மேஜர் லீக்கில் ஹெட்ரிக் சம்பியன் பட்டம் வென்று கொழும்பு அணி சாதனை

SLC Major League Tournament 2022

116

சமிந்து விஜேசிங்க, அஷான் ப்ரியன்ஜன் ஆகியோரது அபார சதம் மற்றும் பவன் ரத்நாயகவின் அரைச் சதத்தின் மூலம் தமிழ் யூனியன் கழகத்துக்கு எதிரான மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை கொழும்பு கிரிக்கெட் கழகம் சமநிலையில் முடித்துக் கொண்டு முதல் இன்னிங்ஸுக்கான புள்ளிகளை வென்றது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2022/23 பருவகாலத்துக்கான முதல்தர கழகங்களுக்கு இடையிலான மேஜர் பிரீமியர் லீக் மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் கொழும்பு கிரிக்கெட் கழகம் சம்பியனாக மகுடம் சூடியது.

இதன் மூலம் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக 3ஆவது தடவையாக சம்பியன் பட்டம் வென்று கொழும்பு கிரிக்கெட் கழகம் புதிய வரலாறு படைத்தது. முன்னதாக 2019 இல் அஷான் பிரியன்ஜன் தலைமையிலும், 2020 இல் குசல் மெண்டிஸ் தலைமையிலும் கொழும்பு கிரிக்கெட் கழகம் சம்பியன் பட்டங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் இந்தப் போட்டியில் சம்பியன் பட்டத்தை தவறவிட்ட தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம், ஹெட்ரிக் சம்பியனாகும் வாய்ப்பை தவறவிட்டது. முன்னதாக அந்த அணி இந்த ஆண்டு நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான வளர்ந்து வரும் போட்டித் தொடர் மற்றும் மேஜர் பிரீமியர் ஒருநாள் தொடர்களில் சம்பியன் பட்டங்களை வென்றன.

கடந்த வியாழக்கிழமை (17) கொழும்sபு SSC மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய தமிழ் யூனியன் கழகம், சதீர சமரவிக்ரமவின் (188) அபார சதம் மற்றும் இசுரு உதான (88), நவோத் பரணவிதான (54) ஆகியோரது அரைச் சதங்களின் உதவியுடன் முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 558 ஓட்டங்களை எடுத்தது.

கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் பந்துவீச்சில் விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு கிரிக்கெட் கழகம், போட்டியின் மூன்றாவது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 411 ஓட்டங்களை எடுத்திருந்தது.

சமிந்து விஜேசிங்க 71 ஓட்டங்களையும், அணித் தலைவர் அஷான் பிரியன்ஜன் 52 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று களத்தில் இருந்தனர்.

இது இவ்வாறிருக்க, போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் (20) கொழும்பு கிரிக்கெட் கழகம் தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

கொழும்பு அணிக்காக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சமிந்து விஜேசிங்க, அஷான் பிரியன்ஜன் ஜோடி 6ஆவது விக்கெட்டுக்காக இரட்டைச் சத (219) இணைப்பாட்டமொன்றை மேற்கொண்டு நம்பிக்கை கொடுத்தனர்.

இதில் அணித் தலைவர் அஷான் பிரியன்ஜன் 100 ஓட்டங்களையும், சகலதுறை வீரர் சமிந்து விஜேசிங்க 139 ஓட்டங்களையும் எடுத்து ரவிந்து பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த பவன் ரத்னாயக அதிரடியாக ஆடி அரைச் சதம் கடந்து 85 ஓட்டங்களைக் குவிக்க, கொழும்பு கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 669 ஓட்டங்களைக் குவித்தது.

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் பந்துவீச்சில் ரவிந்து பெர்னாண்டோ 160 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இம்முறை மேஜர் லீக் தொடரில் அவரது 2ஆவது 5 விக்கெட் குவியல் இதுவாகும்.

பின்னர் 111 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள போட்டியின் ஆட்ட நேரம் நிறைவுக்கு வந்தது. இதனால், போட்டியும் சமநிலை அடைந்தது.

தமிழ் யூனியன் கழகத்துக்காக பந்துவீச்சைப் போல துடுப்பாட்டத்திலும் பிரகாசித்த ரவிந்து பெர்னாண்டோ 56 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொள்ள, கொழும்பு அணியின் பந்துவீச்சில் சொனால் தினூஷ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இம்முறை போட்டித் தொடரில் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகத்தின் கௌமால் நாணயக்காரவும், சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை முவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் பசிந்து சூரியபண்டாரவும் பெற்றுக்கொண்டனர். அத்துடன், தொடர் நாயகன் விருதை ராகம கிரிக்கெட் கழகத்தின் நிஷான் மதுஷ்க பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கழகம் – 558 (135.2) – சதீர சமரவிக்ரம 188, இசுரு உதான 88, நவோத் பரணவிதான 54, ரொன் சந்த்ரகுப்த 48, கவிந்து பத்திரத்ன 46, ரவிந்து பெர்னாண்டோ 45, விஷ்வ பெர்னாண்டோ 4/102, லக்ஷான் சந்தகன் 4/128

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 669 (172.5) – சமிந்து விஜேசிங்க 139, கமிந்து மெண்டிஸ் 105, அஷான் ப்ரியன்ஜன் 100, பவன் ரத்நாயக 85, மினோத் பானுக 75, ரவிந்து பத்திரத்ன 6/160

தமிழ் யூனியன் கழகம் – 145/4 (15.5) – ரவிந்து பெர்னாண்டோ 56, சதீர சமரவிக்ரம 43, ஷிரான் பெர்னாண்டோ 28, சொனால் தினூஷ 2/52

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<