இலங்கை அணி இந்த வருடத்தின் இறுதி சவாலை எப்படி சமாளிக்கும்?

1618
Sri Lanka v India
 

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, அங்கு இடம்பெற்று முடிந்த டெஸ்ட் தொடர் (1-0), ஒரு நாள் தொடர் (2-1) என்பவற்றினை பறிகொடுத்திருந்த போதிலும் குறித்த தொடர்கள் மூலம் பல சாதகமான விடயங்களினை பெற்றிருக்கின்றது.  

இலங்கை இளம் வீரர்கள் தமது இந்திய சுற்றுப் பயணத்தின் இறுதிக்கட்டமாக, அந்நாட்டு அணியுடன் கட்டாக் நகரில் புதன் கிழமை (20) ஆரம்பமாகும் மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடரில் மோதுகின்றனர்.

வரலாறு

T-20 போட்டிகளில் 2009ஆம் ஆண்டிலிருந்து இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு அணிகளும் விளையாடி வருகின்றன.

இந்தியாவுக்கு எதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான எதிர்வரும் T20 தொடருக்கான..

2014ஆம் ஆண்டு T-20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவை வீழ்த்தி வெற்றியாளராக மாறிய இலங்கை, தமது அயல் தேசத்துடன் இதுவரை 11 போட்டிகளில் மோதியிருக்கின்றது. இதில் 7 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற எஞ்சிய 4 போட்டிகளினையும் இலங்கை கைப்பற்றி இருக்கின்றது.

இறுதியாக, இவ்விரண்டு அணிகளும் இலங்கையின் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரேயொரு T-20 போட்டியில் பலப் பரீட்சை நடாத்தி இருந்தன. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

இறுதியாக இந்திய மண்ணில் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட T -20 தொடரொன்றில் கடந்த வருடம் மோதியிருந்தது. அத்தொடரினையும் இந்தியாவே 2-1 எனக் கைப்பற்றியிருந்தது.  

இலங்கை அணி

நிறைவைடையப் போகும் இந்த ஆண்டில் இறுதியாக தாம் பங்கேற்கும் T-20 தொடரில் களம் காணவுள்ள இலங்கை, அண்மையில் தாம் பங்கேற்ற பாகிஸ்தான் அணியுடனான T-20 தொடரில் 3-0 என வைட்வொஷ் செய்யப்பட்டிருந்தது.  

எனினும், த்தொடரில் திசர பெரேரா தலைமையிலான இலங்கை தரப்பு அனுபவம் குறைந்த வீரர்களுடன் விளையாடிய போதிலும் எதிரணிக்கு மிகவும் சவால் தரும் வகையில் நடந்திருந்தது. குறிப்பிட்ட அந்த T-20 தொடரில் இலங்கை அணியினை வழிநடாத்துவதில் சிறப்பாக செயற்பட்டதனாலேயே இலங்கை அணியின் ஒரு நாள் மற்றும் T-20 தலைவர் பதவி திசர பெரேராவுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதோடு இலங்கை அணி இந்த T-20 தொடரின் மூலம் புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்கவின் சேவைகளைப் பெற இருக்கின்றது.

இலங்கை அணி, பாகிஸ்தானுடனான தொடரினை பறிகொடுத்த போதிலும், இவ்வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுடன் நடைபெற்ற T-20 தொடர்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20 தொடருக்கான முதல் அழைப்பு இந்தியாவிடம் கையளிப்பு

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும்….

அத்தொடர்களில் காணப்பட்ட முக்கிய வீரர்கள் பலர் பாகிஸ்தானுடனான கடைசி T-20  தொடரில் பாதுகாப்பு காரணங்கள் கருதி விளையாடி இருக்கவில்லை. ஆனால் தற்போது இலங்கை அந்த முக்கிய வீரர்களுடன் இந்தியாவை எதிர்கொள்கின்றது. இவர்களில் இலங்கை சார்பான அணியின் துடுப்பாட்டத்தினை வலுப்படுத்த உபுல்  தரங்க, நிரோஷன் திக்வெல்ல மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகிய முக்கிய வீரர்கள் காணப்படுகின்றனர்.

