ICC உலகக் கிண்ணத்துக்கான பாடல் மற்றும் பரிசுத் தொகை வெளியீடு

589
Image Courtesy - ICC Worldcup Tweeter

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கான உத்தியோகபூர்வ பாடலையும், சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு வழங்கப்படவுள்ள பரிசுத் தொகையையும் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ளது.  

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்துகொள்கின்றன.

இலங்கையின் உலகக் கிண்ண சீருடையை மக்களுக்கு கொண்டு செல்லும் ஒடெல்

இலங்கையின் முன்னணி ஆடை, அணிகலன்…

46 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், ஏனைய அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இதனிடையே, உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்க உலகம் முழுவதிலும் இருந்து 10 இலட்சம் கிரிக்கெட் ரசிகர்கள் இங்கிலாந்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 12 நாட்கள் எஞ்சியிருப்பதால் ரசிகர்கள் உச்சக் கட்ட பரபரப்பில் இருக்கின்றனர்.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை உலகக் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ”ஸ்டான்ட் பை” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலை இங்கிலாந்தைச் சேர்ந்த பொப் பாடகி லோரின் மற்றும் ருடிமென்டல் ஆகியோர் பாடியிருக்கின்றனர்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தூதர் அன்ட்ரூ பிளிண்ட்டொப், லாரின் இணைந்து இந்தப் பாடலை உருவாக்கியுள்ளனர். அத்துடன், உலகக் கிண்ணத் தொடர் நடைபெறும் காலம், கோடைக்காலம் என்பதால் காட்சியமைப்பும் அதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இங்கிலாந்தில் உள்ள பன்முக கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் இந்த பாடல் உள்ளது. பாடல் வெளியான சிலமணி நேரங்களில், அது இணையதளங்களில் வைரலாகி பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ண பரிசுத்தொகை

இந்தமுறை உலகக் கிண்ணத்தில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்காக வழங்கப்படுகின்ற பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று (17) அறிவித்தது.  

உலகக் கிண்ண போட்டியின் மொத்த பரிசுத் தொகை 10 மில்லியன்களாகும். இதில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் ரூபா பரிசு வழங்கப்படவுள்ளது. இது இலங்கை ரூபாவில் 70 கோடியாகும். உலகக் கிண்ண வரலாற்றில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு வழங்கப்படுகின்ற மிகப் பெரிய பரிசுத் தொகை இதுவாகும். இதேநேரம், 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்கின்ற அணிக்கு 2 மில்லியன் ரூபா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் சம்பியன் பட்டம் வென்ற அவுஸ்திரேலிய அணிக்கு 3.75 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. அதன்படி, இம்முறை பரிசுத் தொகை 250, 000 அமெரிக்கா டொலர்கள் அதிகமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அரையிறுதியில் தோல்வியடையும் இரண்டு அணிகளுக்கும் தலா 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன.

இதேநேரம், லீக் சுற்றில் அணிகளின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.70 இலட்சம் (40 ஆயிரம் அமெரிக்க டொலர்கள்) கிடைக்கும். அதேபோல எந்தவொரு போட்டியிலும் வெற்றிபெறாமல் வெளியேறும் அணிக்கு ரூ. 175 இலட்சம் (ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<