொண்டிருந்தது. எனினும் தொடரின் முதல் போட்டியாகவே ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி இந்த ஆட்டத்தில் களமிறங்கியிருந்தது.  

பேதுரு கல்லூரியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த ஸாஹிரா கல்லூரி

இந்த வருடத்திற்கான பிரிவு l பாடசாலைகள் கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில்…

இலங்கை பாடசாலை கால்பந்தில் முன்னணியில் உள்ள இரு கல்லூரி அணிகளுக்கும் இடையிலான இந்த மோதல் கொழும்பு சிடி கால்பந்து மைதானத்தில் இடம்பெற்றது.

ஆட்டத்தின் ஏழு நிமிடங்கள் கடந்த நிலையில் ஸாஹிரா அணியின் பல வீரர்களுக்கு இடையில் இடம்பெற்ற தொடர் பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் இறுதியாக இடம்பெற்ற கோல் முயற்சியின்போது ஹிமாஷ் மூலம் சிறந்த நிறைவைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போக, பந்து ஹமீத் அல் ஹுசைனி கோல் காப்பாளர் சப்ரினிடம் சென்றது.

அதற்கு அடுத்த நிமிடம் ஹமீத் அல் ஹுசைனி வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது அவர்களால் கோலுக்கான முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அஹமட் அஸ்பர் அடித்த பந்து ஸாஹிரா கோல் காப்பாளரின் கைகளுக்கே சென்றது.

15ஆவது நிமிடத்தில் ஹமீத் அல் ஹுசைனி வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையை ரிஷான் பெற்றார். அவர் உதைந்த பந்து கோல் கம்பங்களுக்கு உள்ளே செல்லும் விதத்தில் வந்து கம்பங்களுக்கு அருகில் விழுந்தது. எனினும், பந்து  ஸாஹிரா வீரர்களால் வெளியேற்றப்பட்டது.

தொடர்ந்து 30ஆவது நிமிடத்தில் ஸாஹிரா கல்லூரி அணிக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை முர்ஷீட் ஹெடர் மூலம் கோலுக்குள் செலுத்தினார். எனினும், ஹமீத் அல் ஹுசைனி பின்கள வீரரால் மீண்டும் ஹெடர் மூலம் பந்து வெளியேற்றப்பட்டது.

மேலும் 5 நிமிடங்களில் ஸாஹிரா பின்களத்தில் வைத்து எதிரணி வீரரிடமிருந்து ஹமீத் அல் ஹுசைனி வீரர் அப்சல் அஹமட் பந்தைப் பறித்து, அபிஷாயனிடம் வழங்கினார். அபிஷாயன் மிக வேகமாக கோல் திசைக்கு திருப்பி அடித்த பந்து கம்பங்களை விட மிக உயர்ந்து சென்றது.  

போட்டியில் 38 நிமிடங்கள் கடந்த நிலையில், ஹமீத் அல் ஹுசைனி வீரர்களுக்கு எதிரணியின் பெனால்டி எல்லைக்கு சற்று அண்மையில் ப்ரீ கிக் ஒன்றுக்கான வாய்ப்பு கிடைத்தது. எனினும் அதன்போது அவர்கள் உதைந்த பந்து, முன்னாள் தடுப்பில் இருந்த வீரர்களின் உடம்பில் பட்டு திசை மாறியது.

ஆட்டத்தின் முழு நேரம் 80 நிமிடங்களுக்கு குறைக்கப்பட்டிருந்ததால் முதல் பாதி ஆட்டம் 40 நிமிடங்களில் நிறைவடைந்தது.  

முதல் பாதி: ஸாஹிரா கல்லூரி 0 – 0 ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி

இரண்டாம் பாதி ஆரம்பமாகி இரண்டாவது நிமிடத்திலேயே ஹமீத் அல் ஹுசைனி வீரர்களுக்கு ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. இதன்போது, அபிஷாயன் மிக நீண்ட தூரம் உதைந்த பந்தை ஸாஹிரா கோல் காப்பாளர் ஸாகிர் பாய்ந்து பித்தார்.