உபுல்  தரங்க

இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான தரங்க, அண்மையில் நடந்து முடிந்த பங்களாதேஷ் பிரீமியர் லீக் T-20 தொடரில் சில்லெட் சிக்ஸர்ஸ் அணிக்காக ஆறு போட்டிகளில் விளையாடி 41.40 என்கிற சராசரியோடு 207 ஓட்டங்களினை குவித்திருக்கின்றார். அதோடு  இந்திய அணியுடனான ஒரு நாள் தொடரிலும் இலங்கையின் முன்னாள் தலைவரான தரங்க அதிக ஓட்டங்கள் சேர்த்த ஒருவராகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்த வருடத்தில் இலங்கை அணிக்காக T-20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (194) குவித்த வீரராக திக்வெல்ல காணப்படுகின்றார். சில உபாதைகளினால் இலங்கை அணி விளையாடிய பல போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்திருந்த அஞ்செலோ மெதிவ்ஸின் சிறப்பாட்டமே இலங்கை தென்னாபிரிக்க அணியுடனான T-20 தொடரினை இந்த வருடத்தில் கைப்பற்ற காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிரோஷன் திக்வெல்ல

இவர்களோடு சேர்த்து அசேல குணரத்ன, சதீர சமரவிக்ரம, குசல் ஜனித் பெரேரா (உடற்தகுதி சரியாகும் பட்சத்தில்), தசுன் சானக்க மற்றும் அணித் தலைவர் திசர பெரேரா ஆகியோர் இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத்துக்கு துருப்புச் சீட்டு வீரர்களாவர். எனவே, பலமிக்க துடுப்பாட்ட வீரர்கள் அடங்கிய இலங்கை அணிக்குழாமே இந்தியாவை எதிர்கொள்கின்றது.

அஞ்செலோ மெதிவ்ஸ்

இலங்கை அணியின் பந்து வீச்சினை எடுத்துக்கொள்ளும் போது, இம்முறைக்கான இந்திய அணிக்கெதிரான குழாத்தில் லசித் மாலிங்க, T-20 போட்டிகளுக்கான சிறப்பு பந்துவீச்சாளர் இசுரு உதான ஆகியோர் அடக்கப்படவில்லை. இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி அதிக அனுபவத்தினைக் கொண்டிருக்கும் வீரரான லசித் மாலிங்க இல்லாமல் இருப்பது இலங்கை அணிக்கு பெரிய இழப்பாகும். அதோடு லசித் மாலிங்கவே இலங்கை சார்பாக இந்த வருடத்தில் T-20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராகவும் காணப்படுகின்றார்.  

இம்முறை இலங்கை அணி புதிய பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கின்றது. இதில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சினை நுவான் பிரதீப்புடன் இணைந்து பகுதிநேர பந்து வீச்சாளர்களான திசர பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தசுன் சானக்க ஆகியோர் முன்னெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுழல் வீரர்களினை எடுத்து நோக்கும் போது, இலங்கை இம்முறை வலது கை சுழல் வீரர் ஒருவரையும், இடது கை சுழல் வீரர் ஒருவரையும் களமிறக்க எதிர்பார்க்க முடியும். வலது கை வீரருக்கான பொறுப்பினை அகில தனன்ஞய எடுத்துக் கொள்ள, பாகிஸ்தான் அணியுடனான இறுதி T-20 தொடரில் அறிமுகமாகிய சத்துரங்க டி சில்வா இடது கை சுழல் வீரராக செயற்பட எதிர்பார்க்க முடியும்.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி

உபுல் தரங்க, நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணத்திலக்க, சதீர சமரவிக்ரம/குசல் ஜனித் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், அசேல குணரத்ன, தசுன் சானக்க, திசர பெரேரா(அணித் தலைவர்),சத்துரங்க டி சில்வா,  நுவான் பிரதீப், அகில தனன்ஞய

இந்திய அணி

இந்தியாவை எடுத்துப் பார்க்கும் போது, இந்தியா டெஸ்ட் மற்றும்  ஒரு நாள் போட்டிகள் போன்று T-20 போட்டிகளிலும் மிகவும் பலம் வாய்ந்த அணியாகவே காணப்படுகின்றது.

