மேற்கிந்திய தீவுகள் புதிய டி20 தலைவராக ப்ரத்வைட்

164
Carlos Brathwaite

மேற்கிந்திய தீவுகள் டி20 கிரிக்கட் அணியின் தலைவராக டேரன் சமி சுமார் 6 ஆண்டுகளாக இருந்தார். இவர் தலைமையில் அந்த அணி இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்று அசத்தியது.

சகலதுறை ஆட்டக்காரராகத் திகழும் டேரன் சமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் வாரியத்தின் தேர்வுக்குழுத் தலைவர் தொலைபேசி அழைப்பு மூலம்  நீங்கள் தலைவராக செயற்பட முடியாது என்று தெரிவித்தார்.

இதனால் நான் இனிமேல் மேற்கிந்திய தீவுகள்  அணியின் தலைவனாக இருக்கப்போவதில்லை என்று சமி கூறியிருந்தார்.

இதற்கிடையில் இந்திய மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் அமெரிக்காவில் நடைபெறுகிறது. முதல் போட்டி 27ஆம் திகதியும், 2ஆவது போட்டி 28ஆம் திகதியும் நடக்கிறது. இதற்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த அணியின் தலைவராக  கார்லோஸ் ப்ரத்வைட் நியமிக்கப்பட்டுள்ளார். டேரன் சமியின் தலைமைப் பதவி பறிக்கப்பட்டதோடு அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின்போது கடைசி ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்கள் அடித்து அணியை வெற்றிபெற வைத்த 28 வயது நிரம்பிய கார்லோஸ் ப்ரத்வைட் எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் தலைமைப் பதவிவகிப்பார்.

அத்தோடு இந்திய மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் டி20 தொடரின் 2 போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது

அமெரிக்காவில் கால்பந்து, பேஸ்பால் போன்ற விளையாட்டுக்குத்தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கட்டுக்கு சொல்லிக் கொள்ளும் அளவு ரசிகர்கள் இல்லை.

கடந்த வருடம் நவம்பரில் அமெரிக்காவில் சச்சின் வோர்ன்  நடத்தியஆல் ஸ்டார்ஸ்கிரிக்கட் தொடருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சமீபத்தில் கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் சிலப் போட்டிகளும் அங்கு நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்திய மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 2 போட்டிகளை அமெரிக்காவில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இம்மாதம் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் நடக்கும் இந்த டி20 போட்டிகள் புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் புரோவார்டு பார்க் மைதானத்தில் நடக்கிறது.

இந்திய மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இந்த டி20 போட்டிகளைப் பார்க்க அமெரிக்க ரசிகர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி:

அன்ட்ரே பிளெட்சர், 2. அன்ட்ரே ரஸல், 3. கார்லோஸ் ப்ரத்வைட் (தலைவர்), 4. கிறிஸ் கெய்ல், 5. டுவையின்  பிராவோ, 6. எவின் லெவிஸ், 7. ஜேசன் ஹோல்டர், 8. ஜான்சன் சார்லஸ், 9. கிரன் பொல்லார்ட், 10. லென்டில் சிம்மன்ஸ், 11. மார்லன் சாமுவேல்ஸ், 12. சாமுவெல் பத்ரி, 13. சுனில் நரைன்.