இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின் கீழ் டிவிஷன் 3 டியர் A காலிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரி அணி 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
திம்பிரிகஸ்கட்டுவ மாரிஸ் ஸ்டெல்லா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் யாழ். மத்தியக் கல்லூரி அணி மொறட்டு மெதடிஸ்ட் உயர் கல்லூரி அணியை எதிர்த்தாடியது.
கொழும்பு அணிக்காக ஹெட்ரிக் சதமடித்த கமிந்து மெண்டிஸ்
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மெதடிஸ்ட் உயர் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை, மத்தியக் கல்லூரி அணிக்கு வழங்கியது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மத்தியக் கல்லூரி அணிக்கு ரஞ்சித்குமார் நியூட்டன் (19) மற்றும் ஜெகதீஸ்வரன் விதுசன் (39) ஆகியோர் ஓரளவு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து விக்கெட்டுகள் சாய்க்கப்பட்டாலும் நிசாந்தன் அஜய் அற்புதமான சதத்தை பதிவுசெய்து அணியை சிறந்த ஓட்ட எண்ணிக்கைக்கு அழைத்துச்சென்றார். அஜய் 89 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 14 பௌண்டரிகள் அடங்கலாக 117 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இவருக்கு உதவியாக சகாதேவன் சயந்தன் 46 ஓட்டங்களையும், போல் பரமதயாளன் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, மத்தியக் கல்லூரி அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 319 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் சிஹின டெவ்மித் 4 விக்கெட்டுகளையும், கவீன் அஞ்சன 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மெதடிஸ்ட் உயர் கல்லூரி அணி ஆரம்பம் முதல் தடுமாறத் தொடங்கியது. அந்த அணியின் முதல் 4 விக்கெட்டுகளும் 34 ஓட்டங்களுக்குள் சாய்க்கப்பட்டன. இதன் பின்னர் சந்துன் தரங்க 48 ஓட்டங்களையும், சமோத் மதுசங்க 32 ஓட்டங்களையும் அதிகட்பசமாக பெற்றுக்கொடுத்த போதும், 32.2 ஓவர்கள் நிறைவில் மெதடிஸ்ட் உயர் கல்லூரி 151 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
பந்துவீச்சை பொருத்தவரை ரஞ்சித்குமார் நியூட்டன் மற்றும் தகுதாஸ் அபிலாஷ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தப் போட்டியில் 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யாழ். மத்தியக் கல்லூரி அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுருக்கம்
- யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரி – 319/10 (48.5), நிஷாந்தன் அஜய் 117, சகாதேவன் சயந்தன் 46, ஜெகதீஸ்வரன் விதுசன் 39, சிஹின டெவ்மித் 41/4, கவீன் அஞ்சன 59/3
- மொறட்டுவ மெதடிஸ்ட் உயர் கல்லூரி – 151/10 (32.2), சந்துன் தரங்க 48, சமோத் மதுசங்க 32, தகுதாஸ் 20/3, ரஞ்சித்குமார் நியூட்டன் 37/3
முடிவு – யாழ். மத்தியக் கல்லூரி அணி 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<