இந்திய டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிப்பு

169
Image courtesy - freepressjournal

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான 15 பேர் கொண்ட அணிக் குழாமை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை இன்று (30) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று T-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை தக்கவைத்துக் கொண்டது இந்தியா

இங்கிலாந்துடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில்.

இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணிக் குழாத்திலிருந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டெவோன் ஸ்மித் நீக்கப்பட்டுள்ளார். டெவோன் ஸ்மித் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதால் சுமார் 3 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடர்களில் இணைக்கப்பட்டார்.

எனினும், 9 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய இவர் 2 அரைச்சதங்களை மாத்திரம் பெற்றதுடன், ஏனைய 7 இன்னிங்ஸ்களிலும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். இதனால், டெவோன் ஸ்மித் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுனில் எம்ரிஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த டெஸ்ட் தொடர்களில் விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளர் மிகுவல் கம்மின்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக அல்ஷாரி ஜோசப், ஜெஹ்மர் ஹெமில்டன், கிமோ பௌல் மற்றும் ஜொமல் வரிகன் ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.  

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி, இறுதியாக நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என சமப்படுத்தியிருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றியிருந்தது. இதனால் பலமான இந்திய அணியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் கவுர்ட்ணி பிரவுண் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு T-20 தொடரில் முதன் முறையாக விளையாடவுள்ள ஜோ ரூட்

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் ஜோ ரூட் மற்றும்..

மேற்கிந்திய தீவுகள் அணி இறுதியாக 2013ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியிருந்தது. இதில் 0-2 என மேற்கிந்திய தீவுகள் அணி, தொடரை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஒக்டோபர் 4-8ஆம் திகதிகளிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஒக்டோபர் 12-16ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளன.

இந்திய டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் குழாம்

ஜேசன் ஹோல்டர் (தலைவர்), சுனில் எம்ரிஸ், தேவிந்ர பிஷு, கிரைக் பிராத்வைட், ரொஷ்டன் சேஷ், ஷேன் டொவ்ரிச், செனொன் கேப்ரியல், ஜஹ்மர் ஹெமில்டன், சிம்ரொன் ஹெட்மயர், அல்ஷாரி ஜோசப், கீமொ பௌல், கீமார் ரோச், ஜொமல் வரிகன்  

>> கிரிக்கெட் காணொளிகளைப் பார்வையிட <<