அயர்லாந்து கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் நடைபெறுவதில் தாமதம்

91
©Getty Images

அயர்லாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் பிற்போடப்பட்டுள்ளது. 

முன்னதாக, அயர்லாந்து அணி 2020 ஆம் ஆண்டு பெப்ரவரியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வீரர்களுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், இலங்கை கிரிக்கெட் சபை 2013 ஆம் ஆண்டு மேற்கொண்ட கிரிக்கெட் போட்டிகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு உடன்படிக்கையில் இலங்கை – அயர்லாந்து அணிகள் மோதும் இந்த டெஸ்ட் போட்டி இடம்பெற்றிருக்கவில்லை. இதற்கு அயர்லாந்து கிரிக்கெட் அணி 2013 ஆம் ஆண்டில் ஐ.சி.சி. இன் முழு அங்கத்துவராக மாறமால் இருந்தமையே காரணமாகும்.

அதன்படி, தற்போதைய உடன்படிக்கையின் காரணமாக 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் போட்டியினை நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாமல் இருப்பதோடு அதுவே, இந்த டெஸ்ட் போட்டி பிற்போடப்படுவதற்கும் காரணமாகும்.

இலங்கை கிரிக்கெட் சபை  2020 ஆம் ஆண்டில் தமது கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பு உடன்படிக்கையினை கைச்சாத்திடவுள்ளதோடு அதில் இந்த டெஸ்ட் போட்டி உள்வாங்கப்பட்டு, அயர்லாந்தின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான புதிய திகதி இலங்கை கிரிக்கெட் சபையினால் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<