இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவதற்கான கால எல்லையை அடுத்த வருடம் பெப்ரவரி 9ஆம் திகதிவரை நீடிப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியிருந்த நிலையில், குறித்த தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலை நடத்துவதற்கான இறுதித் திகதியை அறிவித்தது ஐசிசி
இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC)…
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அதிகாரிகளுக்கும், விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கடந்த 29ஆம் திகதி டுபாயில் அமைந்துள்ள ஐ.சி.சி தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்துவது தொடர்பில் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை நிர்வாக செயற்பாடுகளுக்காக நால்வர் கொண்ட குழுவொன்றை நியமிக்கவும், குறித்த தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்குள் நடாத்த வேண்டும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆலோசனை வழங்கியது.
இந்த நிலையில், ஐ.சி.சியில் இடம்பெற்ற விசேட சந்திப்பினைத் தொடர்ந்து, விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா இந்தோனேஷியாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு விழாவுக்காக ஜகார்த்தாவுக்கு வருகை தந்திருந்தார்.
இதுஇவ்வாறிருக்க, விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் தலைமையில் ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்றிருந்த இலங்கையின் விளையாட்டுத்துறை அதிகாரிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று ஜகார்த்தவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரான தர்ஷன எம். பெரேராவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,
”ஐ.சி.சியுடன் இடம்பெற்ற இரண்டாவது கலந்துரையாடல் மூலம் இறுதி தீர்மானமொன்றுக்கு வரமுடிந்தது. முதலில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவதற்கான கால எல்லையை அடுத்த வருடம் பெப்ரவரி 9ஆம் திகதிவரை நீடிப்பதற்கு ஐ.சி.சி அனுமதி வழங்கியது. இதனையடுத்து இன்று நான் இலங்கை கிரிக்கெட் தேர்தல் முறைமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசினேன். தற்போதுள்ள சட்ட விதிமுறைகளுக்கு சங்கங்களில் உள்ள அங்கத்துவர்களைக் கொண்டுதான் தேர்தல் குழு நியமிக்கப்படுகின்றது. எனவே, இந்த முறையை மாற்றி கிரிக்கெட் நிறுவனத்துக்கான தேர்தல் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மூவரையும், தேர்தல் தொடர்பில் அனுபவம் கொண்ட ஓய்வுபெற்ற அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட ஐந்து பேர் இடம்பெற வேண்டும் என ஐ.சி.சி ஆலோசனை வழங்கியது.
இதன்படி, கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்புடைய எந்தவொரு நபரையும் இந்தக் குழுவில் நியமிக்க மாட்டேன். அவ்வாறு செய்தால் நானும் கிரிக்கெட் பிரிவினைவாதத்துக்கு ஆளாகிவிடுவேன். கிரிக்கெட்டை நிர்வாகம் செய்ய கிரிக்கெட் விளையாடியவர்களோ அல்லது கிரிக்கெட் பற்றிய அறிவுள்ளவர்களோ இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதற்காகத் தான் தெரிவுக் குழுவினர், நிறைவேற்று அதிகாரி உள்ளிட்டவர்கள் இருக்கின்றனர்” என தெரிவித்தார்.
இதன்போது, இடைக்கால நிர்வாக சபையொன்றை நியமிப்பதற்கான எண்ணம் இருக்கின்றதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,
ஒரு போதும் கிடையாது. தற்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து செயற்பாடுகளும் எனது செயலாளரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதைத்தவிர, அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு மேலும் நால்வரை நியமிக்குமாறு ஐ.சி.சி உத்தரவிட்டது. இதற்காக இலங்கையின் நிர்வாகத் துறையில் அனுபவமிக்க தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த நான்கு பேரை நியமிக்க எதிர்பார்த்துள்ளேன். இந்தக் குழுவின் தலைவராக எனது செயலாளர் செயற்படும் அதேவேளை, ஏனைய நால்வரும் நிர்வாக செயற்பாடுகளில் அவருக்கு உதவி செய்வார்கள். எனவே இந்த குழுவை ஒருபோதும் இடைக்கால நிர்வாக சபையாக கருத வேண்டாம். அதேபோல இந்த நால்வருக்கும் ஒருபோதும் செயலாளரை மீறி தனிப்பட்ட முறையில் எந்தவொரு பக்கச்சார்பான தீர்மானங்களையும் மேற்கொள்ள முடியாது.
ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் லசித் மாலிங்க
செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி ஐக்கிய…
அத்துடன், பெப்ரவரி 9ஆம் திகதிக்கு முன் தேர்தலை நடத்துவதற்கு எனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தேர்தலை நடத்துவது தொடர்பிலான ஒழுங்கு விதிமுறைகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். பெரும்பாலும் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன் தேர்தலை நடத்த முடியும் என நம்புகிறேன்.
இதேவேளை, ஐ.சி.சியினால் வருடாந்தம் ஒதுக்குகின்ற 450 மில்லியன் ரூபா நிதியினை இந்த முறையும் வழங்குவதற்கு ஐ.சி.சி பூரண சம்மதத்தை தெரிவித்தது. அதேபோல, நிதி தேவைப்பாடுகள் இருப்பின் உடனடியாக அறிவிக்கும்படியும் அவர்கள் கேட்டுக் கொண்டதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதன்படி, விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட சுயாதீன தேர்தல் குழுவின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறவுள்ள முதல் தேர்தலாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் அமையவுள்ளது. அத்துடன், அந்த தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் நிறைவடைவதற்குள் இடம்பெறலாம் என விளையாட்டுத்துறை அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனினும், இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் தொடர்பில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று இடம்பெற்று வருவதுடன், அதன் அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளன.
எனவே, அன்றைய தினம் நீதிமன்றத்தினால் வழங்கப்படுகின்ற தீர்ப்புக்கு அமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் நடைபெறும் தினம் மாறுபடலாம் என விளையாட்டுத்துறை அமைச்சின் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<