இலங்கை அணிக்கு அபார வெற்றி

764
இலங்கை அணிக்கு அபார வெற்றி

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர் 10’ சுற்றின் 4ஆவது  போட்டி  கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் குழு ஒன்றில் இடம் பிடித்துள்ள  எஞ்சலோ மெதிவ்ஸ் தலைமையிலான இலங்கை அணி அஸ்கர் ஸ்டனிக்சாய் தலைமையிலான ஆப்கானிஸ்தான்  அணியை எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்சாய் முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தார்.

நேற்றைய போட்டியில் விளையாடிய அணிகளின்  விபரம்

இலங்கை அணி :

எஞ்சலோ மெதிவ்ஸ் (தலைவர்), திலகரத்ன தில்ஷன், தினேஷ் சந்திமால், லஹிரு திரிமன்ன, சாமர கபுகெதர, , மிலிந்த சிறிவர்தன, செஹான் ஜயசூரிய, திசர பெரேரா, நுவன் குலசேகர, துஷ்மன்த சமீர, ரங்கன ஹேரத்

ஆப்கானிஸ்தான் அணி  :

அஸ்கர் ஸ்டனிக்ஸாய் (தலைவர்)  முகமது ஷாஸத், நூர் அலி, முகமது நபி, கரீம் சாதிக், ஷாபியுல்லா, நஜிபுல்லா, ஸத்ரான், ஷபிக், ரஷீத் கான், தௌல்த் ஸத்ரான், ஹமீத் ஹசன்.

நடுவர்கள் : ப்ரூஸ் ஒக்சன்போர்ட் மற்றும் ஜொயில் வில்சன்

அஸ்கர் ஸ்டனிக்ஸாயின் தீர்மானத்திற்கு அமைய ஆப்கனிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக நூர் அலி சத்ரன் மற்றும் முஹமத் ஷசாத் ஆகியோர் களம் இறங்கினர். போட்டியின் 3ஆவது ஓவரில் முஹமத் ஷசாத் 8 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இலங்கை அணித் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ்  வீசிய பந்தை அடித்து ஆட முனைந்த போது மட்டையின் விளிம்பில் பட்ட பந்து மேலெல துஸ்மந்த சமீர அதை பிடியெடுத்ததன் மூலம் ஆட்டம் இழந்தார்.  அப்போது ஆப்கான் அணியின் மொத்த ஓட்டங்கள் 12 ஆகக் காணப்பட்டது.

அவரின் விக்கட்டைத் தொடர்ந்து களம் புகுந்த ஆப்கான் அணியின் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்ஸாய் மற்றும் நூர் அலி சத்ரன் ஜோடி மெதுவாக நிதானமாக ஆடி 2ஆவது விக்கட்டுக்காக 32 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.  அதன் பின் 23 பந்துகளில் 20 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இருந்த  நூர் அலி சத்ரன் ரங்கன ஹேரத் வீசிய பந்தில் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார்.

அப்போது ஆப்கான் அணி தொடர்ந்து சிறிய இடைவெளியில் 2 விக்கட்டுகளை இழந்து 11 ஓவர்களில் 51 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்து ஓட்டங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர் நோக்கியது. இந்த நிலையில் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்ஸாய்  உடன் துடுப்பாட களம் புகுந்த சமியுல்லாஹ் சென்வாரி தலைவரோடு சேர்ந்து 5ஆவது விக்கட்டுக்காக மிக வேகமாக 33 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பின் சமியுல்லாஹ் சென்வாரி 14 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 31 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார். அதன் பின் வந்தவர்களும் சிறப்பாக விளையாட இறுதியாக ஆப்கான் அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்ஸாய்  மிகச் சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 62 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணியின் பந்து வீச்சில் திசர பெரேரா 4 ஓவர்கள் பந்து வீசி 33 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுக்களையும் சுழல் பந்து ஜாம்பவான் ரங்கன ஹேரத் 4 ஓவர்கள் பந்து வீசி 24 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுகளையும் கைபற்ற நுவன் குலசேகர மற்றும் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் ஆகியோர் தலா 1 விக்கட் வீதம் வீழ்த்தினர்.

154 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு ஆடுகளம் புகுந்த திலகரத்ன தில்ஷான் மற்றும் தினேஷ் சந்திமல் ஜோடி இலங்கை அணிக்கு குறிப்பிடும் அளவுக்கு நல்லதோர் ஆரம்பத்தைக் கொடுத்தார்கள். இவர்கள் இருவரும் முதல் விக்கட்டுக்காக 32 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தார்கள். இதன் பின் தினேஷ் சந்திமால் 17 பந்துகளில் 18 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பாய்ந்து அடிக்க முயன்ற போது பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின் விக்கட்டுக்கு வந்த பயிற்சி போட்டிகளில் பிரகாசித்த  லஹிறு திரிமன்ன 13 பந்துகளில் 6 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். அதன் பின் களம் இறங்கிய திசர பெரேரா 8 பந்துகளில் 12 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்க, அவரை தொடர்ந்து வந்த சாமர கபுகெதர 10 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துரதிஷ்ட வசமாக ஆட்டம் இழந்தார். இறுதியில் 29 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. அப்போது திலகரத்ன தில்ஷானோடு ஜோடி சேர்ந்த தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ்  போட்டியின் போக்கை  இலங்கை அணியின் பக்கம் மாற்றி அமைத்தனர். இறுதியில் 7 பந்துகள் மீதமிருக்க 6 விக்கட்டுகளால் இலங்கை அணி வெற்றி பெற்றது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களம் நுழைந்த தில்ஷான் மிக சிறப்பாக விளையாடி 83 நிமிடங்கள் களத்தில் துடுப்பாடி 56 பந்துகளில் 8 பவுண்டரிகள்   மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 83 ஓட்டங்களைப் பெற்றார். தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் மறுமுனையில் ஆட்டம் இழக்காமல் 10 பந்துகளில் 3  பவுண்டரிகள்  1 சிக்ஸர் அடங்கலாக 21 ஓட்டங்களைப் பெற்று 6ஆவது டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணிக்கான முதலாவது வெற்றிக்கு வழி வகுத்தார். ஆப்கான் அணியின் பந்து வீச்சில் முகமத் நபி மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 1 விக்கட் வீதம் தம்மிடையே பரிமாறினார்கள்.

போட்டியின் ஆட்டநாயகனாக சிறப்பாக விளையாடி 83 ஓட்டங்களைக் குவித்த திலகரத்ன தில்ஷான் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை அணிக்கான அடுத்த போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இரவு 7.30 மணிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியோடு பெங்களூர் சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.  இதேவேளை இன்று நடைபெறும் 2 போட்டிகளில் 3 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் 2அவது போட்டியில் இங்கிலாந்து அணி தென் ஆபிரிக்கா அணியை எதிர் கொள்கிறது.