வெபர் கிண்ண கூடைப்பந்து தொடரின் சம்பியனாக மொரட்டுவ அணி

199

மட்டக்களப்பு மைக்கல்மென் விளையாட்டுக் கழகம் அருட்தந்தை வெபர் அடிகளார் மட்டக்களப்பின் விளையாட்டுத்துறைக்கு ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் பொருட்டு ஐம்பதாவது ஆண்டாக ஒழுங்கு செய்த வெபர் கிண்ண கூடைப்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் மொரட்டுவ அணி, விமானப்படை விளையாட்டுக் கழகத்தை 70 – 44 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இறுதிப் போட்டி

புனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்து மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற இறுதிப் போட்டியில் விமானப்படை விளையாட்டுக் கழகம் நீர்கொழும்பு மாகிஸ் அணியையும், மொரட்டுவ அணி கொழும்பு ஓல்ட் பென்ஸ் அணியையும் தோற்கடித்து களம் கண்டிருந்தன.

வெபர் கிண்ண அரையிறுதிக்கு விமானப்படை, ஓல்ட் பென்ஸ், மாகிஸ், மொரட்டுவ அணிகள் தெரிவு

தீர்மானமிக்க இறுதிப் போட்டியின் புள்ளிகள் நுழைவாயிலை மொரட்டுவ அணியின் திலுக் 3 புள்ளிகளுடன் ஆரம்பித்து வைத்தார். ஆனால், விமானப்படை அணிக்கு முதல் புள்ளிகளை பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. மொரட்டுவ அணி 10 புள்ளிகளை பெற்றிருந்த போதே விமானப்படை அணி விதுன் மூலம் தமது முதல் புள்ளிகளைப் பெற்றனர். பின்னர், முதல் கால்பகுதியில் 4 புள்ளிகளை மட்டுமே விமானப்படை மொத்தமாக பெற்றது. இதேவேளை, மொரட்டுவ அணி 15 புள்ளிகளுடன் முதல் கால்பகுதியை கைப்பற்றியது.

போட்டியின் இரண்டாவது கால்பகுதியிலும் மந்தகதியிலான ஆட்டத்தையே விமானப்படை அணி வெளிப்படுத்தியது. அதனால் அவர்களால் 9 புள்ளிகளையே மூன்றாம் கால்பகுதியில் பெற முடிந்தது. ஆனால், இந்த கால்பகுதியில் 19 புள்ளிகளைப் பெற்ற மொரட்டுவ அணியினர் இரண்டாம் கால்பகுதியையும் கைப்பற்றினர். இதன்படி, ஆட்டத்தின் முதல் அரைப்பகுதியில் மொரட்டுவ அணியினர் 34-13 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை அடைந்தனர்.

முதல்  பாதி: விமானப்படை 13 – 34 மொரட்டுவ அணி

மூன்றாம் கால்பகுதியில் எதிரணியை விட விமானப்படை அணி, பாரிய புள்ளிகள் வித்தியாசத்தில் காணப்பட்டதால் அவர்களுக்கு ஆட்டத்தை தக்க வைத்துக் கொள்ள இந்த கால்பகுதியில் அதிக புள்ளிகளைப் பெற வேண்டிய தேவை இருந்தது. ஆனால், அவர்கள் 5 புள்ளிகளை மாத்திரமே எடுத்தனர். ஆனால், மூன்றாம் கால்பகுதியில் திலுக், சஞ்சன ஆகியோரின் அபாரத்தோடு மொரட்டுவ அணி 21 புள்ளிகள் எடுத்தது. இதனால், மூன்றாம் கால்பகுதி நிறைவிலும் 55-19 என்ற புள்ளிகள் கணக்கில் மொரட்டுவ அணி தமது முன்னிலையை இன்னும் அதிகரித்தது.

தொடர்ந்து, போட்டியின் இறுதிக் கால்பகுதியை வெனிட்டோ அந்தோனியின் திறமையான ஆட்டத்தினால் விமானப்படை அணி 23-15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கைப்பற்றிய போதிலும் இறுதிப் போட்டியில் வெற்றிபெற அது போதுமாக அமையவில்லை.

