வெபர் கிண்ண அரையிறுதிக்கு விமானப்படை, ஓல்ட் பென்ஸ், மாகிஸ், மொரட்டுவ அணிகள் தெரிவு

157

மட்டக்களப்பு மைக்கல்மென் விளையாட்டுக் கழகம், அருட்தந்தை வெபர் அடிகளார் மட்டக்களப்பு மாவட்டத்தின் விளையாட்டுத்துறைக்கு ஆற்றிய சேவைகளை நினைவுகூறும் பொருட்டு ஒழுங்கு செய்து நடாத்திவரும் வெபர் கிண்ண கூடைப்பந்து தொடரின் ஐம்பதாவது ஆண்டு போட்டிகள் இரண்டாம் நாளாகவும் சனிக்கிழமை (22) நடைபெற்றுவருகிறது.

சனிக்கிழமைக்கான போட்டிகளோடு வெபர் கிண்ணத் தொடரின் குழு நிலை லீக் ஆட்டங்கள் அனைத்தும் நிறைவடைந்தது. லீக் போட்டிகள் அனைத்தும் புனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்து மைதானத்திலும், மியானி ஆண்கள் நகர கூடைப்பந்து மைதானத்திலும்  இடம்பெற்றிருந்தன.

மைக்கல்மென் அணியின் வெற்றியுடன் ஆரம்பித்த வெபர் கிண்ண கூடைப்பந்து தொடர்

புனித மைக்கல் கல்லூரியின் மைதானத்தில் குழு A அணிகளின் ஆட்டமாக அமைந்த போட்டியொன்றில் தொடரை நடாத்தும் மைக்கல்மென் விளையாட்டுக் கழகமும், நீர்கொழும்பு மாகிஸ் அணியும் பலப்பரீட்சை  நடாத்தின. போட்டியின் முதல் இரண்டு கால்பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்திய மாகிஸ் அணி முதல் இரண்டு கால்பகுதிகளையும் 16:15,19:15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கைப்பற்றியது. மூன்றாம் கால்பகுதி 17:17 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் முடிந்த போதிலும் போட்டியின் கால்பகுதியில் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய மாகிஸ் அணி அதனை 23:12 என பாரிய புள்ளிகள் வித்தியாசத்தில் தமதாக்கியது. இதன்படி, 59:75 என்ற பாரிய புள்ளிகள் வித்தியாசத்தில் மாகிஸ் அணி போட்டியில் வெற்றி பெற்றது.

புனித மைக்கல் கல்லூரியில் நடைபெற்ற குழு B அணிகளுக்கு இடையிலான போட்டி ஒன்றில் மட்டக்களப்பு லக்கி விளையாட்டுக் கழகமும், மொரட்டுவ அணியும் பங்கெடுத்தன. போட்டியின் முதல் அரைப்பகுதியை 41:33 எனக் கைப்பற்றிய மொரட்டுவ அணி இரண்டாம் அரைப்பகுதியையும் 36:25 எனக் கைப்பற்றி போட்டியின் வெற்றியாளர்களாக 58:77 என்ற புள்ளிகள் கணக்கில் மாறினர்.

இதேநேரம் மியானி ஆண்கள் நகர கூடைப்பந்து அரங்கில் இடம்பெற்ற போட்டியில் குழு A அணிகளுக்கான போட்டியில் புனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்து அணி கொழும்பு ஓல்ட் பென்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் கால்பகுதியில் மிகவும் அபாரமாக செயற்பட்ட ஓல்ட் பென்ஸ் அணி முதல் கால்பகுதியை  30:08 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கைப்பற்றியது. ஆட்டத்தின் இரண்டாம் கால்பகுதியை புனித மைக்கல் கல்லூரியின் வீரர்கள் 14:08 எனக் கைப்பற்றிய போதிலும் ஓல்ட் பென்ஸ் அணியினரே ஆட்டத்தில் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து போட்டியின் இரண்டு இறுதி கால்பகுதிகளிலும் அபாரம் காட்டிய ஓல்ட் பென்ஸ் அணி அவ்விரண்டு கால்பகுதிகளையும் 22:16, 24:22 எனக் கைப்பற்றி 84:60 என்ற புள்ளிகள் அடிப்படையில் போட்டியின் வெற்றியாளர்களாக மாறினர்.

பின்னர் தொடரில் தமது முதல் வெற்றியை எதிர்பார்த்த வண்ணம் பொலிஸ் விளையாட்டுக் கழகம், விமானப்படை அணியை குழு B இற்கான போட்டியொன்றில் எதிர்கொண்டது. இப்போட்டியும் மியானி ஆண்கள் நகர கூடைப்பந்து மைதானத்தில் இடம்பெற்றது. முதல் கால்பகுதி 16:16 என்ற புள்ளிகள் அடிப்படையில் சமநிலை அடைந்தது. பின்னர் போட்டியின் இறுதி மூன்று கால்பகுதிகளையும் 18:12, 16:15, 20:18 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றிய விமானப்படை அணியினர் போட்டியில் 61:70 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று வெபர் கிண்ணத்தில் தமது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தனர்.

ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் பிரகாசித்த ஹார்ட்லி, மகாஜனா வீரர்கள்

விமானப்படை அணியுடன் தோல்வியுற்ற பொலிஸ் அணி தமது அடுத்த போட்டியில் லக்கி விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்டது. குழு B அணிகளுக்கான மோதலாக இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் முதல்  கால்பகுதியில் லக்கி விளையாட்டுக் கழகம் 13:12 என முன்னிலை பெற்றது. போட்டியின் அடுத்த மூன்று கால்பகுதிகளிலும் தமது முன்னிலையை அதிகரிக்க முடியாத லக்கி அணி அம்மூன்று கால்பகுதிகளையும் 19:03, 12:09, 15:12 என்ற புள்ளிகளின் அடிப்படையில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்திடம் பறிகொடுத்து போட்டியிலும் 58:37 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. லக்கி விளையாட்டுக் கழகத்தை வீழ்த்திய பொலிஸ் அணி வெபர் கிண்ணத் தொடரில் தமது முதல் வெற்றியை பதிவு செய்தது.

பொலிஸ் அணியுடன் வெற்றி பெற்ற விமானப்படை அணி தமது அடுத்த போட்டியில் மொரட்டுவ அணியை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இந்த ஆட்டத்தில் முதல் கால்பகுதியை மொரட்டுவ அணி 16:10 எனக் கைப்பற்ற அதற்கு விமானப்படை அணி 19:08 என்ற புள்ளிகள் அடிப்படையில் இரண்டாம் கால்பகுதியில் கைப்பற்றி பதிலடி தந்தது. பின்னர் மூன்றாம் கால்பகுதியை 25:18 என மொரட்டுவ அணி கைப்பற்றி ஆட்டத்திலும் 47:50 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை அடைந்தது. எனினும், இறுதிக் கால்பகுதியில் தமது தடுப்புக்களை பலப்படுத்திய விமானப்படை அணி இறுதிக் கால்பகுதியை 18:13 என்ற புள்ளிகள் கணக்கில் தமக்கு சொந்தமாக்கி போட்டியிலும் 65:63 என்ற புள்ளிகள் கணக்கில் த்ரில்லர் வெற்றியை பதிவு செய்தது.

தொடரை நடாத்தும் மைக்கல்மென் அணி, தமது இறுதி லீக் போட்டியில் கொழும்பு ஓல்ட் பென்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் கால்பகுதியை மைக்கல்மென் அணியினர் 19:14 எனக் கைப்பற்றி உற்சாகத்துடன் ஆரம்பித்தனர். பின்னர், இரண்டாம் கால்பகுதியை 17:16 என ஒரு புள்ளியினாலேயே ஓல்ட்  பென்ஸ் அணியினால் கைப்பற்ற முடிந்தது. இதனால், ஆட்டத்தின் முதல் அரைப்பகுதியில் 35:31 என மைக்கல்மென் விளையாட்டுக் கழகமே முன்னிலையோடு காணப்பட்டது. ஆனால், ஆட்டத்தின் இறுதி இரண்டு கால்பகுதிகளிலும் திறமை காட்டிய ஓல்ட் பென்ஸ் அணி இரண்டு கால்பகுதிகளையும் 19:14, 21:14 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி போட்டியின் வெற்றியாளராக மாற மைக்கல்மென் விளையாட்டுக் கழகம் வெபர் கிண்ணத் தொடரை ஒரு வெற்றியுடன் முடித்துக் கொண்டது.

புனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்து அணி வெபர் கிண்ணத் தொடரில் ஆறுதல் வெற்றி ஒன்றினை எதிர்பார்த்த வண்ணம் குழு A இறுதி லீக் போட்டியில் நீர்கொழும்பு மாகிஸ் அணியுடன் மோதியது. எனினும் போட்டியில் முதல் அரைப்பகுதி 33:23 என்ற புள்ளிகள் கணக்கில் நீர்கொழும்பு மாகிஸ் அணியின் ஆதிக்கத்துடன் முடிந்தது. தொடர்ந்து போட்டியின் எஞ்சிய அரைப்பகுதியிலும் திறமையை வெளிப்படுத்திய மாகிஸ் அணி இந்த அரைப்பகுதியை 43:39 எனக் கைப்பற்றி ஆட்டத்தில் 76:62 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று, புனித மைக்கல் கல்லூரியின் ஆறுதல் வெற்றிக் கனவையும் கலைத்தது.

இந்திய மகளிர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஜெனிமாஹ் ரொட்ரிகஸ்

நடைபெற்ற லீக் போட்டிகளின் அடிப்படையில் குழு A சார்பில், மூன்று வெற்றிகளைப் பெற்றவாறு ஓல்ட் பென்ஸ் அணியும், இரண்டு வெற்றிகளுடன் மாகிஸ் அணியும் குழு B இல் மூன்று வெற்றிகளுடன் விமானப்படை அணியும், இரண்டு வெற்றிகளுடன் மொரட்டுவ அணியும் வெபர் கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன. இதேநேரம் மைக்கல்மென் விளையாட்டுக் கழகம், புனித மைக்கல் கல்லூரி அணி, பொலிஸ் விளையாட்டுக் கழகம், லக்கி விளையாட்டுக் கழகம் ஆகியவை தொடரிலிருந்து முதல் சுற்றுடன் வெளியேறுகின்றன.

வெபர் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெறுகின்றது.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<