இலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவதில் தொடரும் சிக்கல்

203

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் தேர்தல் குழு தீர்மானித்துள்ளது. எனினும், நாட்டில் தற்போது நிலவி வருகின்ற அரசியல் நிலைமை உள்ளிட்ட காரணங்களினால் விளையாட்டுத்துறை அமைச்சரின் பதவிக்கு உயர்நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையின் காரணமாக குறித்த தேர்தலை உரிய தினத்தில் நடத்த முடியாமல் போகலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்காக மூவரடங்கிய குழு நியமனம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின்…

கடந்த மே மாதம் 31ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இலங்கை கிரிக்கட்டின் தேர்தலில் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றை வெளியிடுமாறு குறித்த தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிடுகின்ற நிஷாந்த ரணதுங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், ஜுன் 14ஆம் திகதி வரை தேர்தலை ஒத்திவைக்கும்படி இடைக்கால தடை உத்தரவொன்றும் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அந்த இடைக்காலத்தடை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டது.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்துக்குள் நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாக சபை கடந்த ஜுலை மாதம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவித்திருந்தது.

இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய தேர்தல் குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் தம்மிக்க முத்துகல தெரிவித்தார்.

அதற்கான வேட்பு மனுக்கள் 14ஆம், 17ஆம் திகதிகளில் ஏற்றுக் கொள்ளப்படும் என அனைத்து கிரிக்கெட் சங்கங்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வேட்பு மனுக்கள் தொடர்பிலான ஆட்சேபனைகள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். அதன்பிறகு ஜனவரி முதலாம், 2ஆம் திகதிகளில் ஆட்சேபனை குறித்த விசாரணைகள் இடம்பெறும்.

இதன்படி, உரிய விசாரணைகளின் பிறகு தேர்தலில் போட்டியிட தகுதியுடைய நபர்களது விபரங்கள் உள்ளிட்ட தகவல்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதி பகிரங்கப்படுத்தப்படும்.

பின்னர் தேர்தலில் போட்டியிட தகுதிபெற்றவர்கள் ஜனவரி 14ஆம் திகதி அறிவிக்கப்பட்டு, பெப்ரவரி 7ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலில் வாக்களிக்கவுள்ள அனைத்து கிரிக்கெட் சங்கங்களினதும் உறுப்பினர்களது பெயர், விபரங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு இதுதொடர்பிலான இறுதி அறிவிப்பு நேற்றுமுன்தினம் (05) அனைத்து சங்கங்களுக்கும் பதிவுத் தபால் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தேர்தல் குழு தெரிவித்துள்ளது.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிப்பதற்கு முன் வாக்களிப்பதற்கு தகுதிபெற்ற சங்கங்களினது பெயர் விபரங்கள் தொடர்பில் 4 ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன. இதனை விசாரித்த தேர்தல் குழு, களுத்துறை உடற்கட்டழகர் கழகம், வென்னப்புவ சேர்வியரைட்ஸ் மற்றும் தென் மாகாண கிரிக்கெட் சங்கங்கள் ஆகியவற்றுக்கு வாக்குரிமையை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கிரிக்கெட் நிறுவன தேர்தலை நடத்துவது குறித்து அமைச்சர் பைசரினால் விசேட அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின்…

எனினும், குறித்த தீர்மானத்துக்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் கழகங்கள் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் மேன்முறையீடு செய்ய முடியும் என கிரிக்கெட் தேர்தல் குழு உரிய சங்கங்களிடம் தெரியப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், புதிய விளையாட்டு திருத்தச் சட்டத்தின் பிரகாரம், சங்கமொன்றுக்கு தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமை மறுக்கப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக 7 நாட்களுக்குள் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் மேன்முறையீடு செய்ய வேண்டும்.

ஆனால், தற்போது நாட்டில் நிலவுகின்ற அரசியல் குழப்ப நிலை காரணமாக விளையாட்டுத்துறை அமைச்சரின் பதவிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதால் குறித்த சங்கங்களின் மேன்முறையீடு தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நடத்த முடியுமா என்ற சந்தேகமும் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு திலங்க சுமதிபால போட்டிடுவதற்காக வழங்கப்பட்டுள்ள பெயர்ப் பட்டியலை நிராகரிக்க உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு, நிஷாந்த ரணதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, கடந்த 3ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எனினும், குறித்த தினத்தில் வேறு பல வழக்குகள் விசாரணைத்து எடுத்துக் கொள்ளப்பட்டதால், குறித்த வழக்கை 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் திகதி வரையில் ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் நடைபெற்றால் அதில் திலங்க சுமதிபாலவின் அணி சார்பில் வேறு ஒருவருக்கு போட்டியிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<