உலக மெய்வல்லுனர் தரவரிசையில் யுபுன் அதிசிறந்த முன்னேற்றம்

146
Yupun Abeykoon climbs up in World rankings Top 20

சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் வெளியிட்டுள்ள மெய்வல்லுனர் வீரர்களுக்கான புதிய தரவரிசையில், இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் தன்னுடைய வாழ்நாள் அதியுயர் புள்ளிகளை பெற்று, 100 மீட்டர் ஆண்களுக்கான உலக தரவரிசைப் பட்டியலில் 20ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அண்மையில் நிறைவுக்கு வந்த சூரிச் டயமண்ட் லீக் மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டரில் யுபுன் அபேகோன் 5ஆவது இடத்தைப் பிடித்தார். எனவே, இதில் வெளிப்படுத்திய திறமைகள் காரணமாக உலக மெய்வல்லுனர் தரவரிசையில் 1285 புள்ளிகளைப் பெற்று 20ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆண்களுக்கான 100 மீட்டர் உலக தரவரிசையில் யுபுன் அபேகோனின் அதிசிறந்த தரவரிசையாக இது அமைந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் வெளியிடப்பட்ட உலக மெய்வல்லுனர் தரவரிசையில் 40ஆவது இடத்தை அவர் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் அண்மைக்காலமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றவரும், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை மற்றும் தெற்காசிய சாதனைகளை தன்வசம் வைத்துள்ளவருமான யுபுன் அபேகோன், இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் கடந்த மாதம் நடைபெற்ற பெதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டியை 10.14 செக்கன்களில் ஓடி முடித்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இதன்மூலம் டங்கன் வைட், ஸ்ரீயானி குலவன்ச மற்றும் சுகத் திலகரத்ன ஆகியோருக்குப் பிறகு பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற மெய்வல்லுனராக இவர் வரலாற்றில் இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, இந்த வார உலக மெய்வல்லுனர் தரவரிசையின்படி, ஆசியாவில் 100 மீட்டர் ஓட்டத்தில் யுபுன் அபேகோனுக்கு முன்னால் உள்ள ஒரே மெய்வல்லுனர் வீரர் ஜப்பானின் அப்துல் ஹக்கீம் சானி பிரவுன் ஆவார். 1305 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டுள்ள அவர் உலக தரவரிசையில் 14ஆவது இடத்தில் காணப்படுகின்றார்.

அதே சமயம் சூரிச் டயமண்ட் லீக்கில் ஆண்களுக்கான 100 மீட்டரில் சம்பியனான அமெரிக்காவின் ட்ரேவோன் ப்ரோமெல் 1457 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<