மறுமுனையில் இறுதிக் கால்பகுதியை தவறவிட்டிருந்தாலும் முன்னைய கால்பகுதிகளின் அபாரத்தோடு மொரட்டுவ அணி 70-44 என்ற புள்ளிகள் கணக்கில் விமானப்படையை வீழ்த்தியதோடு, 2018 ஆம் ஆண்டின் வெபர் கிண்ண சம்பியன்களாகவும் நாமம் சூடியது.

முழு நேரம்: விமானப்படை 44 – 70 மொரட்டுவ அணி

விருதுகள்

சிறந்த தடுப்பு (Defence) வீரர் – சனித டி மெல் (மொரட்டுவ அணி)

சிறந்த தாக்குதல் (Offence) வீரர் – O.U. அமரசேன (விமானப்படை அணி)

தொடரின் சிறந்த வீரர் – அசங்க சுவாரிஸ் (மொரட்டுவ அணி)

தொடரின் பெறுமதியான (Valuable) வீரர் – டிலுக் பெர்னாந்து (மொரட்டுவ அணி)

மூன்றாம் இடத்திற்கான போட்டி

வெபர் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இரண்டிலும் தோல்வியடைந்த நீர்கொழும்பு மாகிஸ் அணி, கொழும்பு ஓல்ட் பென்ஸ் அணி ஆகியவை வெபர் கிண்ணத் தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் மோதின.

“வடக்கின் கில்லாடி யார்?” தொடரின் காலிறுதியில் அச்செளு வளர்மதி மற்றும் யங்ஹென்றீசியன்ஸ்

போட்டியின் தொடக்கத்தில் இருந்து ஓல்ட் பென்ஸ் அணி ஆதிக்கம் செலுத்திய போதிலும், போட்டியின் முதல் அரைப்பகுதி 36-36 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலை அடைந்தது.

பின்னர், எஞ்சிய இரண்டு கால்பகுதிகளிலும் அபார ஆட்டத்தினை வெளிக்காட்டிய ஓல்ட் பென்ஸ் அணி இரண்டு கால்பகுதிகளையும் 16-19, 11-24 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியது. இந்த இரண்டு கால்பகுதிகளிலும் பெற்ற புள்ளிகளோடு ஓல்ட் பென்ஸ் அணியினர், மாகிஸ் அணியை 63-79 என போட்டியில் தோற்கடித்து வெபர் கிண்ணத் தொடரில் மூன்றாம் இடத்தினைப் பெற்ற அணியாக மாறினர்.

அரையிறுதிப் போட்டிகள்

முதல் அரையிறுதி – விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு மாகிஸ்

வெபர் கிண்ணத் தொடரில் லீக் போட்டிகளின் புள்ளிகள் பட்டியலில் குழு B இல் முதலிடம் பிடித்த விமானப்படை விளையாட்டுக் கழகமும், குழு A இல் இரண்டாம் இடம் பிடித்த நீர்கொழும்பு மாகிஸ் அணியும் வெபர் கிண்ணத்தின் முதல் அரையிறுதியில் மோதின.

மிகவும் அனுபவம் கொண்ட வீரர்களை தன்னகத்தே வைத்திருந்த விமானப்படை அணி போட்டியின் முதல் கால்பகுதியில் 28 புள்ளிகளை எடுத்தது. ஆனால், மாகிஸ் அணிக்கு 16 புள்ளிகளையே எடுக்க முடிந்தது.

இரண்டாம் கால்பகுதி முதல் கால்பகுதி போன்று வேகமானதாக அமையவில்லை. இந்த கால்பகுதியில் விமானப்படை அணி 13 புள்ளிகளையும், மாகிஸ் அணியினர் 12 புள்ளிகளையுமே பெற்றனர். இதன்படி அரையிறுதிப் போட்டியின் முதல் அரைப்பகுதியை விமானப்படை அணியே 41-28 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.

