30 ஓவர்களில் 500 ஓட்டங்களைக் கடந்த இளம் ஆரம்ப ஜோடி

1151
Yesith Kalupahana and Nimuthu Gunawardena

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் (MCA) நடாத்தப்படும் கிரிக்கெட் பயிற்சி நிலையங்களுக்கு இடையிலான 13 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் CCC கிரிக்கெட் பயிற்சி நிலைய ஆரம்ப வீரர்கள் 30 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 500 ஓட்டங்களைக் கடந்து அசத்தியுள்ளனர்.

கோட்டை ஆனந்த சாஸ்த்ராலய மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் CCC மற்றும் கோல்ட்ஸ் கிரிக்கெட் பயிற்சி நிலையங்களில் 13 வயதுக்கு உட்பட்ட அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்யில் வெற்றி பெற்ற CCC அணியின் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார்.

அதன்படி பாணந்துறை லைசியம் சர்வதேசப் பாடசாலை வீரர் யெசித் களுபஹன மற்றும் கொழும்பு புனித பேதுரு கல்லூரி வீரர் நிமுது குனவர்தன ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர்.  

இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்த யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி

15 வயதின் கீழான டிவிஷன் – III பாடசாலை அணிகளுக்கு..

போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடி காண்பித்த இவர்கள் பந்தை சிக்ஸர்கள் மற்றும் பௌண்டரிகளாக மாற்றி வேகமாக ஓட்டங்களைச் சேர்த்தனர். இதனால் 30 ஓவர்களைக் கொண்ட இந்தப் போட்டியில் தமது இன்னிங்ஸ் நிறைவில் இந்த ஜோடி தமது விக்கெட்டை இழக்காமல் 538 ஓட்டங்களைக் குவித்தது.

இதில் யெசித் களுபஹன வெறும் 90 பந்துகளை எதிர்கொண்டு 18 சிக்ஸர்கள் மற்றும் 37 பௌண்டரிகள் அடங்களாக 287 ஓட்டங்களைக் குவித்தார். இவரது ஜோடியாக இருந்த நிமுது குனவர்தன 95 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 33 பௌண்டரிகளுடன் 226 ஓட்டங்களைப் பெற்றார்.

பின்னர் மிகப் பெரிய இலக்கை நோக்கி தமது இன்னிங்சினைத் தொடர்ந்த கோல்ட்ஸ் இளம் வீரர்கள் 18.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.

அவ்வணியின் எந்தவொரு வீரரும் 30 ஓட்டங்களைத் தாண்டவில்லை. பந்து வீச்சில் CCC அணிக்காக விஹாஷ் 10 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக்களையும், ப்ரவான் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதன் காரணமாக கோல்ட்ஸ் அணி 447 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

போட்டியின் சுருக்கம்

CCC கிரிக்கெட் பயிற்சி நிலையம் – 538/0 (30) யெசித் களுபஹன 287*, நிமுது குனவர்தன 226*.

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் பயிற்சி நிலையம் – 91 (18.2) கெவின் கலகெபிடிய 26, மெதில் ருவன்புர 24, விஹாஷ் கரன்டுவகே 4/10, ப்ரவன் வில்லியம்ஸ் 3/15