இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் கிறிஸ் சில்வர்வூட்

286

இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்தினைச் சேர்ந்த கிறிஸ் சில்வர்வூட் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>“ஹஸரங்கவின் பந்துவீச்சை மீண்டும் எதிர்க்க தயார்” – பானுக

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் கிறிஸ் சில்வர்வூடின் நியமனம் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான கிறிஸ் சில்வர்வூட், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி கிறிஸ் சில்வர்வூட் இங்கிலாந்து அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கின்றார். அத்துடன் அவர் நீண்டகாலம் யோக்சைர் மற்றும் மிடில்செக்ஸ் அணிகளுக்காக கவுண்டி போட்டிகளில் ஆடிய அனுபவத்தினைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து ஜிம்பாப்வே உள்ளூர் அணியொன்றுக்கு பயிற்சியாளராக தனது கிரிக்கெட் பயிற்றுவிப்பு வாழ்க்கையினைத் தொடர்ந்த கிறிஸ் சில்வர்வூட், இங்கிலாந்தின் உள்ளூர் கழகமான எசெக்ஸ் அணியினை 2017ஆம் ஆண்டு 25 வருடங்களின் பின்னர் கவுண்டி சம்பியன்ஷிப் வெற்றியாளர்களாக மாற தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

>>கண்டி அணிக்காக சதமடித்து அசத்திய ஓஷத பெர்னாண்டோ

அத்துடன் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினை நீண்டகாலம் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் முதல்தர அணியாக நீடிப்பதற்கும் தனது பங்களிப்பினை வழங்கியிருந்த கிறிஸ் சில்வர்வூட், இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மறுமுனையில் கிறிஸ் சில்வர்வூடின் ஆளுகைக்குள் வந்ததன் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி, முதலாவதாக விளையாடவுள்ள தொடராக பங்களாதேஷ் அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அமைகின்றது.

இந்த டெஸ்ட் தொடரானது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக மே மாத நடுப்பகுதியில் பங்களாதேஷில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<