இந்தியா கடந்த மாதம் T-20 தரவரிசையில் இரண்டாம் இடத்தில் காணப்படும் நியூசிலாந்து அணியுடனான தொடரினை 2-1 என சொந்த மண்ணில் வைத்து கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ரோஹித் சர்மா

இந்திய அணியினை ஒரு நாள் தொடர் போன்று, இந்த T-20 தொடரிலும் ரோஹித் சர்மா தலைமை தாங்குகின்றார். இந்த தொடரில் இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டிருப்பது இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தியாகும். இலங்கை அணிக்கெதிராக நான்கு T-20 போட்டிகளில் விளையாடியிருக்கும் கோஹ்லி நான்கு போட்டிகளிலும் அரைச் சதம் கடந்திருந்தார்.

அதோடு அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சிக்கர் தவானும் இந்திய அணியில் உள்ளடக்கப்படவில்லை. இவ்வாறாக சில முக்கிய துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்தியா விடுகை தந்திருப்பினும் இந்திய அணியின் துடுப்பாட்டத்தினை குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது.

லோக்கேஷ் ராகுல்

இந்திய அணியின் துடுப்பாட்டத்துக்கு முதுகெலும்பாக இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான லோக்கேஷ் ராகுல், அணித் தலைவர் ரோஹித் சர்மா ஆகியோரினை எதிர்பார்க்க முடியும். இதில் ராகுல் T-20 போட்டிகளில் 50 இற்கு கூடிய துடுப்பாட்ட சராசரியினைக் கொண்டிருக்கின்றார். அதேபோன்று ஐ.பி.எல் போட்டிகளில் அதிக அனுபவத்தினைக் கொண்டிருக்கும் ரோஹித் சர்மாவினையும் இலங்கைப் பந்து வீச்சாளர்கள் கவனமாக கையாள வேண்டி இருக்கின்றது.

மத்திய வரிசை துடுப்பாட்டத்தில் மஹேந்திர சிங் டோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு பலம் சேர்க்க கூடியவர்களாக காணப்படுகின்றனர்.  

T-10 கிரிக்கெட் தொடரில் வெற்றிகளை பறிகொடுத்த இலங்கை வீரர்கள்

கிரிக்கெட் வரலாற்றில் புரட்சியினை ஏற்படுத்தும்..

இந்திய அணியின் பந்து வீச்சு துறையினை எடுத்து நோக்கும் போது மிகவும் சிறந்த வீரர்களை அவர்கள் கொண்டிருக்கின்றனர். இதில் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்றோர் இலங்கை அணிக்கு அதிகம் நெருக்கடி தரக்கூடிய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யுஸ்வேந்திர சாஹல்

அதோடு குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் அவ்வணியின் சுழற்பந்து வீச்சுக்கு பெறுமதி தரக் கூடிய ஆட்களாக காணப்படுவார்கள். இதில் சாஹல் இந்த வருடத்தில் T-20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்து வீச்சாளர்களின் வரிசையில் மூன்றாம் இடத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

எனவே, இரண்டு அணிகளும் பெரும்பாலும் இளம் வீரர்களினையே கொண்டிருப்பதால் நடைபெறவிருக்கும் T-20 தொடர் மிகவும் போட்டித்தன்மை மிக்கதாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

எதிர்பார்க்கப்படும் இந்திய அணி

ரோஹித் சர்மா(அணித்தலைவர்), லோக்கேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், மஹேந்திர சிங் டோனி, ஜஸ்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், மொஹமட் சிராஜ்

இலங்கைஇந்தியா T-20 தொடர் போட்டி அட்டவணை

முதலாவது T-20 போட்டி – டிசம்பர் 20 – கட்டாக் – மாலை 7 மணி
இரண்டாவது T-20 போட்டி – டிசம்பர் 22 – இந்தோர் – மாலை 7 மணி
மூன்றாவது T-20 போட்டி – டிசம்பர் 24 – மும்பை – மாலை 7 மணி