விஸ்டனின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஜோ ரூட்

1695

விஸ்டன் இதழின் 2022ஆம் ஆண்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல, விஸ்டன் இதழின் இந்த ஆண்டுக்கான தலைசிறந்த T20 கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் வீரர் மொஹமட் ரிஸ்வான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட்டின் ‘பைபிள்’ என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் இதழ் இங்கிலாந்தில் இருந்து ஆண்டுதோறும் வெளியாகிறது. கிரிக்கெட் தகவல்களை சுமந்து வரும் இந்த இதழில் வீரர்களின் பெயர் இடம்பிடிப்பது கௌரவமாக கருதப்படுகிறது.

இதனிடையே, விஸ்டன் இதழினால் ஆண்டுதோறும் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள் குறித்த விபரம் வெளியிடப்படும். 1889 முதல் இதனை விஸ்டன் அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள் யார் என்பதை விஸ்டன் அறிவித்துள்ளது.

இதில் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்த பட்டியலில் முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான சிறந்த ஐந்து வீரர்களாக இங்கிலாந்தின் ஜோ ரூட் ஒல்லி ரொபின்சன், இந்தியாவின் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, நியூசிலாந்தின் டெவோன் கொன்வே, தென்னாபிரிக்க வீராங்கனை டேன் வான் நீக்கெர்க் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதில் அண்மையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்த ஜோ ரூட், விஸ்டன் இதழின் முன்னணி கிரிக்கெட் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு 15 டெஸ்ட் போட்டிககளில் விளையாடி 6 சதங்கள், 4 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 1708 ஓட்டங்களை அவர் குவித்தார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வேகத்தில் மிரட்டிய ஜஸ்பிரித் பும்ரா, 18 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். அதேபோல குறித்த தொடரில் இங்கிலாந்தின் ஒல்லி ரொபின்சன் 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மறுபுறத்தில் துடுப்பாட்டத்தில் அசத்திய இந்தியாவின் ரோஹித் சர்மா, 4 டெஸ்ட் போட்டிகளில், 368 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

இதற்கு முன்னதாக இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், கபில்தேவ், திலீப் வெங்சர்கார், அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லக்ஷ்மணன், சஹீர் கான், ஷிகர் தவான், விராட் கோஹ்லி ஆகியோர் விஸ்டன் இதழில் இடம்பெற்றனர்.

கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான அறிமுக டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்து சாதனை படைத்த நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டெவோன் கொன்வேயும் இந்த ஆண்டின் விஸ்டன் இதழின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, கடந்த ஆண்டில் 27 T20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 11 அரைச்சதங்கள் உட்பட 1329 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை படைத்த பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளர் மொஹமட் ரிஸ்வான், T20 போட்டியில் உலகின் முன்னணி வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

அதேபோல கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 288 ஓட்டங்களைக் குவித்த தென்னாபிரிக்க வீராங்கனை லிசெல் லீ உலகின் முன்னணி வீராங்கனையாக தேர்வாகியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஆண்டு ஷெக் கிராவ்லி, ஜேசன் ஹோல்டர், மொஹமட் ரிஸ்வான், டொம் சிப்லி, டேரன் ஸ்டீவன்ஸ் ஆகியோர் சிறந்த ஐந்து வீரர்களாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<