45 நிமிடங்கள் கடந்த நிலையில் ஸாஹிரா வீரர் ரஷீட் பெற்ற ப்ரீ கிக் வாய்ப்பின்போது தமது பகுதிக்குள் வந்த பந்தை சப்ரின் கைகளால் குத்தி வெளியேற்றினார்.

ஆட்டத்தின் 55 ஆவது நிமிடத்தில் எதிரணி வீரர் ஒருவரை முறையற்ற விதத்தில் வீழ்த்தியமைக்காக மொஹமட் முஷ்பிர் இரண்டாவது மஞ்சள் அட்டையை பெற்றார். இதன் காரணமாக அவர் நடுவர் ப்ரஷான்த் ராஜ்கிரிஷ்னா மூலம் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன்போது கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பைப் பெற்ற ஹமீத் அல் ஹுசைனி வீரர்கள் அதன்மூலம் சிறந்த பயனைப் பெறவில்லை.

66 நிமிடத்தில் ஸாஹிரா அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை ரஷீட் பெற்று கோலை நோக்கி உதைந்தார். எனினும், கோல் காப்பாளர் சப்ரின் அதைப் பிடித்துக்கொண்டார்.

திருச் சிலுவைக் கல்லூரியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது புனித பத்திரிசியார்

இவ்வருடத்திற்கான பிரிவு I (டிவிஷன் I) பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்பியன்ஷிப்…

அதற்கு அடுத்த நிமிடம் மேலும் தூரத்தில் இருந்து மீண்டும் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பையும் ரஷீட் பெற்றார். அவர் சிறந்த முறையில் உள்ளனுப்பிய பந்தை தடுப்பதற்கு கோல் காப்பாளர் சபீர் முன்னே வந்தார். எனினும் அதற்குள் அங்கே வந்த ஹசன் ரஷா, சப்ரின் பந்தைப் பிடிப்பதற்குள் ஹெடர் மூலம் பந்தை கோலுக்குள் அனுப்பினார்.  

இதனால் 10 வீரர்களுடன் விளையாடிய ஸாஹிரா கல்லூரி வீரர்கள் ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் முன்னிலை பெற்றனர்.

அதன் பின்னர் இரு அணி வீரர்களும் மேலும் வேகமாக விளையாட, மைதானம் முழுவதும் நிறைந்திருந்த ரசிகர்களின் கோஷங்களும் அதிகரித்தன. எனவே, ஆட்டம் மிகவும் சூடு பிடித்தது.

இந்நிலையில், ஹமீத் அல் ஹுசைனி வீரர்கள் தமது முதல் கோலுக்கான முயற்சியில் முழுமையாக ஈடுபட்டனர். எனினும், அவ்வணி வீரர்கள் உள்ளனுப்பிய அனைத்து பந்துகளையும் ஸாஹிரா கோல் காப்பாளர் ஸாகிர் முறியடித்தார்.

இவ்வாறே இரு தரப்பினராலும் மிகப் பெரிய போராட்டங்களுடன் விளையாடப்பட்ட ஆட்டம் ஹசன் ரஷா பெற்ற கோலுடன் நிறைவடைந்தது.

எனவே, ஸாஹிரா கல்லூரி அணி இத்தொடரில் தமது மூன்றாவது தொடர் வெற்றியை சுவைத்த அதேவேளை, ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி வீரர்கள் தமது முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்தனர்.

முழு நேரம்: ஸாஹிரா கல்லூரி 1 – 0 ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி

கோல் பெற்றவர்கள்
ஸாஹிரா கல்லூரி – ஹசன் ரஷா 67’

மஞ்சள் அட்டை
ஸாஹிரா கல்லூரி – மொஹமட் முஷ்பிர் 38’ & 55, மொஹமட் ஹம்மாத் 40+1’
ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி – அமான் பைசர்  16’, அப்துல் பாசித் 46

சிவப்பு அட்டை
ஸாஹிரா கல்லூரி – மொஹமட் முஷ்பிர் 55’