இலங்கைக்காக வரலாற்று வெண்கலத்தை வென்ற யுபுன் அபேகோன்!

Commonwealth Games 2022

205
 

இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் நடைபெற்றுவரும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப்போட்டியில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.

நேற்று இரவு (03) நடைபெற்ற 3வது அரையிறுதியில் போட்டியிட்ட யுபுன் அபேகோன் 4வது இடத்தை பிடித்திருந்த போதும், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்திருந்தார். நேரடி தகுதியை பெறாவிட்டாலும், சிறந்த நேரப்பிரதியை கொண்டிருந்ததால், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு இவருக்கு கிட்டியிருந்தது.

யுபுன் 100 மீற்றர் ஓட்டத்தின் முதல் சுற்றை 10.06 செக்கன்களில் நிறைவுசெய்திருந்த போதும், அரையிறுதியில் கடுமையான போட்டிக்கு மத்தியில் 10.20 செக்கன்களில் போட்டித்தூரத்தை நிறைவுசெய்து, 4வது இடத்தை பிடித்திருந்தார். அரையிறுதியில் இங்கிலாந்து வீரர் நெதனீல் மிட்செல் பிலெக் முதலிடத்தையும், வேல்ஸின் ஜெரமியாஹ் அஷு இரண்டாவது இடத்தையும், கானாவின் பென்ஜமின் அஷமாட்டி 3வது இடத்தையும் பிடித்துக்கொண்டனர

அரையிறுதிப்போட்டிகளின் நிறைவில், சுமார் 2 மணித்தியாலங்களுக்கு பின்னர் இறுதிப்போட்டி இன்று அதிகாலை (04) 02.00 மணிக்கு ஆரம்பமாகியது. இறுதிப்போட்டியை பொருத்தவரை பொதுநலவாய விளையாட்டு விழாவின் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப்போட்டிக்கு தெரிவான முதல் ஆசிய வீரர் என்ற பெருமையுடன் யுபுன் அபேகோன் களமிறங்கினார்.

அதன்படி, எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய யுபுன் அபேகோன் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி 10.14 செக்கன்களில் போட்டித்தூரத்தை நிறைவுசெய்து வெண்கலப்பதக்கத்தை வெற்றிக்கொண்டார்.

பொதுநலவாய போட்டிகளை பொருத்தவரை சுவட்டு (Track Events) போட்டிகளில் இலங்கைக்கு பதக்கம் வென்றுக்கொடுத்த நான்காவது வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொடுத்ததுடன், 1998ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக இலங்கை வீரர் ஒருவர் சுவட்டு போட்டியொன்றில் பதக்கம் வென்ற பெருமையையும் யுபுன் அபேகோன் பெற்றுக்கொண்டார்.

இதற்கு முதல் டன்கன் வைட் 1950ம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஆண்டுகளுக்கான 440 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்ததுடன், அதன் பின்னர் ஸ்ரீயானி குலவன்ச வெள்ளி பதக்கத்தையும் (1998 – பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டம்), அதே ஆண்டில் சுகத் திலகரட்ன வெண்கலப்பதக்கத்தையும் (ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டம்) வென்றுக்கொடுத்திருந்தனர்.

இவ்வாறான சாதனைகள் மாத்திரமின்றி பொதுநலவாய விளையாட்டு விழாவின் 100 மீற்றர் ஓட்டத்தில் இலங்கைக்கு பதக்கம் வென்றுக்கொடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் யுபுன் அபேகோன் பெற்றுக்கொண்டார்.

இந்த இறுதிப்போட்டியை பொருத்தவரையில் கென்யா வீரர் பெர்டினாண்ட் ஓமயாலா போட்டித்தூரத்தை 10.02 செக்கன்களில் கடந்து தங்கம் வென்றிருந்ததுடன், தென்னாபிரிக்க வீரர் அகானி சிம்பைன் 10.13 செக்கன்களில் போட்டித்தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இதில், 0.01 செக்கன்கள் பின்னடைவின் காரணமாக யுபுன் அபேகோன் வெள்ளிப்பதக்கத்தை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

>> மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க… <<