பிரசாதனியின் பொறுப்பான ஆட்டத்தால் ரெட்ஸ் அணிக்கு வெற்றி

SLC Women's Super Four 50 Over Tournament 2022

68

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் Super Four ஒருநாள் தொடரின் ஐந்தாவது போட்டியில் புளூஸ் அணியை எதிர்கொண்ட ரெட்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இம்முறை போட்டி தொடரில் இரண்டாவது வெற்றியை ரெட்ஸ் அணி பதிவு செய்தது.

கொழும்பு BRC மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புளூஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய புளூஸ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

புளூஸ் அணியின் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அமா கான்ஞனா 78 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களையும், லங்கா மெண்டிஸ் 71 பந்துகளில் 43 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று வலுச்சேர்த்தனர்.

பந்துவீச்சில் ரெட்ஸ் அணி சார்பாக தாருகா ஷெஹானி 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 203 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ரெட்ஸ் அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை பிரசாதனி வீரக்கொடியின் அரைச்சத்தின் உதவியுடன் 46.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்களை எடுத்து 3 விக்கெட்டுகளால் வெற்றயீட்டியது.

ரெட்ஸ் அணிக்காக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய, பிரசாதனி வீரக்கொடி 7 பௌண்டரிகளுடன் 73 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டதுடன், புளூஸ் அணியின் பந்துவீச்சில் சத்யா சந்தீபனி மற்றும் ஹசினி லியனகே ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் ரெட்ஸ் அணி தங்களுடைய இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளதுடன், புளூஸ் அணி தங்களுடைய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

போட்டியின் சுருக்கம்

புளூஸ் அணி – 202/4 (50) – அமா கான்ஞனா 78*, லங்கா மெண்டிஸ் 43, லிஹினி அப்சரா 31, தாருகா ஷெஹானி 2/25

ரெட்ஸ் அணி – 203/7 (46.5) – பிரசாதனி வீரக்கொடி 73, நவோத்யா பெர்னாண்டோ 32, நிலக்ஷி டி சில்வா 22, மல்ஷா ஷெஹானி 21

முடிவு – ரெட்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<