மூன்றாம் கால்பகுதியிலும் தமது ஆதிக்கத்தை தொடர்ந்த விமானப்படை 18:08 என இக்கால்பகுதியை தம்வசப்படுத்தியது. இதனால், 59:36 என்ற புள்ளிகள் கணக்கில் மூன்றாம் கால்பகுதி விமானப்படையின் முன்னிலையோடு மீண்டும் நிறைவுற்றது.

போட்டியின் இறுதிக் கால்பகுதியில் முன்னைய கால்பகுதிகள் போன்று அல்லாது பலம் குறைந்ததாக காணப்பட்ட விமானப்படையின் பின்களத்தை (Defence) தகர்த்து மாகிஸ் அணி புள்ளிகள் வேட்டையில் இறங்கி 31 புள்ளிகளை குவித்தது. எனினும், விமானப்படை அணியினர் 15 புள்ளிகளையே எடுத்தனர்.

மாகிஸ் அணி போட்டியின் இறுதிக் கால்பகுதியில் திறமையை வெளிப்படுத்தியிருந்த போதிலும், முன்னைய கால்பகுதிகளில் அவர்கள் செய்த தவறுகள் விமானப்படை அணியை போட்டியின் வெற்றியாளர்களாக மாற்ற காரணமாகியிருந்தது. இதன்படி, விமானப்படை அணி 74:67 என்ற புள்ளிகள் கணக்கில் நீர்கொழும்பு மாகிஸ் அணியை தோற்கடித்து வெபர் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் ஆடும் முதல் அணியாக மாறினர்.

இரண்டாவது அரையிறுதி – கொழும்பு ஓல்ட் பென்ஸ் எதிர் மொரட்டுவ அணி

வெபர் கிண்ண இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் குழு A அணிகளுக்கான லீக் போட்டிகளில் முதலிடம் பிடித்த ஓல்ட் பென்ஸ் அணியும், குழு B அணிகளில் இரண்டாம் இடம் பிடித்த மொரட்டுவ அணியும் மோதின.

வலைப்பந்தாட்ட உலகையே வென்ற யாழ். மங்கை தர்ஜினி சிவலிங்கம்

போட்டியின் முதல் கால்பகுதியை மொரட்டுவ அணி 17-16 எனக் கைப்பற்றியது. இரண்டாம் கால்பகுதியிலும் சிறப்பாக செயற்பட்ட மொரட்டுவ அணி இந்தக் கால்பகுதியையும் 13-11 என தமக்கு சொந்தமாக்கியது. இதன்படி போட்டியின் முதல் அரைப்பகுதி 30-27 என்ற புள்ளிகள் கணக்கில் மொரட்டுவ அணியின் முன்னிலையோடு நிறைவடைந்தது.

தொடர்ந்து போட்டியின் மூன்றாவது கால்பகுதியில் தமது தரப்பு பின்னடைவில் இருப்பதை உணர்ந்த ஓல்ட் பென்ஸ் அணி அசுர ஆட்டத்தினை வெளிக்காட்டி, இந்த கால்பகுதியில் 17 புள்ளிகளை எடுத்தனர். எனினும், மொரட்டுவ அணியினரால் 10 புள்ளிகளையே எடுக்க முடிந்தது. இதேநேரம், மூன்றாம் கால்பகுதி அபாரத்தோடு ஓல்ட் பென்ஸ் அணி ஆட்டத்திலும் 44-40 புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, ஆட்டத்தின் இறுதிக் கால்பகுதியில் மொரட்டுவ அணி தமது பலத்தை மீண்டும் வெளிக்காட்டி, இறுதிக் கால்பகுதியில் 19 புள்ளிகளை சேர்த்தனர். ஆனால், ஓல்ட் பென்ஸ் அணியினால் 11 புள்ளிகளையே எடுக்க முடிந்தது. இதன்படி, மொரட்டுவ அணி 59-53 என்ற புள்ளிகள் கணக்கில் ஆட்டத்தில் வெற்றி பெற்று வெபர் கிண்ண கூடைப்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஆடும் இரண்டாவது அணியாகவும் மாறினர்.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<